அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Friday 11 April 2014

கத்தம் ஓதலாமா? -மௌலான சம்சுதீன் காசிமி



ஒருவர் மரணித்தவுடன் இருட்டுக் கத்தம் என ஆரம்பித்து மூன்று, ஏழு, முப்பது, நாற்பது, ஆண்டு என பட்டியல் போட்டு ஆலிம்கள் கத்தம் ஓதி வருகின்றனர்.
******************************************************************************************

மௌலவி K.R.M ஸஹ்லான் றப்பானீ  _ வாதம்_ "இஸ்லாத்தின் பார்வையில் கத்தம் ஓதுதல்"


M.C.M ஸஹ்றான் _  மறுப்பு _ " கத்தம் ஓதலாமா? ஸஹ்லான் றப்பானிக்கு மறுப்பு(சஞ்சிகை) "
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

முகம் குப்புற விழுந்து கிடப்பவன் நேர்வழி பெற்றவனா? அல்லது நேரான பாதையில் சீராக நடந்து செல்பவனா? (67:22)


ஒருவர் இறந்த பின் அவருக்காக குர்ஆன் ஓதி அதன் நன்மைகளைச் சேர்ப்பிக்கும் சமுதாய வழக்கத்திற்கு 'கத்தம்' என்று சொல்லப்படும். இந்நடைமுறை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் மரணித்து பல வருடங்களுக்குப் பின் கத்தம் ஓதும் கலாச்சாரம் முஸ்லிம்களிடம் தோன்றியது. உலமாக்களின் சுயநலமும் பொதுமக்களின் மார்க்க அறியாமையுமே கத்தம் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாகும். ஒருவர் மரணித்தவுடன் இருட்டுக் கத்தம் என ஆரம்பித்து மூன்று, ஏழு, முப்பது, நாற்பது, ஆண்டு என பட்டியல் போட்டு ஆலிம்கள் கத்தம் ஓதி வருகின்றனர்.

வல்ல அல்லாஹ்வின் பேரருளால் தவ்ஹீத் பிரச்சாரம் பட்டிதொட்டியெல்லாம் பரவ ஆரம்பித்தவுடன் மக்கள் ஓரளவு விழிப்புணர்வு பெற்று கத்தம் ஓதுவது இப்போது வெகுவாகக் குறைந்துள்ளமை யாவரும் அறிந்ததே! அல்ஹம்துலில்லாஹ்! கொஞ்சம் கொஞ்சமாக செத்து மடிந்து கொண்டிருக்கும் மார்க்க அநாச்சாரங்களை எப்பாடுபட்டாவது தூக்கி நிறுத்தவேண்டுமென சிலர் பிரயத்தனம் எடுக்கின்றனர். அவ்வாறானவர்களில் காத்தான்குடியைச் சேர்ந்த K.R.M ஸஹ்லான் றப்பானீ என்பவரும் ஒருவராவார். கத்தம் பற்றி இவர் எழுதிய 'இஸ்லாத்தின் பார்வையில் கத்தம் ஓதுதல்' என்ற ஆக்கம் எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அந்த ஆக்கத்தில்; கத்தத்திற்கு அவர் முன்வைக்கும் ஒவ்வொரு வாதங்களையும் எடுத்து வைத்து அவற்றிற்கான பதிலை வழங்குகிறோம். முன்பொரு காலத்தில் கத்தம் பாத்திஹா ஓதும் ஆலிம்களிடம் யாராவது போய் 'இதற்கு ஆதாரம் உண்டா?' எனக் கேட்டால் 'நமது மூதாதையர்கள் கத்தம் ஓதியுள்ளார்களே அது போதாதா உனக்கு? அதுதான் ஆதாரம்' எனக் கூறி கேள்வி கேட்பவரை இந்த ஆலிம்கள் மடக்கி வந்தனர். இப்போதெல்லாம் 'மூதாதையர், முன்னோர் வாதங்கள்' மக்களிடம் அவ்வளவாக எடுபடுவதில்லை என்பதை இவர்கள் நன்கறிந்து கொண்டதால் கத்தத்திற்கு ஹதீஸ்களை ஆதாரம் காட்ட முன்வந்துள்ளார்கள்! கத்தம், பாத்திஹா போன்றவற்றிற்கு ஹதீஸ்களில் எந்த சான்றுகளும் இல்லாததால் பொய்யான செய்திகளையும் போலியான தகவல்களையும் கலந்து 'ஹதீஸ்கள்' எனக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த வரிசையிலேயே மு.சு.ஆ ஸஹ்லான் றப்பானீயை நாம் காணுகின்றோம்.

ஸஹ்லானின் வாதம்01: 'உங்களில் ஒருவர் மரணித்தால் அவரை தாமதிக்காமல் கப்றுக்குகொண்டு செல்லுங்கள். அவரது தலைப்பக்கமாக சூறதுல் பாதிஹா ஓதுங்கள். அவரது கால் பக்கமாக சூறதுல் பகராவின் கடைசிப்பகுதியை ஓதுங்கள்' என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம்01 தப்றானீ,ஹதீஸ் இல 13613 ஆதாரம்02 பைஹகீ, ஹதீஸ் இல -9294

நமது பதில்: இது ஆதாரபூர்வமான செய்தி அல்ல. இதில் இடம் பெறும் அய்யூப் பின் நஹீக் என்பவர் பற்றி ஹதீஸ்கலை வல்லுனர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இமாம் அபீஹாதிம் (ரஹ்) அவர்கள் 'இவர் ஹதீஸில் பலவீனமானவர்' என்றும் இமாம் அபூஸுர்ஆ அவர்கள் 'நான், அய்யூப் பின் நஹீக்கிடமிருந்து எச்செய்தியையும் அறிவிக்கமாட்டேன். காரணம் அவர் ஹதீஸ் (கலையில்) வெறுக்கப்பட்டவர்' என்றும் கூறியுள்ளனர் (பார்க்க:அல்ஜரஹ் வத்தஃதீல் 2ம் பாகம் 259ம் பக்கம்) அதே போன்று இமாம் நூருத்தீன் அல்ஹைதமீ (ரஹ்) அவர்களும் 'அய்யூப் பின் நஹீக் (ஹதீஸ்கலை அறிஞர்களால்) கைவிடப்பட்டவர், ஹதீஸ்கலை வல்லுனர்கள் இவரை பலவீனப்படுத்தியுள்ளனர்' எனக் கூறியுள்ளார்கள். (பார்க்க:மஜ்மஉஸ் ஸவாயித் 2ம் பாகம் 407ம் பக்கம்) மேலும் இமாம் தஹபீ (ரஹ்) அவர்கள் 'இவரை ஹதீஸ்களை அறிஞர்கள் அனைவரும் கைவிட்டுவிட்டனர்' என தனது நூலான 'அல்முஃனீ பிழ் ழுஅபாஉ 01ம் பாகம் 95ம் பக்கத்தில் கூறுகின்றார்கள். இமாம் அல்அஸ்தி (ரஹ்) அவர்களும் 'இவரை அறிஞர்கள் கைவிட்டு விட்டனர்' என விமர்சித்ததை இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி தனது லிஸானுல் மீஸான் எனும் நூலில் 01ம் பாகம் 490ம் பக்கத்தில் எடுத்துக்காட்டுகின்றார். இது ஒரு புறமிருக்க ஸஹ்லான் றப்பானீ முன்வைத்த இந்தச் செய்தியில் மற்றுமொரு குறைபாடும் உண்டு. இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் 'யஹ்யா பின் அப்துல்லாஹ்' என்பவர் 'பலவீனமானவர்' என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் விமர்சித்துள்ளார்கள். (பார்க்க: லிஸான்1517) பொதுவாக கத்தம், பாத்திஹா, கந்தூரி, மீலாது, மௌலீது போன்ற அநாச்சாரங்களை செய்யும் ஆலிம்கள் ஹதீஸ்கலையை முறையாகக் கற்பதில்லை. கத்தம் ஓதுவதற்கு K.R.M ஸஹ்லான் றப்பானீ முன்வைத்த முதல் ஆதாரத்தின் நிலையே இதுவாகும். இதிலிருந்தே இவரின் ஹதீஸ்கலை ஞானம் எமக்குப் புரிந்து விடுகின்றது. ஒரு ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கும் போது அது நம்பகமான ஹதீஸா? அல்லது பலவீனமான செய்தியா? யாராவது இதனை தகுந்த காரணங்கள் கூறி விமர்சித்துள்ளார்களா? என கொஞ்சம் ஆய்வு செய்தால் என்ன? ஆனால் ஸஹ்லான் றப்பானீ போன்றோர் ஹதீஸ்கலை ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. காரணம் மார்க்க சட்டங்களை ஆய்வு செய்ய முற்பட்டால் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் பின்பற்ற வேண்டிய நிலை வரும். அப்போது பலவீனமான செய்திகளாலும் பொய்யான தகவல்களாலும் தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும் கத்தம், பாத்திஹா, கந்தூரி, மீலாது மௌலூது போன்ற அநாச்சாரங்கள் இருந்த இடம் தெரியாமல் மங்கி மறைந்து விடும். அதனால் இவர்களின் வருமானம் பாதிக்கப்படும். நாம் சொல்வது மிகைப்படுத்தல் அல்ல. கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை. இல்லாவிட்டால் இவ்வளவு குறைபாடுகள் உள்ள செய்தியை ஒரு ஆலிம் முன்வைப்பாரா?

ஸஹ்லானின் வாதம்02: உங்களில் மரணித்தவர்கள் மீது 'யாஸீன்' ஓதுங்கள் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம்- அபூதாவூத், ஹதீஸ் இல 3123

நமது பதில்:

இதுவும் நம்பகமான ஹதீஸ் அல்ல. ஒரு ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கும் போது ஹதீஸிற்கான இலக்கத்தை குறிப்பிடுவதால் மட்டும் அந்த ஹதீஸ் நம்பகமான ஹதீஸாக மாறிவிடமாட்டாது என்பதை ஸஹ்லான் றப்பானீ கவனத்திற் கொள்ள வேண்டும். இவர் எடுத்துக்காட்டும் செய்தியில் மூன்று குறைபாடுகள் உள்ளன. இச்செய்தியை அறிவிக்கும் அபூஉத்மான் என்பவர் இனந்தெரியாத நபர் ஆவார். இவரை இமாம் இப்னுல் மதீனீ (ரஹ்) அவர்கள் 'மர்ம மனிதன்' என விமர்சித்ததை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தனது 'தஹ்தீப்' எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள். (பார்க்க: தஹ்தீப் 12ம் பாகம் 182ம் பக்கம்) இது முதல் குறையாகும். அபூஉத்மான் என்ற மர்ம மனிதன் தனது தந்தையிடமிருந்து இச்செய்தியை செவியுற்றதாகக் கூறுகிறார். இவரது தந்தையைப் பொருத்தமட்டில் அவர் எப்போது பிறந்தார்? எப்போது ஹதீஸை அறிவித்தார்? என்ற எந்த விபரமும் வரலாற்று நூற்களில் பதிவாகவில்லை. மகனது நிலையே மர்மமாக இருக்கும் போது வாப்பாவின் நிலையை யார் துப்புத்துலக்குவது? இது இரண்டாவது குறையாகும். இதுபோக இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசையும் குழம்பிப் போயுள்ளது. இது மூன்றாவது குறைபாடாகும். இவ்வளவு குறைபாடுகள் உள்ள ஒரு செய்தியை ஸஹீஹான ஹதீஸ் என்று யாராவது சொல்வார்களா? கத்தம் ஓதுவதற்கு ஹஸ்ரத் ஸஹ்லான் காட்டிய இரண்டாவது ஆதாரமும் போலியானது.

ஸஹ்லானின் வாதம்03: உங்களில் மரணித்தவர்கள் மீது 'யாஸீன்' ஓதுங்கள் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம்- முஸ்னத் அஹ்மத், ஹதீஸ் இல 19915

நமது பதில்:

இது ஒன்றும் புதிய ஆதாரமல்ல. இரண்டாவதாக இவர் எடுத்துக்காட்டிய செய்தியை புதிய ஆதாரம் போன்று மூன்றாவதாக முன் வைத்து படம் காட்டுகின்றார். அதனால் தான் அபூதாவூதிலும், முஸ்னத் அஹ்மதிலும் வரும் ஒரே செய்தியை இரு வெவ்வேறு செய்திகள் போன்று காட்டி மக்களை முட்டாள்களாக்குகின்றார். இவரது ஆக்கத்தைப் படிக்கும் ஆதரவாளர்கள் 'நமது ஹஸ்ரத் கத்தத்திற்கு அடுக்கடுக்காக ஆதாரங்கள் கொடுத்துள்ளார்' என புளகாங்கிதம் அடைவார்கள் எனும் நப்பாசையே ஸஹ்லானின் இந்த மோசடிக்கு அடிப்படைக் காரணமாகும். 'மரணித்தவர்கள் மீது யாஸீன் ஓதுங்கள்' என்ற பலவீனமான தகவல் ஹதீஸ் நூற்களில் மொத்தமாக இருபத்தி மூன்று இடங்களில் இடம்பெறுகின்றது. இதில் ஸஹ்லான் றப்பானிக்கு அபூதாவூதும் முஸ்னத் அஹ்மதும் தான் தெரிந்திருக்கின்றது! நல்ல வேளை இவருக்கு மீதி இருபத்தியொரு இடங்களும் தெரியவில்லை! தெரிந்திருந்தால் பலவீனமான இந்த ஒரே ஹதீஸை இருபத்தி மூன்று இடங்களில் போட்டு பல பக்கங்களை வீணடித்திருப்பார்! கத்தம், பாத்திஹாவுக்கு ஸஹ்லான் காட்டும் இந்த ஆதாரம் மோசடியானதாகும்.

ஸஹ்லானின் வாதம்04:

யார் கப்றுகளுக்குச்சென்று 'குல்ஹுவல்லாஹு அஹத்' சூராவை 11 தடவை ஓதி அதன் நன்மையை மரணித்தவர்களுக்கு வழங்கினாரோ அவருக்கு அந்த மரணித்தவர்களின் எண்ணிக்கைக்கு நன்மை கிடைக்கும். என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம் 01(துஹ்பதுல் அஹ்வதீ ஷறஹ் ஸுனன் திர்மிதீ, பக்கம் 288,289)ஆதாரம்02- உம்ததுல் காரீ, பாகம்02, பக்கம்598

நமது பதில்:

இது நபி (ஸல்) அவர்கள் மீது கயவர்கள் இட்டுக்கட்டிய பொய்யாகும். இச்செய்தியில் 'தாவூத் பின் சுலைமான்' என்ற பொய்யர் இடம்பெறுகின்றார். இவரை இமாம் யஹ்யா பின் மயீன் (ரஹ்) அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்கள் (பார்க்க: மீஸானுல் இஃதிதால் 04ம் பாகம் 04ம் பக்கம்) இந்தப் பொய்யருக்கு ஒரு அறிஞர் கூட நற்சான்று வழங்கவில்லை. இட்டுக்கட்டப்பட்ட இச்செய்தி, எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இடம் பெறவுமில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும். ஸஹ்லான் றப்பானீ மேற்கோள் காட்டும் இரு நூற்களும் ஹதீஸ் கிரந்தங்கள் அல்ல. துஹ்பதுல் அஹ்வதீ என்பது திர்மிதீ என்ற ஹதீஸ் நூலுக்கான விளக்கவுரை நூலாகும். உம்ததுல் காரீ என்பது புஹாரிக்கான விளக்கவுரை நூலாகும். விளக்கவுரை நூற்களில் பெரும்பாலும் மனிதக் கருத்துக்கள் ஊகங்கள், போலித்தகவல்கள் எப்போதும் மலிந்து காணப்படும். விதி விலக்காக சில விளக்கவுரை நூற்களைத் தவிர. ஒருவர் தமது வாதத்திற்குச் சான்றாக ஹதீஸ்களை முன்வைக்கும் போது அடிப்படை நூற்களிலிருந்தே முன்வைக்க வேண்டும். இந்தச் சாதரண அடிப்படை கூடத் தெரியாமல் இவர் ஆக்கம் எழுதுகின்றார்! மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அதன் நன்மைகளைச் சேர்ப்பிப்பது இஸ்லாத்தில் இருந்திருந்தால் விரிவுரை நூற்களுக்கெல்லாம் இவர் செல்ல வேண்டியதில்லை. கத்தத்திற்கான ஆதாரம் அடுக்கடுக்காக அடிப்படை கிரந்தங்களிலேயே இடம் பெற்றிருக்கும். இஸ்லாத்தில் இல்லாத ஒரு சடங்கை நிரூபிக்க இவர் படும் பாட்டை என்னவென்பது? கத்தம், பாத்திஹாவுக்கு ஸஹ்லான் காட்டும் இந்த ஆதாரமும் போலியானதாகும்.

ஸஹ்லானின் வாதம்05: யாராவது கப்றுகளுக்குச்சென்று சூறதுல் பாதிஹாவையும் 'குல் ஹுவல்லாஹு அஹத்' சூறாவையும் அல்ஹாகுமுத்தகாதுர் சூறாவையும் ஓதி அதன் பிறகு இறைவா உனது கலாமிலிருந்து நான் இப்போது ஓதிய சூறாக்களின் நன்மையை முஃமினான கப்றுவாசிகளுக்கு சேர்த்துவிட்டேன் என்று கூறினால் அவர்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யக்கூடியவர்களாக ஆகிவிடுவார்கள். என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம்- துஹ்பதுல் அஹ்வதீ ஷறஹ் ஸுனன் திர்மிதீ, பக்கம்288,289

நமது பதில்: கப்றுகளுக்குச்சென்று சூறதுல் பாத்திஹா ஓதும் செய்தி நபி (ஸல்) அவர்களின் பெயரால் சொல்லப்படும் பொய்ச் செய்தியாகும். இச்செய்திக்கு அறிவிப்பாளர் வரிசை இல்லை. நமது றப்பானீ சொல்வது போன்று துஹ்பதுல் அஹ்வதீயில் இச்செய்தி மட்டும் பதிவாகவில்லை. இச்செய்தி எந்த மூல நூலில் இடம் பெற்றிருக்கின்றது என்ற தகவலும் சேர்த்தே பதிவாகியுள்ளது. ஸஹ்லான் றப்பானீ மூல நூலைச் சொல்லாமல் மொட்டையாக செய்தியை மட்டும் கூறுவது ஏன்? இங்குதான் ஸஹ்லானின் திருகுதாளம் வெளிப்படுகின்றது. இவர் குறிப்பிடும் செய்தி இமாம் அபுல்காஸிம் சஃத் (ரஹ்) அவர்களால் எழுதப்பட்ட 'பவாயித்' என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இந்நூல் தவறான செய்திகளை சமுதாய மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக இமாமவர்களால் எழுதப்பட்ட நூலாகும். தவறான ஹதீஸ்களை அடையாளம் காட்டுவதற்காக எழுதப்பட்ட இந்தப் புத்தகத்திலிருந்து, கத்தம் ஓத ஆதாரம் காட்டும் K.R.M ஸஹ்லான் கவனமாக நூலின் பெயரை மறைத்து மோசடி செய்துள்ளார். கத்தம் ஓதுவதே ஒரு மோசடி! மோசடியைச் செய்யும் போது அதில் ஒரு மோசடி!! கத்தம், பாத்திஹாவுக்கு ஸஹ்லான் காட்டும் இந்த ஆதாரமும் போலியானதாகும்.

ஸஹ்லானின் வாதம்06: யாராயினும் கப்றுகளுக்குச்சென்று 'யாஸீன் சூராவை ஓதினால் அந்நாளில் அல்லாஹ் அந்த கப்றுடையவர்களின் வேதனையை இலேசாக்குவான், அத்துடன் அவருக்கு அந்த மரணித்தவர்களின் எண்ணிக்கைக்கு நன்மை கிடைக்கும்' என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்01 துஹ்பதுல் அஹ்வதீ ஷறஹ் ஸுனன் திர்மிதீ, பக்கம்288,289

ஆதாரம்02-உம்ததுல் காரீ பாகம்-02, பக்கம்598

ஆதாரம்03- அல்பஹ்றுர்றாயிக் பாகம்-02, பக்கம்343

நமது பதில்:

ஹதீஸ் இடம் பெறும் மூல நூலைக் குறிப்பிடாமல் விளக்கவுரை நூற்களைக் கூறி தனது அறியாமையை ஸஹ்லான் வெளிக்கெணர்ந்துள்ளார். இவர் குறிப்பிடும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும். இதை 'அபூஉபைதா' என்பவரும் 'அய்யூப் பின் முத்ரிக்' மற்றும் 'அஹ்மத் பின் யஸீத்' ஆகிய மூவரும் இட்டுக்கட்டியுள்ளனர். இம்மூவரைக் குறித்தும் ஹதீஸ்களை வல்லுனர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். அய்யூப் பின் முத்ரிக் என்பவரைப் பொருத்தமட்டில் இவர் டமஸ்கஸ் நகரில் வாழ்ந்த ஒரு பொய்யர் ஆகும். மக்ஹூல் என்ற அறிஞர் அறிவித்ததாக போலியான ஒரு ஏட்டை வைத்துக் கொண்டு இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்து வந்தவர். பிரபல ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் யஹ்யா பின் மயீன் (ரஹ்) அவர்கள் இவரைக் குறித்து 'அவர் ஒரு பொருட்டே அல்ல' என்று விமர்சித்துள்ளார்கள். பிரிதொரு சந்தர்ப்பத்தில் 'அவர் ஒரு பொய்யர்' எனவும் கூறியுள்ளார்கள். (பார்க்க: அல்மஜ்ரூஹீன் 01ம் பாகம் 345ம் பக்கம்) அஹ்மத் பின் யஸீத் என்பவரை இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் 'இனந்தெரியாதவர்' எனவிமர்சித்துள்ளார்கள் (பார்க்க:லிஸானுல்மீஸான்-990) மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதி கத்தம் கொடுக்கும் வியாபாரத்திற்கு ஒரு ஆதாரமும் கிடைக்காததால் ஸஹ்லான் றப்பானீ பொய்யர்களின் செய்தியைக் கொண்டு வந்து ஆதாரம் காட்டுகின்றார்! இது எவ்வளவு அயோக்கியத்தனம்? ஹதீஸ்கலை பற்றி ஓரளவு அறிவுள்ளவர் கூட ஏற்க மறுக்கும் குருட்டு செய்திகளைக் கொண்டு வந்து ஆக்கம் எழுதுவதாயின் இவரின் நெஞ்சுரம் தான் என்ன? அல்லாஹ்வின் மீது அச்சம் இருந்திருந்தால் இப்படிச் செய்திருப்பாரா? கத்தம், பாத்திஹாவுக்கு ஸஹ்லான் காட்டும் இந்த ஆதாரமும் போலியானதாகும்.

ஸஹ்லானின் வாதம்07: யார் தனது தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ கப்றுக்குச்சென்று தரிசித்து அங்கு யாஸீன் ஓதுவாராயின் அவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு- அபூபக்ர் ஸித்தீக்(றழி) ஆதாரம்01- உம்ததுல் காரீ பாகம்-02,பக்கம்598 ஆதாரம்02- ஜாமிஉஸ்ஸகீர்,பாகம்02,பக்கம்605

நமது பதில்:

இதுவும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இச்செய்தியை நபி (ஸல்) சொன்னதாக இட்டுக்கட்டியவர் 'அம்ரு பின் ஸியாத்' என்பவர் ஆவார். இமாம் இப்னு அதீ (ரஹ்) அவர்கள் ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் வாழ்க்கை வரலாற்றை 'அல்காமில்' என்ற பெயரில் தனியொரு நூலாகத் தொகுத்துள்ளார்கள். மரணித்தவர்களின் பெயரில் குர்ஆன் ஓதி கத்தம் கொடுக்க நமது றப்பானீ முன்வைக்கும் இந்த ஹதீஸை இமாம் இப்னு அதீ (ரஹ்) அவர்கள் தனது நூலில் பதிவு செய்து விட்டு பின்வருமாறு கூறுகின்றார்கள். 'இந்த அறிவிப்பாளர் வரிசையில் வரும் இந்த ஹதீஸ் பொய்யானதும் எந்த அடிப்படையும் இல்லாததுமாகும்' (பார்க்க: அல்காமில். 06ம் பாகம் 164ம் பக்கம்) இதுபோக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அடையாளம் காட்ட இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்களால் எழுதப்பட்ட 'அல்மவ்லூஆத்' என்ற நூலில் 03ம் பாகம் 239ம் பக்கத்தில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. அதே போன்று பொய் ஹதீஸ்களை அடையாளம் காட்ட இமாம் ஷவ்கானீ (ரஹ்) அவர்களால் எழுதப்பட்ட 'அல்பவாயிதுல் மஜ்மூஆ' என்ற நூலில் 271ம் பக்கத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. கத்தம், பாத்திஹாவுக்கு ஸஹ்லான் காட்டும் இந்த ஆதாரமும் போலியானதாகும்.

ஸஹ்லானின் வாதம்08: அன்ஸாரி ஸஹாபாக்களில் ஒருவர் மரணித்தால் அவரின் கப்றுக்கு சென்று அவர்கள் எல்லோரும் பலவாறாகப்பிரிந்து அவ்விடத்தில் குர்ஆன் ஓதுவார்கள் ஆதாரம்01- அல்கிறாஅது இன்தல் குபூர், பாகம் 01,பக்கம் 89 ஆதாரம்02- மிர்காத், பாகம் 04,பக்கம் 198

நமது பதில்:

இதுவும் போலியான செய்தியாகும். இச்செய்தியில் முஜாலித் என்ற அறிவிப்பாளர் இடம்பெறுகின்றார். இவரைப் பற்றி அறிஞர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் முஜாலிதை பலவீனப்படுத்தியதாக இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். இமாம் இப்னு ஹிப்பான் 'முஜாலிதை ஆதாரமாக ஏற்கக் கூடாது' எனக் கூறுகின்றார். (பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப் 10ம் பாகம் 41ம் பக்கம்) இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதி அதன் நன்மைகளைச் சேர்ப்பிக்கும் அநாச்சாரத்திற்கு நம்பகமான எந்த ஆதாரங்களும் கிடைக்காததால் ஸஹ்லான் றப்பானீ போன்றோர் பொய் செய்திகளையும் போலித்தகவல்களையும் ஆதாரங்களாகக் காட்டி அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். கத்தம், பாத்திஹாவுக்கு ஸஹ்லான் காட்டும் இந்த ஆதாரமும் போலியானதாகும்.

ஸஹ்லானின் வாதம்09: அன்ஸாரி ஸஹாபாக்கள் மையித்திடத்தில் சூறதுல் பகறாவை ஓதுவதை முஸ்தஹப்பாக கருதினார்கள். ஆதாரம்01- தல்கீஸுல் கபீர், பாகம்-05, பக்கம்-113 ஆதாரம்02-றத்துல் முக்தார், பாகம்-02,பக்கம்-207

நமது பதில்:

இது அன்சாரிகள் மீது சொல்லப்படும் கட்டுக்கதையாகும். வரலாற்றில் இக் கதையை ஷஅபீ என்பவர் கூறி வந்தார். ஷஅபீ என்பவரின் சொந்தக் கூற்றெல்லாம் மார்க்கமாகாது. இஸ்லாத்தில் ஒரு காரியத்தை செய்வதாயின் அது குர்ஆனில் அல்லது ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாதவற்றை மார்க்கமென்று யார் சொன்னாலும் அவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. தல்கீஸுல் கபீர், றத்துல் முக்தார் போன்ற நூற்களில் (இவ்விரண்டும் ஹதீஸ் தொகுப்பு நூற்கள் அல்ல என்பது தனி விஷயமாகும்) அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் வந்தாலும் அதை ஏற்க வேண்டுமென்ற எந்த நிர்ப்பந்தமும் யாருக்கும் கிடையாது. ஸஹ்லான் றப்பானீ தனது 'கத்தநடவடிக்கைக்காக' நபித்தோழர்களையும் பலிக்கடாவாக்குவது கண்டிக்கத்தக்கது. இறந்தவர்களுக்கு கத்தம் ஓதலாம் என ஸஹ்லான் காட்டும் இந்த ஆதாரமும் போலியானதாகும்.

ஸஹ்லானின் வாதம்10: அன்ஸாரி ஸஹாபாக்களின் வழமை மையித்தை அடக்கம்செய்வதற்காக சுமந்துசெல்லும் போதே சூரதுல் பகறாவை ஓதிக்காண்டு செல்வதாக இருந்தது. ஆதாரம்- கிதாபுல் குபூர், அத்தத்கிறா,பக்கம்-111

நமது பதில்:

இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் அல்ல. அதைவிடவும் மோசமான நிலையில் உள்ள ஒரு தகவலாகும். ஊர், பெயர் தெரியாத ஒருவரின் சொந்தக் கருத்தைத்தான் ஸஹ்லான் ஹதீஸ் போன்று முன்வைத்துள்ளார். யாரோ ஒருவரின் சொந்தக் கருத்தை கராயிதீ என்பவர் தனது நூலில் பதிந்துள்ளார். அதை றப்பானீ மேற்கோள்காட்டுகின்றார். மனிதர்களின் சொந்தக் கருத்துக்கள் மார்க்கமாகாது! இன்னும் சொல்லப்போனால் மையித்தை அடக்கம்செய்வதற்காக சுமந்துசெல்லும் எந்தக் கப்ரு வணங்கியும் சூரதுல் பகறாவை ஓதுவதில்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லாத கத்தம் என்ற அநாச்சாரத்திற்கு ஸஹ்லான் காட்டும் இந்த ஆதாரமும் போலியானதாகும்.

ஸஹ்லானின் வாதம்11: என்தந்தை எனக்குச் சொன்னார்கள் 'நான் மரணித்து என்னை கப்றில் வைத்தால் 'பிஸ்மில்லாஹ் வஅலா மில்லதி ரஸூலில்லாஹி' என்று சொல்லி மண்ணை மூடிவிட்டு எனது தலைப்பக்கத்தில் சூரதுல் பகறாவின் ஆரம்பத்தையும் இறுதியையும் ஓதுங்கள் இதை நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்' என்று சொன்னார்கள். ஆதாரம்- தப்றானீ, ஹதீஸ் இல-491,அறிவிப்பு அப்துர்றஹ்மான் இப்னு அலா (றழி)

நமது பதில்:

இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூஉஸாமா என்பவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார். அவர் பற்றி எந்தக் குறிப்பும் அறிவிப்பாளர் சுயவிமர்சன நூற்களில் இல்லை. மர்ம மனிதர்களால் அறிவிக்கப்படும் செய்திகளை எக்காலத்திலும் அறிஞர்கள் கவனத்திற் கொள்வதில்லை. ஹதீஸ்கலை பற்றி அரிச்சுவடி கூடத் தெரிய ஸஹ்லான் றப்பானி கத்தத்திற்கு எடுத்து வைக்கும் இந்த ஆதாரமும் போலியானதாகும்.

ஸஹ்லானின் வாதம்12: அஹ்மத் இப்னு ஹன்பல் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் 'நீங்கள் கப்றுகளுக்குச்சென்றால் ஆயதுல் குர்ஸீயும் மூன்று தடவை 'குல் {ஹவல்லா{ஹ அஹத்' சூராவும் ஓதி அதன் பின் இறைவா இதன் சிறப்பை (நன்மையை) மரணித்தவர்களுக்கு சேர்த்துவைப்பாயாக என்று சொல்லுங்கள்'. ஆதாரம்- முக்னீ,பாகம்-02, பக்கம்424

நமது பதில்:

இது இமாம் அஹ்மதின் சொந்தக் கூற்றாகும். யாருடைய சொந்தக் கூற்றும் மார்க்கமாகாது. நபித்தோழர்களின் சொந்தக் கூற்றைக் கூட அல்லாஹ் பின்பற்ற அனுமதிக்கவில்லை. சுவர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட நபித்தோழர்களின் சொந்தக் கூற்றே மார்க்கமில்லையென்றால் இமாம் அஹ்மதின் சொந்தக் கூற்று எப்படி மார்க்கமாகும்? ஸஹ்லான், இமாம் அஹ்மதின் சொந்தக் கூற்றை ஆதாரமாக முன்வைக்கும் போது கூட மோசடிப் புத்தி அவரை விட்டு அகலவில்லை. இவர் குறிப்பிடும் முக்னீ 02ம் பாகத்தில் 'மையவாடியில் குர்ஆன் ஓதுவது பித்அத்' என்று இமாம் அஹ்மத் கூறிய மற்றுமொரு கருத்தும் பதிவாகியுள்ளது. இதனை றப்பானீ கவனமாகக் கத்தரித்துள்ளார். தனக்குச் சாதகமானதை எடுத்து தனக்குப் பாதகமானதை விடும் மோசடிப் புத்தியே இவர் வழிகெட்டுப் போனதற்கு அடிப்படைக் காரணமாகும்.

ஸஹ்லானின் வாதம்13: முபஷ்ஷிர் அல்ஹலபீ அவர்களின் தந்தை பின்வருமாறு வஸிய்யத்சொன்னார்கள். 'கப்றில் அடக்கம் செய்யப்பட்டபின் அங்கு சூறதுல் பகறாவின் ஆரம்பத்தையும் இறுதியையும் ஓதுங்கள். இப்னு உமர்(றழி) அவர்கள் இவ்வாறு வஸிய்யத் செய்வதை நான் கேட்டேன்' ஆதாரம்- முக்னீ,பாகம்-02, பக்கம்425

நமது பதில்:

இப்னு உமர் (ரலி) அவர்கள் சிறந்த நபித்தோழர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனாலும் அவர்கள் சுயமாக வஸிய்யத் (மரண சாசனம்) செய்திருந்தால் அது மார்க்கமாகாது. திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் உள்ளடங்கிய ஹதீஸ் தொகுப்புமே மார்க்கமாகும். இவர் சுட்டிக்காட்டும் இந்நிகழ்வு நபி (ஸால்) அவர்கள் சம்பந்தப்படாததாகும். இப்னு உமர் (ரலி) அவர்களின் பெயரில் முகவரியற்றவர்கள் இட்டுக்கட்டிய போலித்தகவலாகும். இந்நிகழ்வை அறிவிக்கும் அல்ஹசன் பின் அஹ்மத் என்பவர் யாரென்றே அறியப்படாதவர் ஆவார். மற்றொரு அறிவிப்பாளரான அலீ பின் மூஸா என்பவரும் இதே நிலைதான். போதாமைக்கு 'அப்துர் ரஹ்மான் இப்னுல் ஆலா' என்பவரும் இனந்தெரியாத நபர் ஆவார். இப்னு உமர் (ரலி) பெயரில் முகவரியற்றவர்கள் அறிவிக்கும் இந்நிகழ்வை கத்தத்திற்கு ஆதாரமாக முன்வைக்கும் ஸஹ்லானின் மடைமையை எண்ணி வெட்கமும் வேதனையும் அடைகின்றோம்.

கத்தம் ஓதும் அநாச்சாரத்தை நிரூபிக்க போலி வாதங்களையும் பொய்யான ஆதாரங்களையும் முன்வைத்து மூக்குடைபட்டு நிற்கிறார் மௌலவி ஸஹ்லான் றப்பானி. அவர் வைத்த ஆதாரங்களின் அவலட்சணத்தைத்தான் நாம் மேலே கண்டோம். பொய்யான ஆதாரங்களை முன்வைத்தது மாத்திரமல்லாமல் சிலஉளறல்களையும் அதிகப்பிரசங்கித்தனமாக முன்வைக்கின்றார்.

தனது ஆக்கத்தில் 'வஹாபிகள் சொல்வதுபோல் மரணித்தவர்களுக்காக அல்குர்ஆன் ஓதுவது பித்அத்தான விடயம் அல்ல' எனக் கூறும் ஸஹ்லான் கத்தம் ஓதி காசு பார்க்கும் வியாபாரத்திற்கு ஒரு ஆதாரத்தையாவது முன்வைத்தாரா? உருப்படியான ஒரு ஆதாரத்தைக் கூட முன்வைக்கத் துப்பில்லாத இவர் இஸ்லாத்தின் தூயவடிவத்தைக் காக்கப் பாடுபடும் தவ்ஹீத்வாதிகளை 'வஹாபிகள்' எனத் திட்டித் தீர்க்கின்றார்.

கத்தம் பற்றி இவர் எழுதிய ஆக்கத்தில் 'நபி(ஸல்) அவர்கள் மரணித்தவருக்காக அல்குர்ஆன் ஓதுமாறு கட்டளையிட்டார்களே தவிர எந்த சந்தர்ப்பத்திலும் அதை தடைசெய்யவில்லை' எனக் கூறி நபி (ஸல்) அவர்கள் மீது அவதூறு சொல்கின்றார். மரணித்தவருக்கு கத்தம் ஓதுமாறு நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளையை (?) கடைசிவரை எடுத்துக் காட்டாமலேயே கட்டுரையை முடித்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என பச்சையாகப் பொய்சொல்கின்றார். தொடர்ந்து தனது ஆக்கத்தில் 'இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் தடைசெய்யாத விடயத்தை நிறுத்துவதற்கு இவர்கள் மேற்கொள்ளும் முயற்ச்சி பெருவியப்பை எமக்கு ஏற்படுத்துகிறது' எனக் கூறி புருவம் உயர்த்துகின்றார். கத்தத்தை நிரூபிக்க இவர் மேற்கொண்ட முயற்சியே எமக்கு குமட்டலை ஏற்படுத்தும் போது கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் 'வியப்பு' ஏற்பட்டாதக வீர வசனம் பேசுகின்றார். தனது கட்டுரையின் இருதியில் 'அத்துடன் நபி(ஸல்) அவர்களின் ஸுன்னத்தான இந்த விடயத்தை நடைமுறைப்படுத்தும் ஸுன்னத்வல்ஜமாஅத் கொள்கைவாதிகளை பித்அத்வாதிகள் என குறிப்பிடுவது இஸ்லாமிய அடிப்படைகளை அழித்தொழிக்கும் கூற்றாகும்' எனக் கூறி முழுப்பூசணிக்காயை ஒரு சோற்றில் மறைக்கப்பார்க்கின்றார். ஸுன்னத் என்றால் என்ன? பித்அத் என்றால் என்ன? என்ற அடிப்படை தெரியாமல் மார்க்கத்தில் விழையாடும் இவரும் கத்தம் ஓதும் இவரது பக்கீர் ஜமாஅத்தும் ஸுன்னத்வல்ஜமாஅத் கொள்கைவாதிகளாம்! நல்ல நகைச்சுவை! ஸுன்னத்திற்கும் கப்ரு வணங்கிகளுக்கும் எப்போதாவது சம்பந்தம் இருந்திருக்கின்றதா? பத்தி, பழம், தேங்காய், சர்க்கரை, பூ என்று படையல் பொருட்களை தர்ஹாவுக்கு எடுத்துச் சென்று எழும்புக் கூடுகளிடம் தவம் கிடக்கும் இவர்கள் ஸுன்னத்வல்ஜமாஅத் கொள்கைவாதிகளாம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரியாத கத்தம் பாத்திஹா கந்தூரி, மீலாது, மௌலூது, வித்ரிய்யா, ராத்திபு போன்ற அநாச்சாரங்களையு விட்டு எம்மைக் காப்பாற்றிய அல்லாஹ், அத்வைதி ஸஹ்லானையும் அவரது மடமைக் கூட்டத்தையும் காப்பாற்றி ஓரிறைக் கொள்கையின் பால் வழிகாட்டுவானாக! இருதியாக: மரணித்தவர்கள் பெயரில் குர்ஆனை ஓதி அதன் நன்மைகளை ட்ரான்ஸ்போட் செய்யும் நிகழ்வுக்கு (கத்தம்) குர்ஆனிலோ ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலோ எவ்வித சான்றுகளுமில்லை என்பது K.R.M ஸஹ்லானின் முட்டாள்தனமான வாதங்களால் இன்னும் நிரூபணமாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

0 comments: