அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Saturday 30 June 2012

டெங்கு காய்ச்சல்: மத்திய மாநில அரசுகள் மெத்தனம்


தமிழக அரசு ஓராண்டு சாதனை மயக்கத்தில் இருக்கும் நேரம் பார்த்து இந்த டெங்கு கொசு நுழைந்திருக்கிறது. இதன் பாதிப்பில் இதுவரை 42 பேர் அதிகாரப்பூர்வமாக இறந்துள்ளனர். திருநெல்வேலி வழியாக ஊடுருவி தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, புதுச்சேரி, செங்கல்பட்டு வழியாக சென்னை வந்து சேர்ந்திருக்கிறது இந்தக் கொசு. திண்டுக்கல், தேனி, கரூர், ஈரோடு, கோவையையும் சென்று தாக்கியிருக்கிறது. மதுரை மருத்துவமனையில் மட்டும் இதுவரை 100 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மதுரையில் 2010ல் 214 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் கடந்த வருடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் 2011ல் பாதிப்பு எண்ணிக்கை 41 ஆக குறைந்தது.

ஆனால் இவ்வருடம் சுகாதாரத்துறை தூங்கிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. ஈரோடு, கோவையில் இதுவரை 38 பேரிடம் டெங்கு காய்ச்சலுக்கான அடையாங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழக அரசின் சுகாதாரத்துறை மிகத் தாமதமாக செயலில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மாற்றப்பட்டார். மத்திய சுகாதாரத்துறை இதனை அமைச்சர் காந்தி செல்வன், மத்திய சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் ஸ்ரீவத்ஸவா, அகர்வால், பூச்சியியல் வல்லுனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் டெங்கு பாதித்த இடங்களில் முகாமிட்டனர்.
புதுக்கோட்டையில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மாநில அமைச்சர்கள் புதுக்கோட்டை தொகுதியில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியான தேமுதிக-வின் சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியின் வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காய்ச்சலால் ஒவ்வொரு நாளும் இருவர் வீதம் இறந்துகொண்டிருக்கிறார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது 32 அமைச்சர்களும் நெல்லை மாவட்டத்தை முற்றுகையிட்டுக் கிடந்தனர்.
இப்போது டெங்கு காய்ச்சலுக்கான முதல் பலி கடையநல்லூரிலும், தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி, புளியங்குடி பகுதிகளிலும் நிகழ்ந்துள்ளன. ஓட்டு வேட்டைக்காக ஊர்களை முற்றுகையிட்டு வேலை செய்யும் அமைச்சர்கள், மக்கள் பாதிப்புகளை சந்திக்கும் போது எங்கே போகிறார்கள்?
டெங்கு காய்ச்சலுக்கென்று தனியாக மருந்துகள் கிடையாதாம். பொதுவான காய்ச்சலுக்கான மருத்துகள்தான் கொடுக்கப்படுகின்றனவாம். சிக்குன்கினியா, டெங்கு என்று புதிய இன கொசுக்களை ஒழிக்க சுகாதாரத்துறை புதிய ஆண்டிபயாடிக் மருந்துகளைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களைக் கண்டுபிடித்து முன்னுரிமையாக நிவாரணம் வழங்க வேண்டும்.
சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். தேங்கும் நீர்களையும், சாக்கடை நீர்களையும் போக்க வேண்டும். கொசு ஒழிக்கும் பூச்சி மருந்துகளுக்கு அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடுகிறது. ஆனால் மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மருந்துகள் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
அதுபோல் உள்ளாட்சி நிர்வாகங்களின் கீழ் இருக்கும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை வழமையாக சுத்தம் செய்வது கிடையாது என்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளது. மாநில சுகாதாரத்துறை அதிரடிப்படை அமைத்து நீர்தேக்கத் தொட்டிகளின் பராமரிப்பை சரிகாண வேண்டும். கொசுக்களின் ஆயுட்காலம் 7 முதல் 10 நாட்கள் என்பதால் வீடுகளில் வாரம் ஒருமுறையாவது தண்ணீர் சேமிப்பு தொட்டிகளை சுத்தப்படுத்துவதன் மூலம் விஷக்கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ளலாம். வீட்டுக்கு அருகிலோ, கொள்ளைப் புறத்திலோ மழைநீர் தேங்காமல் தடுக்க வேண்டும். தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் டப்பாக்களில் தேங்கும் நல்ல நீரில்தான் டெங்கு கொசு வளர்கிறதாம். புதிய வகை கொசுக்கள் புதுப்புது பெயரில் உற்பத்தியாவதற்கு தட்பவெப்ப நிலை மாற்றமும் ஒரு காரணம். வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் நெருக்கமாக மரங்கள் வளர்த்து வெப்பநிலை உயர்வைக் குறைக்க வேண்டும்.
பூச்சியியல் துறை வல்லுனர்கள் கொசு இனங்களின் பருவ காலங்களை முன்கூட்டியே கணித்து சுகாதாரத் துறையை எச்சரிக்கலாம். மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து போர்க்கால அடிப்படையில் பணியாற்றி உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும்.

0 comments: