அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Friday 1 November 2013

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!

முஹர்ரம் அரபு வருட கணிப்பீட்டின் முதல் மாதம்!

முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.

நபி மூஸா (அலை) அவர்களை பிர்ஃஅவ்னிடமிருந்து காப்பாற்றிய மாதம்!

அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியது முஹர்ரம் மாதத்தில்தான். இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்” (ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),

 முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!

முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாள் நோன்பு நோற்பது சுன்னத்தாகும் (நபிவழியாகும்). நபி (ஸல்) அவர்கள் இந்த நாளில் நோன்பு நோற்றார்கள் - யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றதால் அவர்களுக்கு மாறு செய்வதற்காக எதிர்வரும் வருடம் நான் உயிருடன் இருந்தால் 9 ஆம் நாளையும் சேர்த்து நோன்பு நோற்பேன் என்றார்கள்.

இதனால் முஹர்ரம் மாதத்தின் 9-10 ஆம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

ஆஷுரா நோன்பின் பின்னணி
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு சென்ற நேரம் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதைக் கண்டு இது என்ன நோன்பு என வினவினார்கள். அதற்கு அவர்கள் இது நல்ல நாள், இந்த நாளில்தான் பனூ இஸ்ராயீல்களை அவர்களின் பகைவ (ஃபிர்அவ்) னிடமிருந்து அல்லாஹ் பாதுகாத்தான், அந்த நாளில் மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களைவிட மூஸா (அலை) அவர்களை (மதிப்பதற்கு) நான் தகுதியுடையவன் என்று கூறி அந்த (முஹர்ரம் பத்தாம் நாள்) நோன்பை நோற்றார்கள், அந்த நோன்பை நோற்பதற்கு (மக்களையும்) ஏவினார்கள். (ஆதாரம் : புகாரி)

ஆஷூரா நோன்பைப் பற்றியுள்ள ஹதீஸ்கள்:
1. ஆஷூரா நோன்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

2. நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்று (மற்ற மக்களையும்) நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), 
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

3. ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

4. எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), 
ஆதாரம் : முஸ்லிம்)

முஹர்ரம் மாதத்தின் 9-10 ஆம் நாட்களில் நபியவர்கள் எதற்காக நோன்பு நோற்றார்கள் என்பதையும் நோன்பைத்தவிர வேறு எந்த விஷேச வணக்கங்களையும் செய்யவில்லை என்பதை அறிவீர்கள். நபியவர்களை பின்பற்றும் நாமும் அதைத்தான் செய்ய வேண்டும். அதை விட வேறு எதையாவது செய்து விட்டு இதுவும் சுன்னத்து அல்லது வணக்கம் என்று சொன்னால் அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதர் மீதும் இட்டுக்கட்டுவதாகும். இதற்கு பித்அத் என்று சொல்லப்படும்.

எந்த ஒரு வணக்கமும் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு 2 நிபந்தனைகள் அவசியமாகும்.
1. அல்லாஹ்வுக்காகவே மட்டும் என்ற எண்ணத்துடன் (இக்லாஸாக) செய்யவேண்டும்.
2. நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறைப் பிரகாரம் செய்யவேண்டும்.
இந்த இரண்டில் ஒன்று இல்லையென்றால் அந்த வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் புதிதாக (மார்க்கமாக) ஆரம்பிக்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 
நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

இன்று முஸ்லிம்களில் பலர் இந்த நாட்களில் பல தவறுகளைச் செய்கின்றார்கள். அதாவது குறிப்பிட்ட உணவுப் பண்டங்களை சமைப்பது, உடம்பில் காயமேற்படுத்திக்கொள்வது, மக்களை ஒன்று கூட்டி குறிப்பிட்ட சில வணக்கங்களை செய்வது, இன்னும் இது போன்ற எத்தனையோ செயல்களை செய்கின்றார்கள். இவைகள் அனைத்தும் பித்அத் என்னும் பாவமான செயலாகும். மேலே கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு மாற்றமானதுமாகும். இப்படிப்பட்ட வணக்கங்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளாதிருப்பது மட்டுமல்லாமல் நாளை மறுமையில் தண்டனையும் வழங்குவான்.
இவைகளை நபி (ஸல்) அவர்கள் செய்யவில்லை என்று தெரிந்த பின்பும் நாம் செய்தால் அல்லாஹ்விடத்தில் பெரும் குற்றவாளிகளாக கருதப்படுவோம்.

ஆகவே, முஹர்ரம் மாதத்தின் 9-10 ஆம் நாட்களில், நோன்பை மாத்திரம் விஷேச வணக்கமாக செய்யுங்கள். இதுதான் நபி வழியாகும்.

அல்லாஹ் நம் அனைவரையும் நபி வழி நடந்த நன்மக்களாக வாழ்ந்து மரணிக்கச் செய்வானாக.

0 comments: