அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Thursday, 9 May 2013

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி)

அண்மையில் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அந்த நாட்டில் இஸ்லாமிய வங்கிகள் (Islamic Banking) சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் இந்தியாவில் இஸ்லாமிய வங்கியைத் தொடங்க ஆர்.பி.ஐ. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய வங்கி என்றால் என்ன? அது எப்படி நடக்கிறது என்கிற ஆர்வம் பலரது மனதில் எழுந்திருக்கிறது.
இஸ்லாமிய கொள்கையான ஷரியா’-வின்படி (Sharia) நடக்கும் வங்கிகளைத்தான் இஸ்லாமிய வங்கிகள் என்கிறார்கள். கடனுக்கு வட்டி வாங்குவது ஷரியா’-வின் படி தவறாகும் . இஸ்லாமிய மதத்தின்படி இது குற்றம். ஒருவருக்குக் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்காமல், அவர் முதலீடு செய்யும் தொழிலில் கிடைக்கும் லாப நஷ்டத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் இஸ்லாமிய வங்கியின் சிறப்பு. பல நூற்றாண்டுகளாகவே இந்த முறை முஸ்லீம் நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும் 20-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் இஸ்லாமிய வங்கிகள் நடைமுறைக்கு வந்தன.
வழக்கமாக வர்த்தக வங்கிகளில் கொடுக்கப்படும் கடனுக்கு வட்டி வசூலிக்கப்படும். இஸ்லாமிய வங்கியைப் பொறுத்தவரை, கடன் கொடுப்பவரும் வாங்குபவரும் பங்குதாரர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் அந்தத் தொழிலை சிறப்பாக நடத்தி லாபம் சம்பாதிக்க வேண்டும். நஷ்டம் ஏற்பட்டால் அதைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை முன்னரே ஒப்புக் கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என்பது இஸ்லாமிய வங்கியின் சிறப்பு. மனை, வீடு போன்ற ஏதாவது சொத்தை ஜாமீனாகக் கொடுத்தால் மட்டுமே இஸ்லாமிய வங்கிகளில் தொழிற்கடன் கிடைக்கும் என்பது முக்கியமான விஷயம்.
சரி, வாகனக் கடனை இஸ்லாமிய வங்கிகள் எப்படிக் கொடுக்கின்றன? வாகனத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இஸ்லாமிய வங்கி முதலில் காரை வாங்கிவிடும். அதனை வங்கி வாடிக்கையாளருக்கு லாபம் வைத்து அதிக விலைக்கு விற்கும். வாகனத்தை வாங்கியவர், அதற்கான தொகையை மாதத் தவணையில் கட்டி வர வேண்டும். முழுவதும் பணம் கட்டி முடிக்கும் வரை வாகனத்தின் உரிமை இஸ்லாமிய வங்கியிடம் இருக்கும்.
இஸ்லாமிய வங்கிகள் வீட்டுக் கடனை வழங்கும் விதமும் வித்தியாசமானது. வாடிக்கையாளர் வாங்க விரும்பும் வீடானது, வங்கி மற்றும் வாடிக்கையாளரின் பெயரில் கூட்டுச் சொத்தாக பதிவு செய்யப்படும். இதில், யார் எவ்வளவு பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்றும் குறிப்பிடப்படும். பிறகு இந்தச் சொத்து வாடிக்கையாளருக்கு வாடகைக்கு விடப்படும். இந்த வாடகைத் தொகை, சொத்தில் வங்கி மற்றும் வாடிக்கையாளருக்கு உள்ள பங்கிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, வங்கிக்கு உரிய பங்கை (அதிகரிக்கப்பட்ட விலையில்) மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையைக் கட்டி வாடிக்கையாளர் அந்த வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம். இது கிட்டத்தட்ட வீட்டுக் கடனுக்காக நாம் கட்டும் இ.எம்.ஐ. போல் இருக்கும். வாடிக்கையாளரால் பணத்தைச் சரியாகக் கட்ட முடியவில்லை என்றால் அந்த வீட்டை விற்று, வங்கி மற்றும் வாடிக்கையாளருக்கு உள்ள பங்கிற்கு ஏற்ப பிரித்துக் கொள்ளப்படும்.
ஈரான், மலேசியாவில் இஸ்லாமிய வங்கிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஜப்பான், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கிகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவது முக்கியமான விஷயம். வர்த்தக வங்கி மற்றும் இஸ்லாமிய வங்கி நடைமுறைகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கும் தோஹா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன், இஸ்லாமிய வங்கிகள் சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதாகச் சொன்னார்.
உலகம் முழுக்க கடந்த ஐந்தாண்டுகளில் வர்த்தக வங்கிகளின் வளர்ச்சி 2%-மாக உள்ளது. இதே காலத்தில் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி 12-15%-மாக இருக்கிறது. இப்போது உலக அளவில் இஸ்லாமிய வங்கிகள் நிர்வகித்து வரும் சொத்துகளின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகம். சர்வதேச நிதியம் (IMF- International Monetary Fund) மற்றும் உலக வங்கிகளின் நிதி நிர்வாக அமைப்பான பேசல் (Basel) இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை அங்கீகரித்துள்ளனஎன்றார்.
தற்போது இந்தியாவில் ஷரியா கொள்கை அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய வங்கி ஒன்றை ஆரம்பிக்க ஐ.டி.பி.ஐ. வங்கி முயற்சி எடுத்து வருகிறது. இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகளைக் கொண்டு வர வேண்டும் என்றால் அவற்றுக்கென பிரத்தியேக சட்டம் தேவை என ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவ் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு இஸ்லாமிய வங்கிகள் வந்தால் நம் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்.

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) இரா. முருகன்  ...

பாகம் 1
நாவலாசிரியராக, சிறுகதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக உங்களுக்கு முருகனைத் தெரிந்திருக்கும். வங்கியியல் வல்லுநராக ஒரு புதிய அறிமுகத்தை இப்போது செய்துகொள்ளுங்கள். உலகெங்கும் இன்று பிரபலமாகப் பேசப்படும் இஸ்லாமிக் பேங்கிங்கை இக்குறுந்தொடரில் அறிமுகப்படுத்துகிறார் இரா. முருகன்.
அமெரிக்காவிலும், பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் கவர்மெண்ட் செலவில் தேசிய அளவு பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய சமூகத்தைக் குறித்துத்தான்.
கான், ஹசன், முஸ்தபா இப்படிப் பெயரை பாஸ்போர்ட்டில் பார்த்தாலே மேற்படி நாடுகளில் ஏர்போர்ட் இமிகிரேஷன் அதிகாரிகளின் பிளட் பிரஷர் எகிறிப்போகிறது. காது மடல் சிவக்க பாஸ்போர்ட்டை விரித்து பெஸ்ட் செல்லர் லிஸ்ட் புத்தகம்போல் ஒரு பக்கம் விடாமல், ஒரு வரி விடாமல் படிக்கிறார்கள்.
பல சந்தர்ப்பங்களில் உள்ளே தனியறையில் மணிக்கணக்காக விசாரணை செய்து பின் லேடனுக்கு ஒண்ணு விட்ட, எட்டு, எண்பது விட்ட தம்பிக்கு மச்சினன் சம்சாரத்துக்கு மாமா பிள்ளை இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, கடனே என்று கதவைத் திறக்கிறார்கள்.
ஓர் இனத்தையே மறைமுகமாக பயங்கரவாதி முத்திரை குத்திவைத்திருக்கும் இந்த நாடுகள் கூட, ‘இஸ்லாமிய வங்கிஎன்றால் இருகரம் நீட்டி வரவேற்று வாங்க, கோக் சாப்பிடுங்கஎன்று உபசரிக்கின்றன.
அப்படி என்ன மந்திரச் சொல் இந்த இஸ்லாமிய வங்கியியல் (Islamic Banking) என்பது?
இட்லிக் கடை வைப்பதுபோல், இம்பாலா கார் கம்பெனி நடத்துவதுபோல், வங்கித்தொழிலும் லாபத்தைக் குறிக்கோளாக வைத்துத்தான் நடத்தப்படுவது. நேர்மையாக, தெய்வத்துக்கு, மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் வங்கித்தொழிலை சமூக நோக்கில் நடத்த வழி சொல்வது இஸ்லாமிய வங்கியியல். லாபத்தையும் இழப்பையும் பகிர்ந்துகொள்ள வழிசெய்யும் ஒரு சமுதாயவியல்  அது.
ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் கௌதம புத்தர். வட்டியே வங்கித் துறையில் நேர்மையின்மைக்குக் காரணம் என்கிறது இஸ்லாமிய வங்கியியல். ஆக, இஸ்லாமிக் பேங்கிங்கின் ஆத்திசூடி வட்டி வாங்காதே வழங்காதேஎன்று தொடங்குகிறது. இந்த அரிச்சுவடியை எட்டாம் நூற்றாண்டிலேயே எழுதிவிட்டார்கள் என்பது விசேஷம். ஆமா சார், இஸ்லாமிய வங்கியியல் உலகம் முழுக்கக் கடைப்பிடிக்கப்படுகிற ஐரோப்பிய பேங்கிங்குக்கு மிக மிக மூத்தது.
இஸ்லாமிய வங்கியியலின் ஆதார சுருதி ஷரியா. அல்-ஷரியா என்று புனிதச் சட்டமாகப் போற்றப்படுவது இது.
மனிதன் எப்படி நடக்கவேண்டும் என்ற இறைவனின் விருப்பம்தான் ஷரியா.  பல கோடி இஸ்லாமியர்கள் இப்படித்தான் நம்புகிறார்கள். காசு கொடுத்து வாங்கும் வங்கித் தொழிலா, கையில் ஆயுதம் எடுத்து யுத்தம் புரியும் போர்த் தொழிலா, சுற்றுச் சூழலா, சமுதாய முன்னேற்றமா, ஷரியா தொடாத துறையே இல்லை.
ஷரியாவில் காணப்படும் வர்த்தகம் பற்றிய விதிகள் இஸ்லாமிய வங்கியியலில் முழுமையாகக் கையாளப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகள் ஃபிக் அல்-முவாமலத் (Fiqh al-Muamalat) அதாவது, கொடுக்கல் வாங்கல் பற்றிய இஸ்லாம் மார்க்க விதிகள் என்று அழைக்கப்படும்.  இந்த விதிகளில் ஏதாவது ஒண்ணு ரெண்டை சாய்ஸில் விட்டாலும் அது இஸ்லாமிக் பேங்கிங் இல்லை, இல்லை இல்லவே இல்லை.
சரி, ஷரியா எங்கே இருந்து வந்தது?
இஸ்லாமிய மதநூல் புனித குரான் ஷரியாவுக்கு ஊற்றுக்கண். ஷரியாவின் இன்னொரு கண்ணாக விளங்குவது நபிகள் நாயகம் அவர்களின் முழு வாழ்க்கையுமேதான். அவர் பேசியது, போதித்தது, வாழ்ந்து காட்டியது இவை எல்லாவற்றையும் சித்திரிக்கும் ஹடித் (Hadith) என்ற வாழ்க்கைக் குறிப்புகள் இவை.
ஷரியா என்றால், ‘தாகம் தீர்க்கும் குளிர்நீர் ஊற்றுக்கு இட்டுச் செல்லும் பாதைஎன்று வெண்தாடியைத் தடவிக்கொண்டு நீண்ட சொல் விளக்கம் தருவார்கள் மார்க்க அறிஞர்கள். மரபு சார்ந்தஎன்ன மரபு சார்ந்த வேண்டிக் கிடக்குஐரோப்பிய தொழில் தர்மம்தான் நம் மரபாச்சே, ஐரோப்பிய  வங்கியியல் அண்மைக் காலத்தில், அதாவது கி.பி. 2008-ல் உலக அளவிலே பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமாக இருந்தபோது, எத்தைத் தின்னால் பித்தம் தீரும், இந்த நிதிநிலை முடக்குவாதம் குணப்படும் என்று உலக வங்கியியல் அறிஞர்கள் அறிவுத் தாகத்தோடு அலைந்தார்கள். அப்போது அவர்களுக்குக் குளிர்நீர் ஊற்றாகதட்டுப்பட்டது ஷரியாவும் இஸ்லாமிய வங்கியியலும்தான். நெஞ்சில் கையை வைத்துச் சொல்லச் சொன்னால் ஜார்ஜ் புஷ்கூட இதை மறுக்காமல், மறக்காமல் சொல்வார். எதுக்கும் இங்கிலீஷில் கேட்டுப் பார்க்கவும்.
ஷரியாவை நாம் புரிந்துகொள்ளும் சௌகரியத்துக்காக ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்.
1)    மதம் சார்ந்த வழிபாட்டு நெரிமுறைகள் பற்றிய இபாதா (ibadah)
2)    (ஏற்கனவே பார்த்த) முவாமலத் கொடுக்கல் வாங்கல் விதிகள் (mu’amalat)
3)    நீதி, பண்பாடு பற்றிச் சொல்லும் ஆதாப் (adab)
4)    நம்பிக்கைகள் பற்றிய லிதிகாதத் (i’tiqadat)
5)    ஷரியாவைக் கடைப்பிடிக்காவிட்டால் விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் பற்றிய உகுபத் (uqubat)
ஒரு நொடியில் இருந்து ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து முடித்து அடங்குகிறது வரையான காலத்துக்குத் தேவையான சகல விதிமுறைகளும் ஷரியாவில் உண்டு. இதில் சொல்லப்படாத ஏதாவது சம்பந்தமாக வழிகாட்டுதல் வேண்டியிருந்தால் இஸ்லாம் மூன்று விதங்களில் அதற்குத் தீர்வு காணலாம் என்று வகுத்திருக்கிறது.
1)    அறிஞர்கள் கூடி ஆலோசித்து வழங்கும் பெரும்பான்மைத் தீர்வு
2)    ஒற்றை இஸ்லாமியப் பேரறிஞர் அலசி ஆராய்ந்து வழங்கும் தீர்ப்பு
3)    பழக்க வழக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்வு
தீர்வு வழங்கும்போது ஒன்றே ஒன்றை மனத்தில் இருத்திக்கொண்டால் போதும் புனித குரானில் சொல்லியிருப்பதற்கு மாறாக அது இருக்கக்கூடாது.
ஷரியாவில் இருந்து பெறப்பட்ட இஸ்லாமிய வங்கியியல் விதிமுறைகள் பற்றி சிறு குறிப்பு வரைக என்றால் அடுத்த ஆறு பாராவையும் கனகம்பீரமாகச் சொல்லலாம்.
பணத்தைக் கொடுத்து வாங்கி, அதாவது வாடகைக்கு விடும்போது’ (renting of money) அதற்குக் கூலி வாங்குவது பாவம். அந்தக் கூலிதான் வட்டி. இஸ்லாம் மொழிநடையில் வட்டி என்பது ரிபா’ (Riba). பாவம் என்பது ஹராம்’ (Haram).
ரிபா சாரிபா, அது ஹராம் நெம்பர் ஒன்.
ஷரியா தடைவிதித்த தொழில்களில் பணத்தை முடக்குவதும், அவற்றை எடுத்து நடத்தி லாபம் பார்ப்பதும்கூட ஹராம். போதைப் பொருள்கள், மது, சூது இப்படி எத்தனையோ இந்த ஹராம் பட்டியலில் உண்டு. அரசியல் இல்லை.
புனித குரான் சொல்கிறது, ‘இறைவன் வணிகம் நடத்த அனுமதித்துள்ளான். ஆனால் ரிபாவுக்குத் தடை விதித்திருக்கிறான்.
சவாலைச் சமாளிக்காமல் சம்பாத்தியம் இல்லை (There is no reward without taking any risk) – இதுவும் இஸ்லாமிய வங்கியியலின் இன்னொரு அம்சம்தான்.
இந்தச் சவாலும் சம்பாத்தியமும் உழைப்பு, முதலீடு ரெண்டுக்கும் பொருந்தும். உழைத்து, உழைப்பின் வெற்றியை அடைகிற சவாலைச் சந்திக்கும் தொழிலாளியும், நேர்மையாக முதலீடு செய்து லாபம் ஈட்டும் முதலாளியும் ஷரியாவின் கண்களில்  ஒரேபோல!
பாகம் 2
வட்டி (ரிபா) பற்றிய இஸ்லாமிய நோக்கை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். கோடி கோடியாகப் பணம் புரளும் சர்வதேச வங்கித் துறையையே புரட்டிப் போடும் கோட்பாடு அது. மாற்றம் நல்லதுக்குத்தான் வழிவகுக்கும்.
பணம் என்பது ஒரு சொத்து என்று நினைத்தால் மகா தப்பு. அது ஒரு மதிப்பீடுதான் (value). வீடு, நிலம், நகை, படி அரிசி என்று உலகத்தில் விற்பனைக்குக் கிடைக்கிற எத்தனையோ பொருட்களை மதிப்பிடப் பணம் ஓர் அளவுகோல்.
ஒரு பவுன் தங்கத்தின் விலை மதிப்பு (இதை எழுதும்போதே இன்னும் கொஞ்சம் எகிறி இருக்கும்) நிச்சயம் ஒரு பிளேட் இட்லி சாம்பாரின் விலை மதிப்புக்கு ஈடாக இருக்காது.
ஒரு நானோ காரின் மதிப்பு பணமாகச் சொன்னால் ஒண்ணே கால் லட்சம் ரூபாய். ஒரு முர்ரா எருமையின் பண மதிப்பும் அவ்வளவே. முர்ரா எருமை முப்பது லிட்டர் பால் தரும். நானோ லிட்டருக்கு பதினைந்து கிலோமீட்டர் ஓடும்.  ஒரே பண மதிப்புள்ள ரெண்டு பொருட்களின் சாதக பாதகங்களை ஒப்பு நோக்கி, காரா, எருமையா என்று தீர்மானிப்பது உங்க வீட்டுக்காரம்மா விருப்பம்.
உங்களிடம் ஒரு  கார் இருந்தால் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அதே மதிப்பில் (சரி, எருமை வேண்டாம்) எது வாங்கலாம் என்று தீர்மானிக்க பணமதிப்பு வழி செய்கிறது. பொருட்களைப் பரிமாறிக் கொள்ள (exchange) உதவுகிறது.
ஆக உருண்டோடிடும் பணம் காசென்னும் உருவமான பொருளுக்கு என்று தனியாக ஒரு மதிப்பு கிடையாது. அமிதாப் பச்சனை ஆறடி என்று இஞ்ச் டேப்பில் அளக்கலாம். அதனால் இஞ்ச் டேப்புக்கு என்று தனி மதிப்பு கிடைக்குமா என்ன?
பணத்துக்கே சொந்த மதிப்பு இல்லாதபோது, அதைக் கடன் கொடுத்து அதுக்குக் கூலியாக வட்டி வாங்கினால், அந்த ரிபாவுக்கு மதிப்பு? ஒரு சுக்கும் இல்லை. அது மட்டுமா? வட்டி சுரண்டலுக்கும் சமூக ஏற்றத்தாழ்வுக்கும்கூட வழி வகுக்கிறது. வியாபாரம் செய்தால் பொருட்கள் கை மாறும். மதிப்பில்லாத பணத்தை வட்டிக்கு விட்டால் ஹராம்தான் (பாவம்) உருவாகும். ரிபா விலக்கப்பட்டது. ஏனெனில் அது அநியாயமானது (ஸுல்ம் – Zulm) என்று சொல்கிறது திருக்குரான் (வசனம் 2:279).
நிதி சால சுகமாஎன்று கல்யாணி ராகத்தில் கேட்டார் தியாக ப்ரம்மம். லேது என்கிறது ஷரியா. நிதியைவிட முக்கியமானவை மனித உழைப்பு, முனைந்து செயல்படுதல் (initiative), செய்யும் தொழிலில் சவால்களைச் சமாளித்து வெற்றிக்கு வழி வகுத்தல்  (risk management) ஆகிய மூன்றும். ஷரியா தரும் விளக்கம் இது.
அது சரி, சும்மா நிதியை வச்சு அழகு பார்த்துக்கிட்டு இருந்தா அது, தானே உதயநிதி, தயாநிதி, கலாநிதின்னு வளருமா? கைமாற்று கொடுத்து, வட்டிக்கு விட்டு சம்பாதிச்சாத்தானே அது பெருகும்?’ன்னு கேட்டால், ஒற்றை வாக்கியத்தில் பதில் – ‘இஸ்லாமில் கடன் கொடுப்பது என்ற ஒரு வழக்கமே கிடையாது!
இங்கே கடன் கொடுக்கப்படும்என்று நியான் விளக்கு போட்டு நிதி நிறுவனம் எதையும் ஷரியாவின்படி திறக்க முடியாது. நீங்கள் பண உதவி செய்யுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நண்பரின் தொழிலிலே பணம் முடக்கி இருக்கிறீர்கள் என்று சொல்லிக் கொள்ளுங்கள். சரிதான்.
ஆக, உழைப்பை முதலீடு செய்யும் உங்கள் நண்பரும், பணத்தை முதலீடு செய்யும் நீங்களும் பங்காளிகள். லாபத்தில் பங்கு பெறத் தகுதி உள்ளவர்கள். உங்கள் முதலீடு ஈட்டித் தரும் லாபம் விலக்கப்பட்டது இல்லை. அதை ஷரியாவும் இஸ்லாமிய வங்கியியலும் முழுமையாக ஆமோதித்து வரவேற்கின்றன.
வட்டி வாங்குவதையும், சமுதாயத்துக்குத் தீமை ஏற்படுத்தும் தொழில்களில் நிதி முதலீடு செய்வதையும் ஷரியா தடை செய்திருக்கிறது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். இவை மட்டுமில்லை, முழுக்க முழுக்க நிச்சயமில்லாத விளைவுகள் கொண்ட தொழில், வியாபாரத்தில் (கரார் – garar) ஈடுபடுவதுபந்தயங்களில் முதலீடு (மைசீர் –Maysir) இதெல்லாம் கூட ஹராம்தான்.
சரி, வாங்க, வங்கிக்குப் போகலாம். இது நம்ம ஊர் வங்கி.
என்ன வேணும்?’ சிரத்தை இல்லாமல் கேட்கிறார் அதிகாரி. நாலு கிளார்க் லீவு. அத்தனை வேலையும் அண்ணாத்தை தலையில் கட்டிவிட்டு மேனேஜர் ரீஜனல் ஆபீசுக்கு பெர்பார்மென்ஸ் ரிவ்யூ மீட்டிங்குன்னு எஸ்கேப் ஆகிட்டார். அங்கே அவரை, செயல்பாடு போதாதுன்னு மேலதிகாரிகள் லாடம் கட்டிட்டு இருப்பாங்க என்பது வேறு விஷயம்.
சார், லோன் வேணும்’.
என்ன லோன்?’
சிறு தொழில் கடன்’.
என்ன வேணும்?’  என்ன-வில் ஒரு சின்ன அழுத்தம்.
ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி லோன்என்று ஈசியான தமிழில் சொல்கிறோம். ஆபீசர் சார் நிமிர்ந்து உட்கார்கிறார்.
ரிசர்வ் பேங்க்காரனும் ரீஜனல் மேனேஜர் தாதாவும் உயிரை எடுக்கறாங்க. பேங்க் பிராஞ்ச் கொடுக்கற மொத்தக் கடனில் நாற்பது சதவிகிதம் அதி முக்கியமான துறைகளுக்கு (priority sector) கொடுத்தாகணும். சிறு தொழில், விவசாயம், கல்விக் கடன் இதெல்லாம் ப்ரியாரிட்டி செக்டர்லே வர்ற சமாசாரம்.
ஆக, கடன் விண்ணப்பக் காகிதம் கைமாறுகிறது. அதைப் பூர்த்தி செய்ய உங்க பெயர், முகவரி, வயது, கல்வித் தகுதி, செய்யற தொழில் விவரம், உங்ககிட்ட இருக்கப்பட்ட அசையும் பொருள், அசையாப் பொருள் (அதாங்க, movabale property, immovable property) சொத்து விவரம் எல்லாம் பொறுமையா எழுதறீங்க.
நான் அதிகாரியாக இருந்த ஒரு பேங்க் பிராஞ்சில் லோன் அப்ளிகேஷன் இப்படி இருந்தது. சொத்து விவரம் : அசையும் பொருள் கணவரிடம் உள்ளது. அந்தம்மாவை விசாரிக்க, வீட்டுக்காரரின் பஜாஜ் ஸ்கூட்டரைக் காட்டினார்.
சொத்து பத்து இல்லாவிட்டாலும் பரவாயில்லை. யாராவது கியாரண்டி கொடுப்பாங்களா? அதாவது நீங்க கடனைத் திருப்பிக் கட்டுவீங்கன்னு உத்திரவாதம்?
விவரம் கொடுக்கறீங்க. நடையா நடந்து ஒரு வழியா லோன் சாங்ஷன் ஆகுது.
இருபத்து நாலு மாசத்திலே பணத்தைத் திருப்பிக் கட்டணும். பிரதி மாதம் அடைக்க வேண்டிய தொகை இது. தவிர மூணு மாசத்துக்கு ஒரு தடவை வட்டி கட்டணும். எட்டரை சதவிகிதம் கூட்டு வட்டி’ – இதுக்கெல்லாம் சம்மதிச்சுக் கையெழுத்து போடறீங்க. தொழில் நல்லா நடந்தா கட்டாம இருப்போமா என்ன?
ஒரு வருஷம் ஒழுங்காப் போகுது எல்லாம். திடீர்னு ரெண்டு மாசம் தொழிலைக் கவனிக்க முடியாதபடி உடம்பு சுகவீனம். ஆஸ்பத்திரி, அலைச்சல். செலவு.
சார், இன்ஸ்டால்மெண்ட், வட்டி ரெண்டையும் கட்ட முடியலே இந்த ரெண்டு மாசமாக. கொஞ்சம் பொறுத்துக்க முடியுமா?’
அதிகாரி நரசிம்மாவதாரம் எடுக்கிறார்.
உங்க தொழில்லே, ஆரோக்கியத்துலே, குடும்பத்துலே பிரச்சனைன்னா அதை பேங்குக்கு சொல்லிப் புண்ணியம் இல்லை. பணத்தைக் கட்டலேன்னா என்.பி.ஏ ஆக்கிடுவோம். அப்புறம் எங்களைக் குத்தம் சொல்லாதீங்க.
அவர் பேங்குமொழி பேசுகிறார். அதாவது உங்க கடனை வராக் கடன் (Non Performing Asset – NPA) முத்திரை குத்தி மேல் நடவடிக்கை எடுப்பாராம். இதுவே தனியார் வங்கியாக இருந்தால், வராக் கடனை வசூலிக்க வீட்டு வாசலுக்கு ஆட்டோகூட வரலாம்.
ஆக, மேலே சொன்னதில் இருந்து பெறப்படும் செய்தி யாதெனில்
1.     வழமையான வங்கித் தொழிலிலோ, தனியார் கொடுக்கல் வாங்கலிலோ, பணத்தை வழங்குகிறவருக்கு (lender) கடன் வாங்கியவர் (borrower) வாங்கிய பணத்தையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டவர்.
2.     வழங்குகிறவருக்கு, வாங்குகிறவர் அந்தப் பணத்தை வைத்துச் செய்யும் தொழில்மீது ஈடுபாடு இல்லை. அவர் பணத்தை திருப்பித் தருவாரா, தராவிட்டால் என்ன செய்யலாம் என்பதில்தான் அக்கறை.
3.     தொழில் கையைக் கடித்தாலோ, ஷட்டரை இழுத்து மூடவேண்டி வந்தாலோ, வழங்குகிறவருக்கு முடியே போச்சு போய்யா’. சட்டம் இருக்கு. கையெழுத்து வாங்கின டாக்குமெண்ட் இருக்கு. வீட்டை அடமானம் வச்சு லோன் எடுத்துக் கட்டலையா? வீட்டையே ஜப்தி செய்யலாம். சட்டம் வழி செஞ்சிருக்கு.
நேர்மையாக இருந்தாலும், வாங்கிய பணத்தைத் திருப்பிக் கட்டவேணும் என்று பொறுப்பு உணர்ச்சி இருந்தாலும், அதைச் செய்ய முடியாமல் போனால், கடன் கொடுத்த வங்கிக்குக் கரிசனம் வேண்டியதில்லை. வங்கித் தொழிலில் கருணை, கரிசனம் இதுக்கெல்லாம் இடம் இல்லை. இதுதான் நாம் பார்க்கிற வங்கி.
இஸ்லாமிய வங்கி?
வாங்க, முதரபா (Mudarabah) தரோம்என்கிறது.
கடனில்லை. உங்க மேல் அக்கறை உள்ள, சுக துக்கத்திலே பங்கு எடுத்துக்கற, சமூக நோக்கு கொண்ட உதவி.

பாகம் 3
முதரபா (Mudarabah) என்பது கடன் இல்லை, சமூக நோக்கு கொண்ட உதவி என்று சொன்னோமே, அதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
எந்த நேர்மையான தொழிலுக்கும் நிதியும் உழைப்பும் அவசியம். நிதியை மேல்படியில் மெத்தை போட்டு உட்கார்த்தி, உழைப்பை வாசலில் கூனிக் குறுகி நிற்கவைப்பது அநீதி. ஆக, ஒருவர் தொழில் திறமையையும் உழைப்பையும் மூலதனமாகப் போட, இன்னொருவர் பணத்தை மூலதனமாக முடக்கவேண்டும்.
நஷ்டம் வரலாம் என்ற சவாலை எதிர்பார்த்து உழைப்பாளரின் திறமையில் நம்பிக்கை வைத்து பண முதலீடு செய்வதாலேயே முதலாளிக்கு லாபத்தில் பங்குபெற கன கம்பீரமான உரிமை ஏற்படுகிறது.
உழைப்பு சரிவர இருந்தும், லாபம் வராமல் போனால், உழைப்பாளி பண நஷ்டத்துக்குப்  பொறுப்பாக மாட்டார். முதலாளி தொழிலில் முதலீடு செய்த பணம் நஷ்டத் தொகையின் அளவுக்குக் குறைக்கப்படும். உழைப்பாளி பெற உரிமை உள்ள, ஆனால் கிடைக்காமல் போன உழைப்பின் ஊதியம் இந்தப் பண நஷ்டத்துக்கு ஈடாகும்.
ஏன் வழமையான கடன் வழங்குதல்–வாங்குதல் உறவை விட முதரபா மேலானது என்பதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.
1)    தொழில் தொடங்கும் முன்பே முதலாளியும் உழைப்பாளியும் லாபம் வரும்போது எந்த விகிதத்தில் அதைப் பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்து ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள். இந்த லாபப் பிரிவினை, பண முதல் தரும் வருமானத்தை (return on capital) அடிப்படையாகக் கொண்டதில்லை. முழுக்க முழுக்கத் தொழிலில் கிட்டும் லாபத்தைச் சார்ந்தது (profit sharing agreement).
‘நான் இவ்வளவு பணம் தருவேன். நீங்கள் இவ்வளவு உழைப்பீர்கள். நிர்வகிப்பீர்கள். தொழில் முன்னேற்றம், பிரச்சனைகள் பற்றி என்னோடு தகவல் பகிர்ந்து கொள்வீர்கள். நான் அதிகம் பணம் உதவவேண்டி வந்தாலோ, நீங்கள் இன்னும் திறமையாக, இன்னும் கடுமையாக உழைக்கவேண்டி வந்தாலோ, மனமுவந்து அதைச் செய்வோம்’ என்று அந்த ஒப்பந்தம் தெளிவாக்கும்.
முதலீடு செய்பவருக்கு நிர்வாகத்தில் குறுக்கிட உரிமை இல்லை. அதேபோல் தேவையில்லாமல், பணம் கொடுங்க என்று விடாப்பிடியாக அதிக நிதி கேட்டு நச்சரிக்க மற்றவருக்கு உரிமை இல்லை.
2)    இப்படி ஒருவருக்கு ஒருவர் இணக்கமான அக்கறையோடும் முழு முனைப்போடும் தேவையான நிதி அடிப்படையோடும் நடக்கும் தொழிலில் நஷ்டம் வந்தால் இருவருமே பாகுபாடு இன்றி வெவ்வேறு வடிவத்தில் அந்த இழப்பைத் தாங்கிக் கொள்கிறார்கள். இழப்பையும் கடந்து முன்சென்று ஒப்பந்தப்படி வெற்றி கண்டு லாபத்தைப் பங்கு வைப்பது என்ற லட்சியம் தொடர சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன.
நேர்மையான உழைப்புக்கும், பொறுப்பான நிதியுதவிக்கும், திறமையான நிர்வாகத்துக்கும், தர்ம நியாயத்துக்கு உட்பட்ட தொழில் நடப்புக்கும் கிடைக்கும் வெகுமதியே லாபம். அந்த லாபத்துக்கு வானமே எல்லை. அதைப் பங்கு வைக்கும் விகிதத்தையும் ஷரியா இவ்வளவு என்று கட்டுப்படுத்தவில்லை.
3)    முதரபா ஒப்பந்தத்தை இருவரில் எவர் மீறினாலும்,  இஸ்லாமிய வங்கிச் சட்டத்தின் கண்களில் ஒரே மாதிரி நடத்தப்படுகிறார். அவர் மற்றவருக்குத் தரவேண்டிய நஷ்ட ஈடு விவரமும் ஒப்பந்தத்தில் இருக்கும்.
உழைக்கவேண்டியவர் உழைக்காமல் அல்லது தவறாகச் செயல்பட்டு நஷ்டத்தை உண்டாக்கினால், முதல் போட்டவருக்கு அவர் முடக்கிய தொகையை கேள்வி கேட்காமல் இவர் கொடுத்துவிடவேண்டும்.
முதலாளி திடீரென்று பண உதவியை நிறுத்தினாலோ, ஒப்பந்ததுக்கு மாறாக, போட்ட பணத்தை உடனே திரும்பக் கேட்டாலோ, அல்லது ஒப்பந்தப்படி பணம் தர மறுத்தாலோ நஷ்டம் ஏற்படலாம். அப்போது அந்த உழைப்பாளி இதே தொழிலை வேறு யாருடனாவது ஒப்பந்தம் செய்துகொண்டு வெற்றிகரமாக நடத்தி இருந்தால் குறைந்தபட்சமாக என்ன லாபம் பெற்றிருப்பாரோ அதை நிதியாளர் கட்டாயம் செலுத்தியாகவேண்டும்.
நிதியை முதலீடு செய்பவர் ராப்-உல்-மால் ( rabb-ul-maal.) என்று அழைக்கப்படுவார். உழைப்பை முதலீடு செய்கிறவர் முதரிப் (mudarib) எனப்படுகிறார்.
முதரபாவில் இரண்டு வகை உண்டு. நிதி கொடுக்கிற தொழில் பங்காளியான ராப்-உல்-மால், அந்த நிதியைப் பயன்படுத்தி எந்தத் தொழில் செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம். உழைக்கும் பங்காளி முதரிப் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவர் ஆவார். நிபந்தனையோடு கூடிய முதரபா என்ற பொருள் தரும் ‘அல்-முதரபா அல்-முகய்யதா’ (al-mudarabah al-muqayyadah) எனப்படும் இது.
நிதியாளர் எந்தத் தொழில் என்று நிபந்தனை விதிக்காதபோது, உழைக்கும் பங்காளி அந்த முதலை நிதி மூலதனமாக வைத்து விரும்பிய தொழிலில் ஈடுபடலாம். இது நிபந்தனையற்ற முதரபா – ‘அல்-முதரபா அல்-முதலகா’ (al-mudarabah al-mutalaqah)எனப்படும்.
இரண்டு பங்காளிகளில் யார் விரும்பினாலும் மேலே தொடராமல் முதரபாவை விலக்கிக்கொள்ளலாம். ஒப்பந்த முறிவுக்கான முன்னறிவிப்புக் காலம், வழிமுறை இரண்டும் ஒப்பந்தத்திலேயே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். அதைக் கடைப்பிடித்து முதரபாவிலிருந்து விலகிக்கொள்ளத் தடை ஏதும் இல்லை.
எத்தனை வருடம் முதரபா செயல்படலாம் என்று ஒப்பந்தத்திலேயே இருப்பதும் உண்டு. அதற்குப்பிறகு தானாகவே ஒப்பந்தம் ரத்தாகிவிடும். இது ஒரு பிரிவு இஸ்லாமிய வங்கியியல் அறிஞர்களின் கருத்து. அப்படி அதிக பட்சக் காலத்தை நிர்ணயிக்க முடியாது என்று இன்னொரு பகுதியினர் கருதுகிறார்கள். இருவரும் ஒன்றுபடுவது ஒரு விஷயத்தில் – முதரபாவுக்கு குறைந்தபட்ச நடப்புக் காலம் என்று எதையும் நிர்ணயம் செய்ய முடியாது.
இஸ்லாமிய வங்கியியலில் முதரபா இரண்டு கட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக, வங்கியில் பணம் போடுகிற வாடிக்கையாளர்கள் (depositor customers) செலுத்திய பணம் வங்கியின் முதலீட்டுக் கணக்கில் (Investment Account) வரவாகிறது. இந்த முதலீடு ஈட்டும் லாபத்தில் பங்குபெற அந்த வாடிக்கையாளர்கள் உடன்படுகிறார்கள். முதலீட்டு நிதியைத் திறமையாக நிர்வகிக்கும் ஒரு நிர்வாகியாக (Manager of funds) வங்கி செயல்படுகிறது.
முதரபாவின் இரண்டாவது கட்டம் வங்கியின் தொழில்முனைவர்களான வாடிக்கையாளர்கள் (Entrepreneurial customers) பங்குபெறுவது. தொழில் தெரியாமல் ஆர்வக் கோளாறு காரணமாக வெற்று உற்சாகத்தோடு   இப்படியானவர்களில் சிலர் நிதி உதவிக்காக வந்து நிற்கலாம். வங்கி, இவர்களை ஜாக்கிரதையாக அலசி ஆராய்ந்து, வேண்டுமென்றால் நிராகரித்து, ‘தொழில் கத்துக்கிட்டு வாங்கப்பா’ என்று அனுப்பி விடும்.
நிதித்துறை பரிபாஷையில் வட்டியை மூலதனத்தின் விலை (cost of capital) என்பார்கள். இந்த வட்டி சர்வதேச, உள்நாட்டுப் பணச்சந்தை (money market) நிலவரங்களால் தீர்மானிக்கப்படுகிறது.
வழமையான தொழில் கடன் வழங்கும் வங்கி, அந்தத் தொழிலில் என்ன லாபம் வந்தாலும் இப்படிச் சந்தை நிர்ணயித்த அடிப்படையில் வட்டியை வசூலித்து வருமானம் ஈட்டுகிறது. பெரும்பாலும் அது நிலையான வட்டி விகிதத்தில் (fixed interest rate) இருக்கும். ‘மிதக்கும் வட்டி’யை (floating interest rate) சாவகாசமாகப் பார்ப்போம்.
வட்டியை விலக்கிய இஸ்லாமிய வங்கியோ, முதரபா ஒப்பந்தம்மூலம் தகுதியான தொழில் முனைவர்களுக்கு நிதி உதவி செய்து, லாபத்தில் கணிசமான பங்கை அவர்களின் முழு ஒப்புதலோடு பெற்றுக்கொள்கிறது. வட்டி மூலம் பெறக்கூடிய வருமானத்தைவிட இது அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.
முதரபா போல் முக்கியமான இன்னொரு நிதி, உழைப்பு முதலீட்டு முறையான முஷாரகா (Musharakah). இது என்ன என்று அடுத்து அறிமுகப்படுத்திக் கொள்வோம்
பாகம் 4
முஷாரகா  (Musharakah) என்னன்னு கேட்கறீங்களா? நிதி முதலீடு செஞ்சு தொழில் நடத்தி லாபத்தைப் பங்கு பிரிச்சுக்கறது.
அட போப்பா, இதான் முதரபான்னு முன்னாடி சொன்னியே.
இல்லீங்க. ஒரு வித்தியாசம் இருக்குது. முதரபாவிலே, பேங்குக்காரங்க தான் முழுசு முச்சூடும் காசு முதலீடு செய்வாங்க. நீங்க உங்க தெறமையை, ஒழைப்பை முதலீடு செய்வீங்க. ரெண்டு பேரும் பங்காளி.
சரி முஷாரகாவிலே?
முஷாரகாவிலே ரெண்டுக்கு மேல்பட்ட பங்குதாரங்க இருக்கலாம். ஒவ்வொருத்தரும் ஆளுக்குக் கொஞ்சம் காசு கொண்டாந்து தொழில்லே முடக்கணும்.
இது நாம இங்கனக்குள்ள செய்யறதுதானே.
கொஞ்சம் பொறுமையாத்தான் கேளுங்களேன். தொழில் தொடங்க முந்தி,  முதரபா மாதிரியே, முஷாரகாவிலேயும் லாபத்தை என்ன விகிதத்திலே பங்கு பிரிச்சுக்கலாம்கிறதை பங்காளிங்க முடிவு செய்வாங்க. இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு.
‘என்ன பெரிசா சொல்லப்போறே. நானு ஒரு லட்சம் ரூபாய் முதல் போட்டிருக்கேன். நீ  ஐம்பதாயிரம் போட்டிருக்கே. தம்பி இன்னொரு ஐம்பதாயிரம் போட்டிருக்காரு. ஆக, என் பங்கு 50%, உன் பங்கு 25%, தம்பி இன்னொரு 25%. லாபம் வந்துச்சுன்னா, வராம விட்டுடுவோமா என்ன, வந்துடும் மாப்ளே.. வந்ததும் இதே விகிதத்திலே அதை பங்கு பிரிச்சுக்குவோம், சரிதானே?’
சரிதான் ஆனா சரியில்லை.
என்னத்தக் கன்னையா மாதிரி சொல்றியேப்பா.
லாபம் வந்துச்சுன்னா அதை என்ன விகிதத்தில் பங்கு போட்டுக்கலாம் என்கிறதுக்கு முதலீட்டு விகிதம் அடிப்படையா இருக்கணும்னு கட்டாயம் இல்லே. அது வேறே விகிதத்திலே கூட இருக்கலாம்.
சரி வேணாம் மாப்ளே, அமோகமாத் தொழில் நடத்தி, எனக்கு மாசா மாசம் ஐயாயிரம் ரூபா கொடுத்திடு. அதுக்கு மேலே ஒரு காசு வேணாம்.
இது சரியில்லே. இம்புட்டுப் பணம் எனக்குத் திருப்பி வரணும்னு முன்கூட்டியே முடிவு பண்ணி ஒப்பந்தம் போட்டுக்க முடியாது. அதான் சொன்னேனே, வர்ற லாபத்தை வச்சுத்தான் பங்கு பிரிச்சுக்கறது அமையணும். மத்த எதுவும் சரிப்படாது.
லாபம் சரி, நஷ்டம் வந்துச்சுன்னா? போகுது போ. லாபத்தை பங்கு வைச்சுக்க என்ன விகிதமோ அதே படிக்கு நட்டத்தையும் சுமந்துப்போம். ஆண்டவன் கைவிட்டுடுவாரா என்ன?
நிச்சயம் மாட்டார். இது ஷரியா படி சரிதான்.
ஏம்பா, என்னாலே காசு தரமுடியும். ஆனா, நானும் உன் கூட வந்து ஒர்க் ஷாப்புலே ஸ்பானர் பிடிச்சு வேலை பார்க்கணும்னா முடியாதே. குத்த வச்சா வவுத்துலே வலிக்குது எளவு. வாயுப் பிடிப்பு.
முடக்கத்தான் கீரை கறி வெச்சுச் சாப்பிடுங்க, வாயுப் பிடிப்பு எல்லாம் துண்டக் காணோம், துணியக் காணோம்னு ஓடிடும். இல்லாட்டாலும் முஷாரகாவிலே எல்லா பங்காளிங்களும் தொழில்லே ஈடுபடணும்னு கட்டாயம் ஒண்ணும் இல்லே. நிதியை மட்டும் முதலீடு செஞ்சுட்டு அக்கடான்னு இருக்கலாம். sleeping partner. என்ன, லாபத்தில் குறைந்த பட்ச விகிதம் தான் அப்போ உங்களுக்கு வரும். நிச்சயம் உங்க முதலீட்டு விகிதத்துக்கு குறைஞ்சதா இருக்காது அது.
சரி, முஷாரகாவிலே பேங்குக்காரங்க எப்படி உள்ளாற புகுந்தாங்க?
ஏழெட்டு பங்காளியிலே அவங்களும் ஒரு பங்காளி. அம்புட்டுத்தான். பேங்குக்காரங்க மொத்தமா இருக்கப்பட்ட நிதியை நாலஞ்சு முதரபாவிலே முடக்காம, சின்னதும் பெரிசுமா நூறு முஷாரகாவிலே முடக்கினா நிறையப் பேர் முன்னேறி வர முடியுமில்லியா?
முஷாரகா கூட்டணி எம்புட்டு நாள் வச்ச்சிருக்கலாம்னு ஷரியாவிலே ஏதாச்சும் சொல்லி இருக்கா?
அப்படி கால அளவுல்லாம் கிடையாதுங்க. வருஷக் கணக்கா நிதானமா நடத்தி லாபத்துக்கு மேலே லாபம் பார்க்கிற ஸ்டடியான முஷாரகா – permanent musharakah ஒரு வகை. வருஷா வருஷம் லாபத்தோட கூட, முதலீட்டிலே இருந்தும் லாபத்தைப் பொறுத்து திரும்ப வாங்கிக்கிட்டு சீக்கிரம் கூட்டணியை கலாஸ் பண்ணிக்கற diminishing musharakah இன்னொரு வகை.
நாலு பேர் கூட்டு முயற்சியிலே முஷாரகா ஏற்படுத்தி ரெண்டு வருஷம் நடக்குது. அஞ்சாவதா ஒருத்தர் நானும் புதுசா கூட்டு சேரட்டுமான்னு கேட்கறார். ஷரியா என்ன சொல்லுது? அவரையும் ஆட்டத்துலே சேர்த்துக்கலாமா?
தாராளமா சேர்த்துக்கலாம். இருக்கப்பட்ட எல்லா பங்குதாரங்களும் முழு மனசோடு ஒப்புக்கிட்டா போதும்.
லாபத்தை பங்கு போடறது பத்தி சொன்னே. அதெல்லாம் சரிதான். நாலுலே ஒரு பாகஸ்தர் நாள் முச்சூடும் உழைக்கறார். மத்தவங்க அப்பப்ப கௌரவ நடிகர் மாதிரி வந்து போறாங்க. மெயின் ஆக்டருக்கு எக்ஸ்ட்ராவா சம்பளம், பேட்டான்னு ஏதாச்சும் அதிக வருமானம் வருமா?
கிடைக்க வழி இருக்கு. முஷாரகா ஒப்பந்தம் போடும்போதே இந்த விஷயத்தையும் அதில் போட்டு வச்சுக்கணும். அவ்வளவுதான்.
எல்லா முஷாரகா ஒப்பந்தமும் எந்திரன் கடைசியிலே  ஏகப்பட்ட  ரஜனி வருவாரே, அது மாதிரி அச்சு அசலா ஒரே போலதானே?
இங்கே மூணு விதம் இருக்குங்க. நாம் இதுவரை சொல்லிட்டு வந்தோமே, பொதுவா நடப்பிலே இருக்கற இதை ஷிர்கத் உல் அம்வல் முஷாரகா Shirkat-ul-amwal  அப்படீன்னு சொல்வாங்க. நாலஞ்சு பேர் முதலீடு செஞ்சு கம்ப்யூட்டர், டிவி, வாஷிங் மிஷின் ரிப்பேர் செய்யற சர்வீசிங் தொழில் நடத்தறாங்கன்னு வச்சுக்குங்க. ஒவ்வொரு முறை இப்படி சர்வீஸ் செஞ்சு கிடைக்கற ஃபீஸை ஒப்பந்த விகிதத்துலே பங்கு பிரிச்சுக்கறது ஷிர்கத் உல் அமல் முஷாரகா Shirkat-ul-Amal . நிதி முதலீடு இல்லாம வேறே யாரோ உற்பத்தி செஞ்ச பொருளை வித்துக் கொடுக்கற கமிஷன் ஏஜன்சி நடத்தி, வரவை பங்கு போடறது ஷிர்கத் உல் ஊஜா Shirkat-ul-wujooh.
முஷாரகா கூட்டணியிலே இருந்து வெளியே வரணும்னா?
ஏங்க, இதென்ன தேர்தல் கூட்டணியா, நினைச்ச போது வெளியே வர்றதுக்கும் உள்ளே போறதுக்கும். முன்னறிவிப்போட, மத்த பார்ட்னர்களுக்குப் போதுமான அவகாசம் கொடுத்து அப்புறம் வெளியே வர வழி இருக்கு. வெளியே வர்றவரோட பங்கை அவர் போட்ட முதலுக்கு மேலே கொடுத்தோ குறைச்சுக் கொடுத்தோ மத்தவங்க வாங்கிக்கலாம். இல்லே, முஷாரகாவையே முடிவுக்குக் கொண்டு வரலாம். பொதுவா கோடி கோடியா நிதி முடக்கி தொடங்கின தொழில்லே திடீர்னு ஒருத்தர் அம்போன்னு விட்டுட்டுப் போனா கஷ்டமாச்சே. அதுக்காக ஒப்பந்தம் போடற போதே இதைப் பத்தி யோசிச்சு, விலகறது எப்படீன்னு பதிஞ்சு வச்சுக்கிட்டா பிரச்சனை இல்லே.
யாராவது ஒரு பாகஸ்தர் திடீர்னு மூச்சு விட மறந்து போய்ட்டார்னா?
இதுவும் பிரச்சனை இல்லே. அவரோட வாரிசுகள் கூட்டணியை தொடரலாம். இல்லே அவங்களுக்கு உண்டான தொகையை வாங்கிக்கிட்டு வெளியே வரலாம்.
மத்தபடிக்கு முஷாரகா அதும்பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும் போல.
ஆமா. ஒரு சின்ன விஷயம். யாராவது ஒரு பார்ட்னர் திடீர்னு மனநோய் கண்டு சுத்தி இருக்கறது, நடக்கறது யார் என்னன்னே தெரியாத அளவு பரிதாபமா ஆகிட்டார்னா, முஷாரகா நின்னு போயிடும்.
இன்ஷா அல்லாஹ், நமக்கு அப்படி எதுவும் நடக்காது. வாங்க, காய்கறி, கடல் வாழைக்காய் ஹோல்சேல் பிசினஸ் நடத்த ஒரு முஷாரகா ஆரம்பிக்கலாம்.
இருப்பா. வீட்டுலே காய்வெட்டா ரெண்டு கிலோ தக்காளி வாங்கிட்டு வரச் சொன்னா. வாங்கிக் கொடுத்துட்டு மீதிக் காசு தேறிச்சுன்னா வரேன்.
அத்தியாயம் 5
முஷாரகா, முதரபா இப்படி இஸ்லாமிய வங்கியியல் படியான ரெண்டு நிதியளிப்பு  பற்றிப் பார்த்தோம். இந்த ரெண்டும் முதலீட்டு அடிப்படை (equity financing). இதோட கூட  கொள்முதல் செஞ்சு கொடுத்து சம்பாதிக்கறது (debt financing)  பற்றியும் தெரிஞ்சுக்கறது அவசியம்னேன்.
இது இஸ்லாமிய பேங்கு சம்பந்தப்பட்டதுதானே.
ஏம்ப்பா, நல்லவன் வாழ்வான்னு சினிமா வந்துச்சுன்னா, திரையிலே பத்து நிமிசத்துக்கு ஒருமுறை யாராச்சும் டைட்டிலைச் சொல்லிக்கிட்டு குறுக்கும் நெடுக்கும் போகணும்னு எதிர்பார்ப்பியா என்ன? நான் இம்புட்டு நேரம்  உன்னியக் கூப்பிட்டு வச்சுச் சொல்லிட்டு இருக்கறது எல்லாம் இஸ்லாமிய வங்கி பற்றித்தான்.
முறுக்கிக்காதீங்க மாப்ளே. நமக்குக் கொஞ்சம் ஆர்வக் கோளாறு. ஆமா, என்ன சொன்னீங்க, சரக்கு கொள்முதல் செஞ்சு வித்து காசு பாக்கறதுன்னுதானே. அதான் எனக்குத் தெரியுமே. நம்மூர் மயிலஞ்சந்தையிலே மண்டிக்கடை  பெரியப்பு செய்வாகளே. ப்பூ இம்புட்டுத்தானா இஸ்லாம் பேங்கு? சரி மேலே சொல்லுங்க.
அதான் உனக்குத் தெரியும்னே. அப்புறம் என்ன ம-வுக்கு மேலே சொல்றதாம்?
சும்மா கேட்டுக்கிட்டே திண்ணையிலே உக்காந்து குரல் விடலாம் இல்லே. இஸ்லாம்னு யாராச்சும் ஆரம்பிச்சாலே கசாப்பையும் பின் லாடனையும் நினைச்சுக்கணும். சடசடன்னு உதார் விடணும். அதானே சபையிலே எடுபடும்?
போவுது. நான் ஆரம்பிச்சா முடிச்சுட்டுத்தான் நிறுத்துவேன். என்ன சொல்லிட்டு இருந்தேன்?
கொள்முதல்னு ஆரம்பிச்சீங்க.
கவனிச்சுக் கேளு. கொள்முதல் மூலம் பேங்கு கொடுக்கற நிதி உதவிக்கு முராபஹா (Murabahah)ன்னு  பேரு. சந்தைச் சரக்கு முராபஹா (commodity murabahah)ம்பாக இதைப் பொதுவா. ஆமா, மண்டிக்கடை பெரியப்புவை இளுத்தியே, அவுககிட்டே உன் யாவாரம் எப்படி?
முழு முத்தலா ரெண்டு மூடை கத்தரிக்காயைக் கொள்முதல் செஞ்சு வச்சுப்பாரு. நம்ம தலை தட்டுப்பட்டதும் வெள்ளச்சி மவனே வாடா, உனக்காக ரேட்டுப் படிய வச்சு பச்சு பச்சுன்னு சாளூர் பிஞ்சுக் கத்தரிக்கா வாங்கி வச்சிருக்கேண்டா. எடுத்துப் போய் நல்ல லாபம் வச்சு வித்துட்டு இன்னிக்கு ஆயிரம் நாளைக்கு மிச்ச ஆயிரம் கட்டு. நான் உன் கிட்டே தண்ட வட்டி எல்லாம் கேட்கலே. பெரியப்புவாச்சேன்னு இக்பால் கடையிலே பரோட்டா சால்னா வாங்கிக் கொடுக்க மாட்டியா என்ன? அப்படியே நூத்துக்கு பத்து ரூபா, வேணாம் ஒம்பது வட்டி கொடுத்திடணும்.  இதான் அவுக போடற கண்டீசனு.
அரமணை வாசல் இக்பால் கடையிலே பரோட்டா திங்கற போதாவது அவுக என்ன விலைக்கு வாங்கினாகன்னு பெரியப்பு சொல்லுவாகளா உங்கிட்டே?
அதெப்படி மாப்ளே. அது தொழில் ரகசியம் ஆச்சே.
முராபஹாவிலே இதுக்கு நேர் மாறு. இன்ன விலைக்கு வாங்கினேன்’பா. இம்புட்டு அதிகம் வச்சு விக்கறேன் உங்கிட்டே. உடனே  தரவேணாம். தவணை முறையிலே கொடுத்தாலும் சரிதான்னு முதல்லேயே தொறந்து ஓப்பனா சொல்லிடணும்.
அட, இது புதுசா இல்லே இருக்கு.
அதான் உனக்குத் தெரிஞ்ச விசயம்தானே.
நக்கல் பண்ணாதீக மாப்ளே. ஆமா, என்ன பேரு சொன்னீக, இஞ்சி முரப்பாவா?
முராபஹா. இஸ்லாமிய பேங்குகள் உலக முச்சூடும் பெரிய அளவிலே பயன்படுத்தற கடன் வழங்கு முறை இது. டெலிவிஷன் பெட்டி வாங்க பேங்கு கடன் வேணுமா? கம்ப்யூட்டர் வாங்கணுமா?
என்ன உலகத்துலே இருக்கீக மாப்ளே. டெலிவிஷன் பெட்டி எல்லாம் இலவசமா சர்க்கார் இல்லே தரணும். கம்ப்யூட்டரும் வேணாம். எலக்-ஷன் வந்துட்டு இருக்கே.
சரி, ஏற்றுமதி   வர்த்தகம் பண்றீங்கன்னு வச்சுக்கலாம்.
தமிழ்லே சொல்லுங்க மாப்ளே.
எக்ஸ்போர்ட். தால்சா எக்ஸ்போர்ட். ரெண்டு மாசம் டப்பாவிலே அடைச்சு வச்சாலும் கெட்டுப் போகாம, மைக்ரோ அவன்லே சூடாக்கினதும் கமகமன்னு மசாலா மணத்துக்கிட்டு பசியைக் கிளறி விடற பருப்பு-மட்டன் சோறு.
நம்ம கூத்தாநல்லூர் சாபு அண்ணன் கிட்டே தால்சா ரெசிபி வாங்கி தூள் கிளப்பிடலாம். ஆமா, எக்ஸ்போர்ட் தொழில்னு ஆரம்பிச்சா அதை உற்பத்தி செய்ய மூலப்பொருள் வேணுமே. நம்ம கேசிலே பருப்பு, நல்ல மட்டன், பட்ட மொளகா, நயம் நெய், எண்ணெய் எல்லாம் அப்பப்ப வாங்கணும். காசு வேண்டி வரும் அதுக்கு.
பேங்குலே எக்ஸ்போர்ட் கடன் வாங்கிக்கலாம். மேல்நாட்டு ஆர்டர் கைமேல் இருந்தா, ஏற்றுமதி முன்கடன் அதான் Pre-shipment loan தருவாங்க.
அது சரி, நம்ம பேங்குலே போய் நின்னு.
வேணாம். சர்க்காரையும் சர்க்கார் பேங்கையும் பழிக்காதே. தேசத் துரோகின்னுடுவாங்க. யாரையும் ஒப்பிடாம பேசினோமா போனோமான்னு இருக்கலாம். என்ன சொல்ல வந்தேன், எக்ஸ்போர்ட் ப்ரீ ஷிப்மெண்ட் கிரடிட்.  முராபஹாவிலே இதை எப்படிச் கையாளறது தெரியுமா?
சொன்னாத்தானே தெரியும்?
முராபஹாவிலே இதைச் செய்யணும்னா, பேங்குலே போய் நீ யார் யார் கிட்டே உனக்கான கச்சாப் பொருளை வாங்கினா நல்லா இருக்கும், என்ன விலை நிலவரம்னு தகவல் கொடுத்துடுவே. பேங்கும் உன் சார்பிலே தேடிக் கண்டுபிடிக்கலாம். வேண்டியதை எல்லாம் அவங்க கொள்முதல் செஞ்சிடுவாங்க.
பொறகு?
உன்னை ஒரு நடை வந்துட்டுப் போகச் சொல்வாக பேங்குக்காரவுக. என்ன விலைக்கு எதை வாங்கினதுங்கற விவரத்தை பொறுமையாச் சொல்லிட்டு, இந்த விலைக்கு வாங்கினது, இதைக் கொள்முதல் செய்ய, லாரியிலே கொண்டு வர, பனிக்கட்டியிலே பத்திரமா வைக்க இன்னின்ன செலவு, உங்க கிட்டே நான் இதுக்குக் கூடுதலா இந்தத் தொகையை வாங்கிக்கப் போறேன். ஆகக்கூடி என் லாபம் இதான்னு பேங்கு உங்க கிட்டே சொல்லிடும். அடக்க விலையை நேர்மையா அறிவிச்சு (honest declaration of cost price), இதுலே லாபமா இவ்வளவு வைக்கப் போறேன்னு அறிவிக்கற  கடமை முராபஹாவிலே உண்டு.
ஓஹோ.  இது மட்டும் இஸ்லாமிய வங்கி இல்லேன்னா அட்டகாசமா ஆஹா’ங்கலாம்.
கடனை அடச்சு முடியற வரை கொள்முதல் செய்து கொடுத்த மூலப் பொருள்களோட உரிமை பேங்குக்கு இருக்கும். இது  உன் சார்பிலே பொருளை வாங்கிப் பாதுகாப்பா உனக்கு விற்கறது. பயு-அல்-அமனா bayu-al-amanah (fiduciary sale).  வாங்கின விலைக்கே வித்துச்சுன்னா அது தவ்லியா tawliyah (sale at cost). வாங்கின விலைக்குக் குறைவா வித்தா, அது வடியா wadiah (sale at specified loss).  தவ்லியாவும், வடியாவும் வங்கித் தொழில்லே அபூர்வம்தான்.
புரியுது மாப்ளே. பேங்கும் வியாபாரத்துலே நாலு காசு பார்க்க வேணாமா?
முதரபா, முஷாரகா மாதிரி இங்கே பேங்க் ரிஸ்க் எடுக்கறதுக்கு, அதாம்பா, தொழில் சக்சஸ் ஆகுமாங்கிற சவாலை சந்திக்கற தேவை எல்லாம் இல்லை. அங்கே அந்த ரிஸ்க் இருந்தும் முதலீடு செஞ்சதாலே லாபத்திலே இத்தனை சதவிகிதம் எனக்குன்னு உரிமையோட ஒப்பந்தம் போட்டுக்கலாம். முராபஹாவிலே ரிஸ்க் கிடையாது. கொள்முதல் விலைக்கு மேலே இம்புட்டு ஏத்தி வச்சிருக்கு, தர்றீங்களான்னு கேட்டு ஒப்பந்தம் போடணும். அதுக்கும் மேலே ஏகப்பட்ட லாபம் கொட்டோ கொட்டோன்னு கொட்டினாலும், கஸ்டமருக்குத்தான் ஆதாயம். பேங்குக்கு ஒப்பந்தப்படியான ஒரே தொகைதான் கிடைக்கும் (fixed income). ஆனா அது தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கும் (steady stream of income).
சரி மாப்ளே, பேங்கு வாங்கி எனக்கு வித்துடுது. நான் மாசாமாசம் பணம் கட்ட கொஞ்சம் சுணங்கிடுத்துன்னா? வீட்டுக்குப் போனாத்தான் ஆயிரத்தெட்டு செலவு தலைமுடியை சிடுக்கு வாரிக்கிட்டு எப்படா வருவான்னு காத்துக் கிடக்கே?
தாமதமா தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்தினா அபராதத் தொகை வாங்க பேங்குக்கு அதிகாரம் உண்டு. அட போய்யா, நம்ம ஊரு தண்ட வட்டி தானேன்னு உடனே ஆரம்பிச்சுடாதே. இது கொஞ்சம் வித்தியாசம். அபராதத் தொகையை பேங்கு தன்னோட லாபக் கணக்குலே சேர்த்துக்க முடியாது. ஏதாவது நல்ல காரியத்துக்கு செலவழிச்சே ஆகணும்னு ஷரியா சொல்லுது. அபராதத் தொகையை பேங்குலே செலுத்தக்கூட வேணாம். கஸ்டமரே அங்கீகரிக்கப்ப்பட்ட தான தர்மத்துக்கு மொய் எழுதிட்டு ரசீதைக் கொணாந்து காண்பிச்சா போதும்.
முராபஹாவிலே முக்கியமான அம்சம்னு வேறே எதைச் சொல்வீக மாப்ளே?
முக்கியம்னா, அச்சு அசலா பொருளை கொள்முதல் செஞ்சு அதில் லாபம் வச்சு விக்கற காரியத்தை பேங்க் செய்யணும். பொருளே இல்லாம வெறும் கையை முழம் போட்டு காசு காரியத்தைக் கணக்குப் பண்ணி யாவாரம் செய்ய முடியாது. சில இஸ்லாமிய பேங்குகள்   பிசினஸ் பிடிக்கறதுக்காக இப்படி டம்மி முராபஹா செய்யறது உண்டு. அந்தந்த அரசாங்கத்துலே, இல்லேன்னா, கவனமா இருக்கற கஸ்டமர்களாலே இது கண்டு பிடிக்கப்பட்டு சீர்திருத்தப்படறதும் உண்டு. எங்கேயோ ஒண்ணு ரெண்டு இந்த மாதிரி போலியான கணக்கு வழக்கு நடந்துச்சுன்னு சொன்னா, முழு இஸ்லாமிய வங்கியும் இப்படித்தான் ப்ராடு பசங்கன்னு சொல்லிட்டு மகாமேதை போல போறவங்களும் உண்டுதான்.
அவங்க எங்கேயும் தான் இருப்பாங்க மாப்ளே. ஆமா, ஒரு சந்தேகம். வீடு கட்ட, கட்டின வீட்டை வாங்க இப்படியான உருப்படியான காரியத்துக்கு, இங்கே எல்லாம் வாங்கற வீட்டையே அடமானம் வச்சு ஹவுசிங் லோன் போடுவோமே. இஸ்லாமிய பேங்குலே அதுல்லாம் உண்டா?
இஸ்லாமிய பேங்குலே அடமானம் (mortgage) கிடையாது. பதிலா எல்ஜாரா (EIjara wa Eiqtin). பேங்கு வீட்டைத் தன் பெயர்லே வாங்கி, அப்புறம் உனக்குக் குடிபோகக் கொடுத்து, தவணை முறையிலே நீ கடன் அடச்சு முடிச்சதும் வீட்டை உன் பெயருக்கு மாத்தும். இப்படி, ரெண்டு தடவை வீட்டோட உரிமையை மாற்ற டாக்குமெண்ட் போட்டு, ரெண்டு தடவை ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டிப் போகும். அதுக்குக் கொஞ்சம் செலவு பிடிக்கும் தான்.
வேறே எதுக்கெல்லாம் எல்ஜாரா பிரயோஜனப்படும்னு சொல்லுங்க மாப்ளே.
எல்ஜாரா மோட்டார் பைக், கார் வாங்க,   பொருள் வாங்கி உபயோகிச்சுட்டு அப்புறம் இஷ்டப்பட்டா அதை அப்போதைக்கு கிடைக்கக்கூடிய விலை கொடுத்து வாங்க, வேணாம்னா திரும்ப எடுத்துட்டுப் போகச் சொல்றதுக்கு வசதி.
லீஸ் அக்ரிமெண்ட் போடறதா மாப்ளே?
ஆமா, இதுக்கும் எல்ஜாரா தான் பொதுவா உபயோகிக்கறது. சரி, பாய் சலாம்.
சலாம் பாய். போய்ட்டு அப்புறம் வாங்கிறீங்களா? வீட்டுலே தால்சா செஞ்சிருக்காகளா தங்கச்சி?
அது இல்லேப்பா, இதுவும் இஸ்லாமிய வங்கியியல்லே வர்ற சங்கதிதான். Bai Salam.  என்னன்னு அப்புறமா பார்ப்போம்
அத்தியாயம் 6
என்ன மாப்ளே ஏகத்துக்கு ரோசனையோட நடந்து போய்ட்டு இருக்கீக? ஒண்ணே முக்கால் லட்சம் கோடிக்கு எத்தனை முட்டை  வாங்கி ஆப்பாயில் போடலாம்னா?
அட ஏன்’பா, வகுத்தெரிச்சலைக் கிளப்பறே. நம்மளைத்தான் கூமுட்டை ஆக்கிட்டானுகளே அம்புட்டு மகராசாக்களும் சேர்ந்து. போகுது போ. எந்தக் கதை கந்தலானா என்ன, நம்ம கதையைக் கவனிப்போம். பாய் சலாம் பத்திச் சொன்னேனே, நியாபகம் வச்சிருக்கியா?
எங்கே சொன்னீக? சொல்ல ஆரம்பிச்சபோது வவுத்துலே மணி அடிச்சுடுத்து. ஏறக்கட்டி வச்சுட்டு பெறகு சொல்றேன்னு எறங்கி இல்லே போய்ட்டீக. சரி, இப்ப வேளை வந்திருக்காப்பல. எடுத்து விடறது.
பாய் சலாம், சரியாச் சொன்னா பே-அல்-சலாம் (bay al-salam)  இருக்குதே, சமாசாரம் இதான்னு கோடி காட்டலாம்தான். நீ உடனே பேங்குக்குக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்னு சாடுவே. சந்தைக்கடை யாவாரத்துலே ரெகுலரா செய்யறதை பேங்குக்குள்ளாற நொளச்சு என்னாத்துக்கு லோல்படணும்னு தோணும்.  இதுக்கு கொஞ்சம் போல முராபஹா சாயலும் உண்டு.
தாடியை ஒட்டி வாத்தியார் படத்துலே டபுள் ஆக்ட் கொடுத்த மாதிரி முராபஹாவுக்கு அங்கே இங்கே டச் அப் பண்ணி விட்டா பே-அல்-சலாம், சரியா?
அப்படி இல்லே. முராபஹாவுலே அட்வான்ஸ் எல்லாம் கட்ட வேணாம். வாங்கற விலை, விக்கற விலை, லாபக் கணக்கை சொல்லணும். பே சலாம்லே இது கிடையாது. இங்கே பொருளை வாங்கப் போறவர் விற்கப் போறவரோட முன் கூட்டியே ஒப்பந்தம் போட்டுப்பார். அதிலே தெளிவா என்ன பொருள், தரம் எப்படி இருக்கணும், என்னிக்குக் கையிலே வரணும், எங்கே வச்சு டெலிவரி தரணும் இப்படி எல்லா விவரமும், அதோட கூட ஒப்பந்தத் தொகையும் குறிச்சிருக்கும். பொருளோட மதிப்பையும் வாங்கறவர் முன் கூட்டியே முழுசாக் கொடுத்துடணும்.
ஒண்ணும் புரியலே மாப்ளே.
சரி, நீ  கோழி முட்டை சப்ளையர். எனக்கு பெரிய அளவுலே முட்டை கொள்முதல் செய்ய வேண்டி வந்திருக்கு. நான் உங்கிட்டே சொல்றேன் – பத்தாயிரம் முட்டை, அதிலே அஞ்சாயிரம் ஒயிட் லெக்கான், மீதி நாட்டுக் கோழி முட்டை. சந்தடி சாக்குலே வாத்து முட்டையை கலந்துடக் கூடாது. புதுசா இட்டதா, கெட்டுப்போன முட்டை குறைஞ்சதா இருக்கணும். நீயா முட்டை போடறியோ, அட ஒரு பேச்சுக்குச் சொன்னேம்பா. நீயா கோழி வளர்த்து முட்டை போட வச்சுத் தர்றியோ, இல்லே வெளியிலே வாங்கித் தர்றியோ, எனக்குப் பிரச்சனை இல்லை. அப்படியே வெளியே வாங்கித் தந்தாலும் இந்த விலைக்கு வாங்கறேன்னு எல்லாம் என்கிட்டே நீ விவரம் சொல்ல வேணாம். அடுத்த மாசம் பத்தாம் தேதி காலையிலே அத்தனை முட்டையும் என் வீட்டுலே டெலிவரி கொடுத்துடணும். நாள் தவறக் கூடாது. பத்தாயிரம் கோழி முட்டைக்கான முழுத் தொகையா முப்பதாயிரம் ரூபாய்,  உனக்கு இப்பவே அட்வான்ஸா கொடுக்க ரெடி. சம்மதமா? ஸ்டாம்ப் பேப்பரை கொண்டு வா. அக்ரிமெண்ட் போட்டுப்போம்.  இல்லியா? நடையைக் கட்டு.
பிரியுது மாப்ளே. சாதாரண யாபார நடைமுறையிலே பே சலாம் எங்கிட்டு உபயோகமாகுது?
பொருளை கொள்முதல் செய்யறது தவிர வீடு கட்டறது, கிணறு வெட்டறது இப்படி சர்வீஸ்   காண்ட்ராக்ட் போடவும் இது முக்கியமா பிரயோஜனப்படும். பே-அல்-சலாம்லே பேங்கு எப்படி வர்றதுன்னு அடுத்தாப்பலே கேப்பியே?
பின்னே, கேட்காம இருப்பேனா?
சீவல்பட்டி கிழக்காலே, முத்துப்பட்டி மேற்காலே, ராகினிப்பட்டி வடக்காலேன்னு நீ கைக்குட்டை சைசுக்கு எட்டுப் பட்டியிலும் நிலம் வாங்கிப் போட்டு சாகுபடி செஞ்சு வச்சிருக்கியே. அந்த அறுவடையை எல்லாம் அரசாங்கம் கொள்முதல் செய்யப் போறதுன்னு வச்சுக்க. உன் கிட்டே இருந்து மட்டும் இல்லை. நம்ம புஞ்சைக்காட்டு விவசாயிங்க அத்தனை பேர் கிட்டே இருந்தும் மொத்தக் கொள்முதல்.
செஞ்சா, அடுத்த எலக்சன்லே காசே வாங்காம இவுகளுக்கே ஓட்டு போட்டுடுவமில்லே.
அப்ப இத்தனை நாளா வாங்கிட்டா ஓட்டு போடறே?
ரெண்டு மூணு பேர் வந்து வற்புறுத்திக்  கொடுத்தா ஒரு மரியாதைக்கு வாங்கி வச்சுக்கறதுதான். நமக்கு வேலை வைக்காம ஓட்டை வேறே  யாராவது போடறதுதான். நாம எலக்சன் அன்னிக்கு கேபிள் டிவியிலே நாலு படம் பார்த்துட்டு ஆறுமுகம் கடை அல்வா வாங்கித் தின்னுட்டுத் தூங்கறதுதான்.
திருத்தவே முடியாதுய்யா உன்னிய. தொலையுது. என்ன சொல்லிட்டு வந்தேன்?
ஒயிட் லக்கான் முட்டை.
அதைக் கடந்து வரமாட்டே பாத்தியா. விவசாயக் கொள்முதல் பத்தி இல்லே பேசிட்டு இருந்தோம்.
ஆமா மாப்ளே. ஆனா, அரசாங்கம் விவசாயிகளுக்கு விதை வாங்கறது, உரம் வாங்கறது, நாத்து நடற கூலி இப்படி எல்லாத்துக்கும் ஆளுக்கு, பயிருக்குத் தகுந்த மாதிரி அட்வான்ஸ் தொகை கொடுத்தா இல்லே விவசாய வேலை மளமளன்னு நடக்கும்?
அரசாங்கம் தயார்தான். ஆனா, இதையெல்லாம் செய்ய அவுக கிட்டே ஆள் அம்பு இல்லையே.
ஆமாமா, கெசெட்டட் ஆபீசர்னு போர்ட் வைச்சுக்கிட்டு இருக்கறவகளுக்கு எல்லாம் எம்.எல்.ஏ, மினிஸ்டர் பின்னாடி ஜீப்பைப் போட்டுக்கிட்டு ஓடவே நேரம் சரியா இருக்கு. சரியா ஒண்ணுக்கிருக்கக் கூட நேரம் கிடைக்கறதில்லியாமே.
ஜிப்பைப் போட்டுக்கிட்டு ஓடறாகளோ, ஜீப்பைப் போட்டுக்கிட்டு ஓடறாகளோ, அவுகளை விடு. பேங்குக்கு வா. பேங்குலே நீ, நான், நம்ம அத்தாச்சி மகன், அவனுக்கு அடுத்த வீட்டுக்காரன் இப்படி அத்தனை பயபுள்ளைகளும் கணக்கு வச்சிருக்கோமே. சர்க்காருக்கு இது சவுகரியம் இல்லியா?
எப்படி மாப்ளே?
அரசாங்கம் பேங்கோடு ஒரு பே சலாம் ஒப்பந்தம் போட்டுக்கும். இத்தனை க்விண்டால் இந்தப் பயிர், இந்த ஈரப்பதத்துலே இன்ன தேதிக்கு சர்க்கார் கோடவுண்லே இங்கன கொணாந்து சேர்த்திடணும்னு. பணத்தை மொத்தமா அட்வான்சா பேங்குலே அடச்சுடும்.
பேங்கு என்னிய மாதிரி விவசாயிகளோடு தனித்தனிய பே சலாம் போட்டுக்கிட்டு பணத்தைப் பட்டுவாடா பண்ணிடும். அறுவடையான உடனே மகசூலை நேரே அரசாங்க கோடவுணுக்கு அனுப்பிட்டா கதை மங்களமா முடிஞ்சிடும். அதானே?
தேறிட்டே போ நீ. உனக்கு இனிமே பாடம் சொல்ல அவசியமே இல்லே.
ஏதோ கொஞ்சம் புரிய ஆரம்பிச்சிருக்கு மாப்ளே.  ஆமா, பே சலாம்லே முழுத் தொகையையும் கஸ்டமர் அட்வான்சாக் கட்டிடணும்னு சொன்னீங்களே. பொருளை வாங்கிட்டு, மாசத் தவணையிலே பணம் கட்ட முடியாதா?
ஷரியா படிக்கு, அது பே சலாம் ஆகாது. முழு அட்வான்ஸ், சொன்ன தரத்துலே, சொன்ன இடத்துலே சொன்ன தேதிக்கு டெலிவரி (future delivery). இது தான் பே சலாமுக்கு அடிப்படை. ஆகவே, தவணை முறையிலே கஸ்டமர் பணம் கட்டணும்னா, பொருளை உற்பத்தி செய்யற சப்ளையரோடு பேங்க் ஒரு பே-சலாம் காண்ட்ராக்ட் போட்டுக்கும். வாங்கற கஸ்டமரோடு ஒரு முராபஹா போட்டுக்கும். பிரச்சனை தீர்ந்தது.
எல்லாப் பொருளையும் விற்க, வாங்க நிதி உதவி செய்ய பே சலாம் போட்டுக்கலாமா?
தங்கம், வெள்ளி, வைரம் இப்படி விலையுயர்ந்த, உடனே டெலிவரி செய்யக் கூடிய பொருட்களுக்கு (spot delivery) பே சலாம் போட முடியாது. நாணய மாற்றும்பாங்களே currency exchange. அதான்பா, அமெரிக்க டாலரைக் கொடுத்திட்டு பிரிட்டீஷ் பவுண்டு வாங்கறது போல காண்ட்ராக்ட். இதுக்கும் பே சலாம் வராது.
லீஸ் அக்ரீமெண்ட், அடமானம் இப்படியான சமாச்சாரத்துக்கு பிரயோஜனப்படுற காண்ட்ராக்ட் இருக்குன்னு சொன்னீங்களே. பேரு என்ன?
மறந்துட்டே பாத்தியா, எல்ஜாரா.
மாப்ளே, அடமானத்துக்கு இப்போ எல்லாம் பேங்குக்குப் போனா, மிதக்கற வட்டிங்கறாங்களே அது என்ன? இஸ்லாமிய பேங்குலே இல்லேதான்.  பொதுவா நாட்டு நடப்பாச்சே. அதான் கேட்டேன்.
வீட்டுக் கடனுக்கு ஒரே வட்டி விகிதம் வைக்காம (fixed interest rate), ரிசர்வ் பேங்க் ஆகக் குறைஞ்ச பட்சக் கடன் விகிதமா அவ்வப்போது அறிவிக்கற ரேட், பேங்க் ஆஃப் இங்கிலாந்து அப்போதைக்கு அப்போது வெளியிடற பேங்க் ரேட் (LIBOR – London Inter Bank Offer Rate) இதை அடிப்படையா வச்சு வீட்டுக் கடன் வட்டி விகிதம் மாறிக்கிட்டே இருக்கும். இந்த அடிப்படை ரேட் எகிறிச்சுன்னா பேங்குக்கு அதிக லாபம். குறைஞ்சா கஸ்டமருக்கு யோகம்.
இஸ்லாமிய பேங்குலே இந்த சவுகரியம் கிடையாதே மாப்ளே.
இருக்கே. முஷாரகா அல்-முடனகிசா Musharaka al-Mutanaqisa. நீ வீடு வாங்கணுமா. பேங்க் உன்னோடு ஒரு முஷாரகா போட்டுக்கும். பேங்க் 80% பணம் முடக்கும்னு வச்சுக்க. நீ பாக்கி 20% முடக்குவே. வீட்டை வாங்கி நீ குடி போனதும், பேங்குக்கு குடக்கூலி கொடுப்பே.  பேங்க் முடக்கின தொகைக்குக் கிடைக்க வேண்டிய வருமானத்தோட அடிப்படையிலே குடக்கூலி இருக்கும். அப்பப்ப, மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து, இது கூடலாம், குறையலாம். மாசா மாசமோ வருசத்துக்கு ரெண்டு, நாலு தடவையோ பணம் கட்டி, பேங்கு போட்ட முதலீட்டை நீ கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்கலாம். உன் முதலீடு ஏறி, பேங்க் முதலீடு குறையக் குறைய குடக்கூலியும் குறையும். முழுக்க உன் வீடு ஆனதும் கடனும் லேது, குடக்கூலியும் லேது.
நல்லாத்தான் இருக்கு. அதே மாதிரி ஹையர் பர்ச்சேஸுக்கு, அதான் மாப்ளே, மடேடார் வேனை ஹயர் பர்ச்சேஸ்லே எடுத்து மாசா மாசம் வாடகை கொடுத்திட்டு, அப்புறம் இஷ்டம் இருந்தா கிலோவுக்கு இத்தனைன்னு பேரிச்சம்பழ விலை போட்டு சொந்தமா வாங்கிக்கறது. அதுக்கு இஸ்லாமிய பேங்குலே திட்டம் எதுனாச்சும் இருக்கா?
இருக்கு. எல்ஜாரா தும்ம பே Ijarah Thumma Bai’. எல்ஜாரா லீசுக்கு. வேனை அப்புறம் விலைக்கு வாங்க பே. ரெண்டும் சேர்ந்த ஒப்பந்தம்ப்பா இது. இதெல்லாம் இருக்கட்டும். பேங்குக்கு போக வேண்டிய அவசியம் இல்லாம நீ உன் புது பல்சர் மோட்டார் பைக்கை எனக்குக் கொடுத்திட்டு என் கிட்டே இருந்து பழைய அம்பாசிடர் காரை அதுக்கு ஈடா எடுத்துக்கறதுன்னா சொல்லு. அதுக்கும் ஒப்பந்தம் கைவசம் இருக்கு.
உங்களுக்கு இல்லாத பண்டமாத்து, வண்டி மாத்தா மாப்ளே. நல்லா எடுத்துக்கங்க.   ஆமா, என்ன ஒப்பந்தம் போடணும் இதுக்கு?
முஸாவமா (Musawamah)ன்னு இதுக்குப் பேரு. பண்டம் உடனடியா கைமாறணும் (spot sale). இதுதான் விலைன்னு நிர்ணயிக்கற, சொல்ற அவசியம் இல்லாத ஒப்பந்தம். பண்ட மாற்று (barter).
சரி மாப்ளே. கரெண்ட் வந்துடுச்சு. பம்ப்செட் மோட்டாரைப் போட்டு தோட்டத்துக்குத் தண்ணி பாய்ச்சணும். துணி துவைக்கணும். ஒரு வாரத் துணி குவிஞ்சு கிடக்கு.
ஏம்பா நீ ஒரு வாரமா இதே கரை வேட்டி, சட்டையைத் தானே போட்டிருக்கே.
தினத்துக்கு ரெண்டு சேலை. அதில்லே மாப்ளே. சோலை. வாலையப்பன் வீட்டு   ஷேவிங் மெஷின் ரிப்பேராகி. அட, சோலையப்பன் வீட்டு வாஷிங் மெஷின்.
பொண்டாட்டியாத்தா பயத்துலே உளற ஆரம்பிச்சுட்டே. இடத்தைக் காலி பண்ணு. வேலை முடிஞ்சு பையப் பதறாம வந்து சேரு. பாக்கியைச் சொல்றேன், 
அத்தியாயம் 7
ஏம்’பா மழையிலே இப்படித் தொப்பலா நனைஞ்சுக்கிட்டு ஓடியாறியே, ஒரு பர்மா குடையை  கக்கத்திலே இடுக்கிட்டு வீட்டை விட்டுக் கிளம்பியிருக்கலாமில்லே?
இல்லே மாப்ளே. கண்டாங்கிப்பட்டியிலே ஒரு கேதம்.  ஆவன்னா மானா இருக்காகளே, அவுக அம்மாச்சி தவறிட்டாங்க. கல்யாண சாவு மாப்ளே. தொண்ணூத்துமூணு வயசு. தொடுக்கு தொடுக்குனு அந்த வயசிலும் வெள்ளன எளுந்து கம்பங்களி கிண்டி வச்சு. அந்த ருசி. இன்னிமே எங்கிட்டு வாய்க்குமோ.
ஏம்ப்பா, எளவு வீட்டுலே கெளவியைக் குளிப்பாட்டி பல்லக்கிலே ஏத்தி   அனுப்புவாகளா, உனக்குக் கம்பங்களி கிண்டிப் பரிமாறிக்கிட்டு இருப்பாங்களா? இந்தா டர்க்கி டவல். தலையைத் தொடச்சுக்க. ஈரமாவே கிடந்தா தடுமன் பிடிச்சுக்கப் போகுது. கடுங்காப்பி சொல்லட்டா?
சொல்லுங்க மாப்ளே. புண்ணியமாப் போகும். அப்படியே பாக்கி இஸ்லாம் பேங்கு போக்குவரத்து பத்தியும் சொல்லுங்க. மழை இப்பதிக்கு நிக்காது போலே இருக்கே.
அப்ப மழைக்கு இங்கிட்டு ஒதுங்கி இருக்கே. நல்லா இருப்பா, நல்லா இரு. இஸ்திஸ்னான்னா என்னான்னு சொல்லட்டா?
பழைய இந்திப்படம் ஆச்சே. சாய்ப் அலிகான் அம்மா நடிச்சது.
அது ஆராதனா. இது இஸ்திஸ்னா (Istisna). இஸ்லாமிய பேங்குங்க இருக்கே. அதெல்லாம் பெரிய தோதிலே நிதி உதவி செய்யறதுக்கு பயன்படுத்தறது. அதாம்பா, வணிக வளாகம்பாங்களே, பல அடுக்கு மாடி வியாபார அங்காடி, அது மாதிரி, அப்புறம் நட்சத்திர ஓட்டல் கட்ட, கப்பல், ஏரோப்ளேன் இதெல்லாம் உற்பத்தி செய்ய, பிரம்மாண்டமான இயந்திரங்களோட ஒரு தொழிற்சாலையை உருவாக்கி நிறுத்த இதுக்கெல்லாம் கொடுக்கற உதவி.
ஸ்பெக்ட்ரம் அளவு லோனா மாப்ளே?
அப்படிச் சொன்னாத்தான் உனக்குத் திருப்தின்னா ராஜா மாதிரி வச்சுக்க. போகுது. இஸ்திஸ்னான்னா அரபியிலே என்ன தெரியுமா? ‘உற்பத்தி செய்யச் சொல்லிக் கேட்கறது’. நீ பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி பாஸ், நான் பைவ் ஸ்டார் ஓட்டலை கட்ட வச்சு நடத்தப்போற கோடீஸ்வரன்னு வச்சுக்க. நாம ஒப்பந்தம் போட்டுக்கறபோது அந்த ஓட்டல் இருக்காது. இந்தத் தேதியிலே முடிச்சு கையிலே தரணும்னு கண்டிஷனா காண்ட்ராக்டும் போட முடியாது. முன்னே பின்னே ஆகுமில்லே. அப்போ இஸ்திஸ்னா ஒப்பந்தம் தான் சரிப்பட்டு வரும்.
இஸ்திஸ்னாவிலே என்ன விசேஷம் மாப்ளே?
நான் உனக்கு அட்வான்ஸ் தொகையின்னு ஏதும் தரணும்னு கட்டாயம் இல்லே. ஒப்பந்தப்படி கட்டி முடிச்சதும் ஒப்பந்தத் தொகைக்கு ஒரே செக்கா வெட்டிடலாம். இல்லியா, அப்பப்போ கொஞ்சம் தரலாம். கட்டி முடிச்சு கையிலே வந்தாலும் கூட உடனடியா அடைக்கணும்னு இல்லே. தவணை முறையிலே நான் பணம் தரலாம். அது எம்புட்டுன்னு ஒப்பந்தத்துலேயே போட்டுக்கலாம்.
சரி, போனாப் போவுது, உங்களுக்காக பைவ் ஸ்டார் ஓட்டல் நாளைக்கு காலையிலே கருப்பாயி ஊரணியிலே நிலம் வாங்கி கட்ட ஆரம்பிக்கறேன். முடிச்சதும் தாக்கல் சொல்றேன். நம்ம ஸ்விஸ் பேங்க் கணக்குலே நூத்தம்பது கோடி ரூபாய் முதல் தவணை கட்டிடுங்க. சொணங்கிடக் கூடாது மாப்ளே, என்ன?
ஏத்தம் தான்’பா உனக்கு. இஸ்திஸ்னாவிலே இன்னொரு விஷயம் இருக்கு. நீ என்னை செங்கல் வாங்கிக் கொடு, சிமிண்டுக்கு அலைஞ்சு கொண்டு வந்து இறக்கு, மணல் மாபியா கிட்டே நூறு வண்டி ஆத்து மணல் சப்ளை பண்ணச் சொல்லுன்னு எல்லாம் நச்சரிக்கக் கூடாது. நீயே தான் கட்டுமானத்துக்கான பொருள் சப்ளையைப் பார்த்துக்கணும். மணல் மாபியாவை மட்டும் அண்ட விடாதே.
உங்க இஷ்டம் மாப்ளே. தட்டுவேனா என்ன? ஆமா, இதுக்கு முந்தி எல்ஜாரா, பே சலாம்ன்னு கிட்டத்தட்ட இதே மாதிரி நிதி உதவி பத்தி சொன்னீங்களே. அதான் வீடு கட்டக் கடன், ஹையர் பர்ச்சேஸ், லீசிங் இப்படியான சமாச்சாரம். அதுக்கும் இஸ்திஸ்னாவுக்கும் என்ன வித்தியாசம்?
இருக்குப்பா. இஸ்திஸ்னாவுலே என்னிக்குத் தேதிக்கு டெலிவரின்னு முன்கூட்டியே நிச்சயிச்சுக்க வேண்டாம். கட்டி முடிச்சு கொடுத்திடணும். அம்புட்டுத்தான். அப்புறம் அட்வான்ஸ். அப்படி ஒண்ணு கொடுக்கணும்னு அவசியம் இல்லே. இன்னொண்ணு. இஸ்திஸ்னாவிலே நீ ஓட்டல் கட்டிக் கொடுக்கறேன்னு கையெழுத்து போட்டு சத்தியம் பண்ணிட்டு வேலையை ஆரம்பிச்சா, முடிச்சுத்தான் ஆகணும். வேலையை தொடங்க முந்தி வேணும்னா இஸ்திஸ்னா ஒப்பந்தத்தை ரத்து பண்ணலாம். ஆரம்பிச்சாச்சுன்னா நோ கான்சலேஷன்.
ப்ராப்ளம் தான் மாப்ளே நமக்கு. ஆயிரத்தெட்டு சோலியை வச்சுக்கிட்டு உங்களுக்கு ஓட்டலைக் கட்ட ஆரம்பிச்சு முடிக்கலேன்னா அண்ணா அறிவாலயம் கிட்டே அரைகுறையா நிக்கற கட்டடம் மாதிரி போயிடும். சரி, நாம அப்புறம் பைவ் ஸ்டார் ஓட்டல் கட்டிக்கலாம். இஸ்லாமிய பேங்கு இஸ்திஸ்னாவிலே எங்கே வந்திச்சு?
அதுவா? எங்கிட்டே நிலம் இருக்கு. பைவ் ஸ்டார் ஓட்டல் கட்ட உன்னிய மாதிரி பல சோலிக் காரனை நம்பாம, பேங்குக்கே போறேன். ஓட்டல் கட்ட என் கையிலே நூறு கோடி  சில்லறையா இல்லே. பேங்கு என்ன செய்யும் தெரியுமா? என் கிட்டே என்ன மாதிரி ஓட்டல், என்ன ப்ளான், எத்தனை ரூம், அதிலே பாத்ரூம் சுவர் என்ன பெயிண்ட், எத்தனை லஸ்தர் விளக்கு, ரூம்லே ஏர்கண்டிஷனர் எத்தனை டன் இப்படி சகல விவரத்தையும் நுணுக்கமாக் கேட்டு வாங்கி பதிவு பண்ணி கணக்குப் போடுவாங்க பேங்குக்காரங்க.
சைபரைக் கொஞ்சம் அங்கனே இங்கனே குறைச்சுப் போடச் சொல்லுங்க மாப்ளே.
சொல்றேம்ப்பா. பேங்கு கணக்குப் போட்டு முடிச்சதும் என்கிட்டே தொகையைச் சொல்லி உன் நிலத்துலே நீ கேட்ட மாதிரி அச்சு அசலா பைவ் ஸ்டார் ஓட்டல் கட்டி முடிச்சு உன் கிட்டே ஒப்படைக்க இதான் செலவு. இதை நீ ஓட்டல் சாவியைக் கையில் வாங்கினதும் ஒரே முட்டா கொடுக்கலாம். இல்லியா, தவணை முறையிலே தரலாம். இதான் தவணைத் தொகைன்னு சொல்லிடும். வட்டி இல்லே. இந்த வேலையிலே இந்த லாபம் கிடைக்கும்னு முன் கூட்டியே சொல்லிடறது.
ஆமா மாப்ளே, பேங்குக்காரங்க எல்லாம் கொத்துக் கரண்டியைக் கையிலே பிடிச்சுக்கிட்டு கட்டடம் கட்ட அலைஞ்சா, பேங்கு வேலையை யார் பார்க்கறது?
அட, பேங்குக்காரங்களா டையும் கோட்டுமா சாரத்திலே சிமிண்டு தூக்கிட்டுப் போகப் போறாங்க. சப் காண்ட்ராக்ட் விட்டுக் கட்டி முடிப்பாங்கப்பா. அதுக்கு கட்டட காண்ட்ராக்டரோட ஒரு இஸ்திஸ்னா போட்டா தீர்ந்தது விஷயம்.
சரி மாப்ளே. மழை விட்டுடுத்து. கிளம்பட்டா? கடுங்காப்பி சூப்பரா இருக்குது உங்க வீட்டுலே. சீக்கிரமா இஸ்லாம் பேங்கு அரட்டையை முடிச்சுடாதீங்க என்ன? கம்பங்களிதான் இல்லேன்னு ஆகிப் போச்சு. கடுங்காப்பியாவது ஸ்டடியா கிடைக்கட்டுமே.
பார்க்கலாம்பா. அடுத்த முறை நீ கடுங்காப்பிக்கு வரும்போது க்வார்ட் ஹசன் பத்தி சொல்றேன்,
அத்தியாயம் 8
மாப்ளே, தங்கச்சி கைமணத்துக்கு ஒரு தங்கக் காப்பே போடலாம். புளிக்கொளம்பு மணம் கமகமன்னு எட்டு ஊருக்குத் தூக்குதே.
அவ நாட்டரசன்கோட்டை கண்ணாத்தா கோவில்லே கண்மலர் நேர்ந்துக்கிட்டு விடிகாலையிலேயே குளிச்சுட்டு போயிருக்காப்பா. மாவிளக்கு வேறே ஏத்தறா.
அப்ப உங்க கைக்குத்தான் காப்பு.
ஏது, இஸ்லாம் பேங்கு பத்தி இனியும் சொன்னா கைக்குக் காப்பு போட்டு, தீவிரவாதின்னு பொடாவிலே உள்ளே தள்ள வச்சுடுவே போலே இருக்கே.
அய்யோ, உங்களைப் போயா? கருவாட்டுக்கடை ஆதீனமிளகி இருக்கானே, என் உசிரு சிநேகிதன். அவனை வேணும்னா போடா வாடான்னு எதுலே வேணாலும் உள்ளே தள்ளலாம். தண்ட வண்டி போட்டு உசிரை வாங்கறான் மாப்ளே. நட்பு வேறேயாம், கடன் வேறேயாம். கடன் அன்பை முறிக்குதோ என்னமோ முழியைப் பிதுங்க வைக்குது. கைமுடையாகும்போது பணம் கொடுத்துட்டு கொடுத்த தொகையை மட்டும் பிற்பாடு வசூலிக்கற மாதிரி யாராச்சும் இருந்தா சொல்லுங்க.
இஸ்லாமிய பேங்கு வகையிலேயா கேக்கறே?
எதுக்குன்னேன். நீங்க இஸ்லாம் பேங்குனா முஷாரகா, முராபாஹா, எல்ஜாரா, இஸ்திஸ்னான்னு நீட்டி முழக்க ஆரம்பிச்சுடுவீங்க. வட்டியே இல்லைதான். ஆனா லாபத்துலே பங்கு, வாங்கின தொகைக்கு வேலை பார்த்து முடிச்சுக் கொடுக்கறதுன்னு ஷரியாவிலே இருந்து சரம் சரமா எடுத்து விடுவீங்க. நமக்கு அதெல்லாம் வேலைக்கு ஆகாதே.
அப்ப உனக்கு அல் க்வார்ட் ஹசன் (Al-Qard Hasan) தான் சரிப்படும்னு தோணுது.
இவர் யாரு மாப்ளே? கமல்ஹாசன், சாருஹாசன், அனுஹாசனுக்கெல்லாம் உறவா?
தேடிக்கிட்டு பரமக்குடிக்கு சவாரி விட்டுடாதே. இது ஒருத்தரோட பேரு இல்லை. இஸ்லாமிய பேங்கு சேவையிலே அல் க்வார்ட் ஹசனும் அடக்கம்.
ஷரியா படிக்கு இருக்கப்பட்ட வரவு செலவு வகையிலே இன்னொண்ணு தானே?
அல் க்வார்ட் ஹசன் மட்டும் தான் முழுக்க முழுக்க ஷரியா படியான இஸ்லாமிய வங்கி நிதி உதவின்னு  புனித குரான், ஹடித், ஷரியா, இதிலெல்லாம் நுண்ணறிவு இருக்கற அறிஞர்கள் சொல்றாங்க.  ஆனா, இதை மட்டும் நடைமுறைப் படுத்தறது சிரமம்கிறதையும் அவங்க உணர்ந்துதான் இருக்காங்க.
அம்புட்டு விசேஷம் இருக்கற விஷயம்னா சொல்லுங்க மாப்ளே. கேக்கலாம்.
க்வார்ட்ங்கற அரபிச் சொல்லுக்கு பங்கு வைக்கறதுன்னு பொருள். ஹசன்ங்கிறதுக்கு நலம், நலத்துக்காகன்னு அர்த்தம். அல் என்கிறது புனிதமானன்னு பொருள்படற அடைமொழி. சமூகத்திலே இருக்கற சக மனுஷனோட நலத்துக்காக தன் சொத்தில் ஒரு பகுதியைப் பங்கு வைக்கறதுங்கறது க்வார்ட் ஹசனோட அடிப்படை.
அப்படீன்னா என்ன மாப்ளே?
உனக்கு பணமுடைன்னு வச்சுக்க. எதுக்கு வச்சுக்கணும். எப்பவும் அதே கேசு தானே. இஸ்லாம் பேங்குலே போய்க் கேட்கலாம். அய்யா, முஷாரகா, முராபாஹா இதெல்லாம் ஒப்பந்தமாப் போட நமக்கு இன்னிக்குத் தேதிக்கு நெலமை ஒத்து வரல்லே. கொஞ்சம் பணம் புரட்ட வேண்டியிருக்கு. கொடுத்து உதவி பண்ணுங்க. இன்னும் மூணு மாசத்திலே  வடமேற்குலே இருந்து எதிர்பார்த்த பணம் வந்துடும்னு கண்டனி ஜோசியர் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லியிருக்கார். அப்போ ஜரூராக் கொண்டாந்து பேங்குலே வாங்கின தொகையைக் கட்டிடறேன்னு நீ சொல்லலாம். வாங்கின தொகையை மட்டும் கட்டினா போதும். ஒரு சல்லிக்காசு அதிகம் கொடுக்க வேண்டியது இல்லே. பேங்கு உன்னோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கும்.
தங்கச்சி வேறே உள்ளே போகும்போதே சிரிச்சுக்கிட்டே போச்சு. நீங்க வேறே ஏதோ அடிச்சு விடறீங்க. மாவிளக்கு அமிர்தமா இருக்குன்னு தங்கச்சி கிட்டே சொல்லுங்க மாப்ளே. ஆமா, இந்த உலகத்திலே தான் இப்படியான இஸ்லாம் பேங்கு சங்கதி எல்லாம் இருக்குங்கறீங்க?
இருக்குப்பா. இருக்கு. இந்தக் கடுங்காப்பியையும் குடிச்சுக்கிட்டே கேட்டு வை.   இஸ்லாம் பேங்க் பத்தி இல்லாததும் பொல்லாததுமாவா இப்படிக் காப்பித்தண்ணி கொடுத்து உனக்கு ஆதியோடந்தமா சொல்லிட்டு இருக்கேன். க்வார்ட் ஹசனையே எடுத்துக்க. முழுத் தொகையை ஒரே முட்டா திருப்பிக் கொடுக்க முடியலியா? கவலையை விட்டுத் தள்ளு. தவணையிலே கடனைத் திருப்பிக் கட்டலாம். அப்பவும் லாபத்திலே பங்கு, உழைப்பு முதலீடுன்னு உன் கிட்டே எதையும் பேங்கு எதிர்பார்க்காது. கொடுத்த பணத்தைத் திருப்பினாப் போதும்.
நம்ம ஊர்லேயும் க்வாட்டர் ஹசன், ஃபுல் ஹசன் எல்லாம் கொண்டு வரணும் மாப்ளே.
க்வாட்டர் இல்லேப்பா. க்வார்ட் ஹசன். இதிலே இன்னொரு மன நிறைவு தரும் விஷயம் இருக்கு. நீ கைத்தொழில் தெரிஞ்சவன். பேங்குலே க்வார்ட் ஹசன் நிதி உதவி வாங்கி தொழில் நடத்தி அமோகமா வந்து பேங்கு கொடுத்த பணத்தை அடைக்கறே. இந்த நிதி உதவியினாலே தானே நாம இந்த நல்ல நிலைக்கு வந்திருக்கோம்னு ஒரு நிமிசம் நினைச்சுப் பார்க்கறே. நீயாவே விருப்பப்பட்டு பேங்குக்கு அன்பளிப்பா, வெகுமதியா ஒரு தொகையையும் சேர்த்துத் தரலாம். க்வார்ட் ஹசன்லே இந்தப் பெருந்தன்மைக்கும் இடம் உண்டு. இந்த மாதிரி கொடுக்கற அதிகப் பணத்தை கொடை – ஹிபா  (Hibah)ன்னு சொல்வாங்க. பேங்கு இப்படியான ஹிபா வாங்கிக்க ஷரியா  எந்தத் தடையும் விதிக்கலே.
பேங்கு முராபாஹா, முஷாரகா, லிஜாரா, இஸ்திஸ்னா, பே சலாம் இப்படி உதவவே இருக்கப்பட்ட முதல் எல்லாம் சரியாப் போயிடுமே. ஏழை பாழைக்கு க்வார்ட் ஹசன் கொடுக்க பணத்துக்கு எங்கே போகும் மாப்ளே?
இஸ்லாம் சொல்ற படிக்கு வட்டியே வேணாம்னு பேங்குலே பத்திரமா வச்சிருக்கறதுக்காக சேமிப்புக் கணக்குலே பணம் போட்டு வைக்கறதை சொன்னேன் இல்லியா? அந்தத் தொகையைப் பயன்படுத்தி பேங்கு முராபாஹா போல நிதி உதவி செய்து லாபத்திலே பங்கு வாங்கிக்கும்னும் பார்த்தோம். இந்த   லாபப் பங்கை எல்லாம் சேமிப்புக் கணக்கு வச்சிருக்கவங்களோடு பேங்கு பகிர்ந்துக்கும்னும் பார்த்தோம். நினைவு இருக்கா?
இல்லாமே என்ன? ஷரியா சொன்னபடிக்கு சப்ளை செய்யறதாப் பார்த்துக் காபித்தூள் வாங்கற கடையை மாத்திட்டீங்க போலே இருக்கு. சிக்கரி வாடை கொஞ்சம் தூக்கலா வருது. இதுவும் நல்லாத்தான் இருக்கு மாப்ளே.
சும்மாவா சொன்னான்? நம்ம மாதிரி செம்மண் பூமிப் பயகளுக்கு   குசும்பு உடம்பொறந்ததாச்சே? நீ மட்டும் என்ன தப்பிப் பொறந்தவனா இல்லே நானா? இருக்கட்டும். அல் க்வார்ட் ஹசன் நிதி உதவி செய்ய பணத்துக்கு பேங்கு எங்கிட்டுப் போகும்னு கேட்டியே? சேமிப்புக் கணக்கு தொறக்கறவங்களும் அல் க்வார்ட் ஹசன் கணக்கு (Al Qard Hasan deposit) திறந்துடுவாங்க. வட்டியும் கிடையாது. லாபத்துலே பங்கு வரும்னும் எதிர்பார்க்கக் கூடாது. சேமிப்புக் கணக்குலே போட்ட தொகை பத்திரமாத் திரும்பி வரும். அம்புட்டுத்தான்.
அம்புட்ட்டுத்தான்னா அம்புட்டுத்தானா?
அப்படிச் சொன்னா விட்டுடறதா? ஒண்ணு சொல்றேன் குறிச்சுக்க. உலகத்திலே எந்த இஸ்லாம் பேங்குலேயும் அல் க்வார்ட் ஹசன் டெபாசிட் போட்டு சேமிச்ச தொகையை மட்டும் வாங்கிட்டுப் போனதா சரித்திரமே இல்லை. முதரபா மாதிரி நிதி உதவியிலே பங்கு பெற முதலீட்டுக் கணக்கு (investment deposit) திறக்கறதையும், பேங்கு அந்தப் பணத்துக்கு காப்பாளாராக (manager of funds) செயல்படறதையும் சொன்னேனே. அப்படி முதலீட்டுக் கணக்கு வச்சு வர்ற அதிக வருமானத்தை விட க்வார்ட் ஹசன் டெபாசிட் வச்சுக்கிட்ட வாடிக்கையாளர்கள் வாங்குறது உண்டு. பணத்தை விடு. க்வார்ட் ஹசன் டெபாசிட்களுக்கு பரிசு (gifts) வழங்கறதையும்  பேங்குகள் செய்யுது. நிதிக் கம்பெனி வெள்ளிக் குத்துவிளக்கும் த்ரீஷா படம் போட்ட கேலண்டரும் அன்பளிப்பு கொடுக்கற மாதிரியான்னு கேட்டுடாதே. இங்கே போட்ட பணம் உத்திரவாதம். மத்தபடி இருபது பெர்சண்ட் வட்டி எல்லாம் கையிலே அடிச்சு வாக்குக் கொடுத்துட்டு ஓடறதும் இல்லே.
அட, அடுத்த குவளை கடுங்காப்பி தங்கச்சி அனுப்பி வச்சுடுத்தே. இதான் நம்ம காப்பித்தூள். நயம் சரக்கு. வாசனை தூக்குது பாருங்க மாப்:ளே.
அட நீ ஒண்ணுப்பா. காப்பிப் பாத்திரத்திலே சுடுதண்ணி ஊத்தி கழுவறபோது கொஞ்சம் கறுப்பா வந்திருக்கும். பீங்கான் கிளாஸ்லே ஊத்தி அனுப்பியிருக்கா.
சும்மா தங்கச்சியை நக்கலடிக்காதீக சொல்லிட்டேன். பகல் சோத்துக்கு பட்டை நாமம்தான் அப்புறம் மாப்ளே.
சரிப்பா கவனிச்சு நடந்துக்கறேன். சந்தோஷம் தானே?
நமக்குத் தெரிஞ்ச பேங்கு நடைமுறையிலே எதைச் சொன்னாலும் அதுக்கெல்லாம் இஸ்லாம் பேங்கு வழிமுறை இதான்னு சொல்றீங்களே? கிரடிட் கார்ட் இருக்குதா உங்க இஸ்லாம் பேங்குலே?
இல்லாமே என்ன? அல் க்வார்ட் ஹசன் அடிப்படையிலே அதுவும் உண்டு. தகுதியானவங்களுக்கு இஸ்லாமிய வங்கி கிரடிட் அட்டை தரப்படும். எல்ஜாரா அடிப்படையிலே தவணை முறையிலே கடனைத் திருப்பி அடைக்கிற கிரடிட் கார்டும் உண்டு. சேவைக் கட்டணத்தை (service charge) முன் கூட்டியே நிர்ணயிச்சு, நீ உடன்பட்டு கார்ட் வாங்கினதும், மாசாமாசம் கட்டச் சொல்லுவாங்க. நம்மூர் கிரடிட் கார்டுலே சர்வீஸ் சார்ஜ் வருஷத்துக்கு ஒரு முறை கட்டினாப் போதும். ஆனா, கடன் நிலுவையிலே போனா, முப்பது பெர்சண்ட் வட்டிக்கு மேலே டாப்பு எகிறிடும்.  அங்கே அந்தத் தொல்லை இல்லே.
சரி, இஸ்லாம் வங்கி, அதுங்க இருக்கப்பட்ட அரபு நாடுகளோட அரசாங்கம். இதுக்கெல்லாம் ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது. பெரிய தோதுலே பணத் தேவை ஏற்படலாம். அதை எல்லாம் எப்படி சமாளிக்கறாங்க மாப்ளே?
அதுவா, நம்மூர்னா, மத்திய அரசும் மாநில அரசும் பேங்குகள், கம்பெனிகள் கிட்டே இருந்து கடன் வாங்க பாண்ட் (bond) வெளியிடும். ஒரு வருடத்துலே, ரெண்டு வருடத்துலே வட்டியோடு பணத்தைத் திருப்பித் தரும். அதாவது எழுநூத்து ஐம்பது ரூபாய் கொடுத்து சர்க்கார் பாண்ட் வாங்கினா, ரெண்டு வருஷம் கழிச்சு ஆயிரம் ரூபாயா வர்ற மாதிரி தள்ளுபடி பாண்ட் (discount bond) பெரும்பாலும் இதெல்லாம். மத்திய அரசு கருவூலச் சீட்டுன்னு (treasury bill) 91 நாள், 182 நாள் கழிச்சு திரும்பிப் பணம் தர்றதா குறைந்த காலக் கடன் வாங்கறதும் உண்டு. நம்ம பாண்ட் போல இஸ்லாமிக் வங்கித்துறையிலே சுகுக் (sukuk).
சுகுக்லே அரசாங்கம் எங்கே வருது? இஸ்லாம் பேங்க் எங்கே இருந்து வருது?
அரசு இஸ்லாம் பேங்கோடு போட்டுக்கற கடன் ஒப்பந்தம் க்வார்ட் ஹசனா இருக்கலாம். பேங்க் வாடிக்கையாளர்கள் கிட்டே இருந்து நிதி திரட்ட போட்டுக்கற சுகுக் முதலீட்டுலே பங்குத் தொகையா வாங்கற கடனா இருக்கலாம். அதாவது சுகுக் முதரபா, சுகுக் முஷாரகா, சுகுக் எல்ஜாரா இப்படி. வாடிக்கையாளருக்குப் போட்ட பணத்தைவிட அதிகத் தொகை கிடைக்கும். அரசாங்கமும் கையை இழுத்துப் பிடிச்சுக்காதுங்கறதாலே பேங்கும் க்வார்ட் ஹசன் பாண்ட்லே முதலீடு செஞ்சிட்டு கன்னத்துலே கையை வச்சுக்கிட்டு உக்கார்ந்திருக்க வேண்டியதில்லே.
இதெல்லாம் தடம் மாறிப் போக வழியே இல்லையா?
காசு பணம் விவகாரம் தான் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா எல்லாமுமே. இஸ்லாமிக் வங்கியியல் இதை நியாயத்தோடும் மனிதாபிமானத்தோடும் அணுகணும்னு சொல்றது. அதான் முக்கிய வித்தியாசம். இஸ்லாம் நிதி நடைமுறையிலே குளறுபடியே ஏற்படாதான்னு கேட்டியே? ஆயிருக்கு. ஆனா, அதுக்கு ஷரியாவோ இஸ்லாம் பேங்கோ காரணம் இல்லே.
பின்னே யாரு காரணம் மாப்ளே?
பேங்குலே வாங்கின கடனை செலவழித்த விதம் தான் காரணம். துபாய்லே கவர்மெண்டே முன்கை எடுத்து துபாய் ஓர்ல்ட்னு பெரிய கம்பெனி ஆரம்பிச்சு சுகுக் மூலம் கோடி கோடியா உலகம் முழுவதும் இருந்து கடன் வாங்கி, துபாய்லே பிரம்மாண்டமான கட்டிடங்களை, ஒரு நகரத்தையே புதுசா உருவாக்கற முயற்சியை ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் அகலக் கால் வச்சுட்டாங்க. கடன் தொகை கொடுத்து சுகுக் வாங்கினவங்களுக்கு தவணைக் காலம் முடிஞ்சு பணத்தைத் திருப்பித்தர முடியாம தவியாத் தவிச்சுத் தண்ணி குடிச்சாங்க. அபு தாபி அரசு உறவுக்கரம் நீட்டிக் காப்பாத்தினாங்களோ, பிழைச்சாங்களோ. என்னமோ போ. இன்னொரு கடுங்காப்பி வந்திருக்கு பாரு.
அய்யோ மாப்ளே. இது பச்சைத் தண்ணியாச்சே. தங்கச்சி உங்க டயத்தை வீணாக்காம நடையைக் கட்டுன்னு என்கிட்டே சொல்லுதாக்கும். சரிம்மா புரிஞ்சுக்கிட்டேன். கிளம்பட்டா? சாவகாசமா அப்புறம் பார்க்கலாம் மாப்ளே.
பார்க்கலாம்’பா, இன்ஷா அல்லாஹ்.
(இஸ்லாமிக் பேங்கிங் பகுதி முற்றும்)





0 comments: