இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கம்
இஸ்லாம் ஒரு தூய மார்க்கம். இதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஏக இறைவனாகிய அல்லாஹ் உருவாக்கியவையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டில் வாழ்ந்த ஒரு சமுதாயத்துக்காக மட்டும் உருவாக்கப் பட்டதல்ல இஸ்லாம். மாறாக அன்று முதல்; இன்று வரை இனிமேல் காலங்கள் உள்ளவரை
வாழ்ந்த- வாழ்கின்ற- இனி வாழும் மக்களுக்காக எல்லாக் காலத்திலும்- எல்லாப் பகுதிகளிலும் வாழும் அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தும் படியான வாழ்க்கைத் திட்டம் தான் இஸ்லாம்.
இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள்- வணக்க வழிபாடுகள் அனைத்துமே இறைவனால் திருமறை குர்ஆனில் சொல்லப் பட்டவைகளும் இறுதி நபி பெருமானார் (ஸல்) அவர்களால் சொல்லப் பட்டவைகளும் செய்து காட்டப் பட்டவைகளும் அங்கீகரிக்கப் பட்டவைகளும் மட்டும் தான்.
திருமறையில் கூறப்படாதவைகளும் திரு நபி (ஸல்) அவர்களின் மூலம் அங்கீகரிக்கப் படாதவைகளும் கொள்கை கோட்பாடுகளாக வணக்க வழிபாடுகளாக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
திருமறை நிறைவு பெற்ற பிறகு - திரு நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு வேறு யாராவது புதிய வணக்கவழிபாடுகளை புதுமையான செயல்களை உருவாக்கி 'இவைகளும் இஸ்லாத்தில் உள்ளவை தான்' என்று கூறினால்-
அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் எதிரானவர்கள் என்பதில் எள்ளளவும் சந்கேமில்லை. அவர்கள் எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும் மாபெரும் அறிஞர்களாக அங்கீகரிக்கப் பட்டவர்களாக இருந்தாலும் சரியே.
அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களும் எதைச் செய்யும்படி ஏவினார்களோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.அதில் நம் வசதிக்குத் தகுந்தபடி குறைத்துக் கொள்வதும் குற்றம். நம் விருப்பத்திற் கேற்றபடி கூட்டிக் கொள்வதும் குற்றம்.
மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல் குர்ஆன் 33 36) என்று திருமறை குர்ஆன் கூறுகிறது.
அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தராத அத்தனை பழக்கங்களும் மூடப்பழக்கங்களே. சொல்லித் தராத அத்தனை நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளே.
இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தில் இல்லாத எத்தனையோ மூடப் பழக்கங்கள் மூட நம்பிக்கைகள் அநாச்சாரங்கள் பித்அத்துகள் நீக்கமற எங்கெங்கும் நிறைந்து விட்டன.
அல்லாஹ்வுக்கும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் மாற்றமான காரியங்களைக் கண்டு பிடித்துக் களையெடுப்பது அவசியத்திலும் அவசியம்.
ஏனெனில் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நீங்கள் சில பாவச் செயல்களைப் புரிகிறீர்கள் அவை உங்கள் பார்வையில் முடியை விட மெலிதாகத் தோன்றுகின்றன. (ஆனால்) அவற்றை நாங்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மூபிகாத் என்றே கருதி வந்தோம். (மூபிகாத் என்றால் பேரழிவை ஏற்படுத்துபவை என்று பொருள்) ஆதாரம். புகாரி
இடைக் காலத்தில் ஏற்பட்ட மடமைகள்
இஸ்லாம் ஓர் உலகளாவிய மார்க்கம். இதன் கொள்கை கோட்பாடுகள் வணக்க வழிபாடுகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க முடியும். இருக்கவும் வேண்டும். உலகில் உள்ள அனைத்துமதங்களையும் விட இஸ்லாமிய மார்க்கத்திற்கு மட்டுமே உரிய தனிச் சிறப்புக்களில் இதுவும் ஒன்று.
பல்வேறு கால கட்டங்களிலும் பல வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சத்தியத்தை உணர்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு அணி திரண்டு வந்தார்கள்.
பல் வேறு கலாச்சாரங்களையும் பின்பற்றி வாழ்ந்தவர்கள் இனிய இஸ்லாத்தில் இணைந்த போது - ஏற்கனவே தாங்கள் கடைப் பிடித்து வந்த பழக்க வழக்கங்களில் சிலவற்றைத் தங்களையும் அறியாமல் தங்களுடன் கொண்டுவந்து விட்டனர்.
பல்வேறு சமூகத்தினரிடையே பரவி வாழ்ந்து வரும் முஸ்லிம் சமுதாயத்தினரும் - பிற சமூக கலாச்சாரங்களை பார்த்துப் பார்த்துப் பழகிப்போய் - தங்களையும் அறியாமல் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.
இப்படிச் சிறுகச் சிறுக முஸ்லிம்களுக்கு மத்தியில் நுழைந்து விட்ட மூடப் பழக்கங்கள் கண்மூடிப் பழக்கங்கள் நாளடைவில் வேர்விட்டு கிளை பரப்பி முழு அளவில் முஸ்லிம் சமுதாயத்தை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன.
அம்பெய்து குறிபார்த்து அதற்கேற்ப நடந்தவர்கள் -
நிர்வாணமாக கஃபாவை வலம் சுற்றி வந்தவர்கள் -
மதுவின் போதையில் மதி மயங்கிக் கிடந்தவர்கள் -
பெண் குழந்தைகளை உயிருடன் குழி தோண்டிப் புதைத்தவர்கள் - அறியாமைக் காலத்தின் அநாச்சாரங்களில் மூழ்கிக் கிடந்தவர்கள் - இவர்களெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் போதனைகளை ஏற்று- சத்தியஇஸ்லாத்திற்கு வந்த போது முழுக்க முழுக்க அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு முழுமையான முஸ்லிம்களாக வந்தார்கள்.
அப்படிப்பட்ட நபித் தோழர்களின் சரித்திரங்களைச் சற்றேனும் சிந்தித்தால்.....
முன்னோர்கள் மூதாதையர் செய்த மூடப் பழக்கங்களிலிருந்தும் பிற சமூக மக்களின் கலாச்சாரங்களிலிருந்து நம்மையும் அறியாமல் நம்மிடையே தொற்றிக் கொண்டு விட்ட அநாச்சாரங்களிலிருந்தும் நாமும் விடுபட முடியும். அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களும் காட்டிய நேரியவழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
'முன்னோர்கள் செய்தார்கள்' என்பதற்காகவும் காலங் காலமாகச் செய்யப் பட்டு வருகின்றன என்பதற்காகவும் பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள் என்பதற்காகவும் மூடப் பழக்கங்களை ஒரு போதும் நியாயப் படுத்தக் கூடாது. செய்யும் காரியங்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும் அங்கீகரிக்கப் படாதவையாக இருப்பின் - தயக்கமின்றி அவற்றைத் தவிர்க்க முன் வர வேண்டும்.
'அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின் பாலும் இத் தூதரின் பாலும் வாருங்கள்' என அவர்களுக்குக் கூறப்பட்டால் எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்) ஒன்றும் அறியாதவர்களாகவம் நேர் வழியில் நடக்காதவர்களாக இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்) (அல் குர்ஆன்5:104)
பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின் பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.(அல் குர்ஆன் 6 116)
காலமும் நேரமும்
நல்ல காரியங்கள் நடத்துவதற்கு நல்ல நேரம் பார்ப்பது பிற சமூகத்தவர் பின் பற்றும் பழக்கம். இஸ்லாத்தில் நல்ல நேரம் கெட்ட நேரம் என்று நேரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. காலண்டரைப் பார்த்துக் காலநேரம் பிரிப்பது அறிவுக்கு ஏற்ற செயலும் அல்ல. அல்லாஹ்வுக்கு உகந்த செயலும் அல்ல.
நேரம் காலம் பார்த்து நடத்தப்பட்ட எத்தனையோ திருமணங்கள் விவகாரத்தில் தொடங்கி விவாகரத்தில் முடிந்திருக்கின்றன. காலமும் நேரமும் அவர்களுக்கு கைகொடுக்வில்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து - முகூர்த்த நேரம் என்று பிற சமூகத்தவர் குறிப்பிடுவதை முபாரக்கான நேரம் என்று அரபியில் குறிப்பிடுவதால் மட்டும் இஸ்லாமிய அங்கீகாரம் பெற்று விட்டதாக ஆகிவிடாது.
பசிக்கும்போது உணவருந்த எவரும் பஞ்சாங்கம் பார்ப்பதில்லை. பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்க நல்ல நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை. உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த மருத்துவரும் கால நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை.
ரயில் பயணங்கள் ராகு காலத்தில் ரத்து செய்யப் படுவதில்லை. எமகண்டம் பார்த்து எந்த விமானமும் காத்திருப்பதில்லை.
வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் பிறந்த குழந்தையைக் காரணம் காட்டி 'இது பிறந்த நேரம் சரியில்லை' என்னுசொல்வதும் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் வீட்டுக்கு வந்த மருமகளைக் காரணம் காட்டி 'இவள் வந்த நேரம் சரியில்லை' என்று சொல்வதும் தொடங்கிய காரியம் தோல்வி அடைந்தால் 'ஆரம்பித்த நேரம் சரியில்லை' என்று சொல்வதும் மிகப் பெரும் பாவம் என்பதை உணர வேண்டும்.
சிலர் நீண்ட காலமாக வறுமையிலும் - சிரமத்திலும் இருந்திருப்பார்கள் அதன் பிறகு அல்லாஹ் அவர்களுக்கு பொருளாதார வசதியை அதிகரித்திருப்பான். அந்தக் கால கட்டத்தில் பிறந்த குழந்தையைக் காரணம் காட்டி 'இதுபிறந்த அதிர்ஷ்டம்' என்று சொல்வார்கள். இதுவும் தவறு தான்.
அல்லாஹ் வழங்கிய அருள் என்பதை மறந்து குழந்தையை அதிர்ஷ்டம் என்று நம்புவதும் தவறு. எல்லாக்குழந்தையையும் சமமாகக் கருதாமல் ஒரு குழந்தையை மட்டும் அதிர்ஷ்டக் குழந்தை என்று கருதுவதும் தவறு.
வாழ்க்கையில் ஏற்படும் வெற்றியும் தேல்வியும் - அல்லாஹ்வின் நாட்டப் படியே ஏற்படுகின்றது என்று ஈமானில் உறுதி வேண்டும்.
நினைத்த காரியம் நடக்காமல் போவதும் தொடங்கிய காரியம் தோல்வி அடைவதும் இதைவிடச் சிறந்ததை நமக்குத்தருவதற்காகவோ அல்லது இதன் மூலம் ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து நம்மைக் காப்பதற்காகவோ இறைவனுடைய ஏற்பாடாக இருக்கக் கூடும்.
அதை விட்டு விட்டு காலத்தின் மீதும் நேரத்தின் மீதும் பழி சுமத்துவது பெரும் பாவம். ஏனனில் இறைவன் கூறுகிறான். ' காலத்தை ஏசாதீர்கள் நானே காலமாக இருக்கிறேன்.' (ஹதீஸ் குத்ஸி)
இறை நம்பிக்கை நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிய வேண்டும். அப்போது தான் கால நேரத்தின் மீதுள்ள நம்பிக்கை நம்மை விட்டு மறையும்.
ஒவ்வொரு நாளின் 24 மணி நேரமும் நல்ல நேரமே! ஒவ்வொரு ஆண்டின் 365 நாட்களும் நல்ல நாட்களே! நமது பேச்சும் செயலும் நல்லவையாக இருக்க வேண்டும். இது தான் முக்கியம்.
'ஒரு போதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு எதுவும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்' என்று (நபியே) நீர் கூறும். மூமின்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன் 9 51)
சகுனம் பார்ப்பது சரியானதல்ல
ஏதேனும் காரியமாக வெளியில் புறப்படும்போது 'எங்கே போகிறீர்கள்?' என்று யாராவது கேட்டு விட்டால் போகிற காரியம் நடக்காது என்று நம்புவதும் - நடந்து செல்லும்போது காலில் ஏதேனும் தடுக்கினால் சிறிது நேரம் நின்று விட்டுச் செல்வதும் -போகிற வழியில் பூனை குறுக்கிட்டால் போகிற காரியம் தடங்கல் ஏற்படும் என்று கருதுவதும் -விதவைப் பெண்கள் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைப்பதும் வடிகட்டிய முட்டாள் தனம்.
நாம் நமது வேலையாகப் போகிறோம். பூனை தனது வேலையாகப் போகிறது. நமது வேலையைக் கெடுப்பது பூனையின் வேலையல்ல. மூளை என்று ஒன்று இருந்தால் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும்.பேசிக் கொண்டிருக்கும் போது சுவர்க்கடிகாரம் மணி அடித்தாலோ பல்லி சப்தமிட்டாலோ சொல்வது உண்மை என்றுகடிகாரத்தையும் பல்லியையும் சாட்சிகளாக்குவதும் - 'பாலன்ஸ்' தவறி பல்லி விழுந்துவிட்டால் பதறித் துடித்து காலண்டரைத் திருப்பி 'பல்லி விழும் பலன்' பார்ப்பதும் மூட நம்பிக்கைகளில் உள்ளவை என்பதைப் புரிந்துக் கொள்ள பெரிய ஆராய்ச்சி தேவையில்லை. தேதி பார்க்க காலண்டர் வாங்கும் போது பல்லி விழும் பலனும் ராசிபலனும் இல்லாத காலண்டர் வாங்கினால் போதும். பெரும்பாலும் இந்த மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடலாம்.
மூடக் கொள்கைகளை முற்றிலும் ஒதுக்கிய - குர்ஆன் வசனங்களும் பெருமானார் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் அடங்கிய இஸ்லாமியக் காலண்டர்கள் பரவலாக இப்போது விற்பனைக்கு வந்து விட்டன.
நல்ல சகுனம் கெட்ட சகுனம் எதுவுமே இஸ்லாத்தில் இல்லை. எவ்வித சகுனமும் பார்க்கக்கூடாது. சகுனங்கள் ஒரு போதும் நமது செயல்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தமாட்டா.
நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விடமிருந்தே எற்படுகின்றது என்று நம்புவது 'ஈமான்' என்னும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும். அல்லாஹ் விதித்த படி தான் அனைத்துமே நடக்கும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆழமாக நமது உள்ளத்தில் வேரூன்ற வேண்டும். அந்த ஈமானின் உறுதி நமது இதயத்தில் இருக்கும் வரை தீமைகள் எதுவும் ஏற்படாது.
நல்லது என்று நாம் நினைத்திருந்த காரியம் நடக்காமல் போகலாம். இதை விடச் சிறந்ததை தருவதற்காகவோ அல்லது இதன் மூலம் கெடுதி ஏற்படலாம் என்பதற்காகவோ இறைவன் தடுத்திருக்கலாம். நாம் விரும்பாத ஒன்று நடந்திருக்கலாம். நமக்கு அது தான் சிறந்தது என்று இறைவன் நாடியிருக்கலாம். அல்லது இதைவிடப் பெரிய தீமையிலிருந்து நாம் காப்பாற்றப் பட்டிருக்கலாம்.
நடந்து முடிந்த அனைத்து காரியங்களையும் இப்படித்தான் அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர சகுனத்தின் அடிப்படையில் நடந்ததாகவோ நடக்காமல் போனதாகவோ ஒரு போதும் நம்பக் கூடாது.
'மந்திரிக்கச் செல்லாமலும் சகுனம் பார்க்காமலும் தங்கள் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைத்த எழுபது ஆயிரம் பேர் எனது சமுதாயத்தில் விசாரனையின்றி சுவர்க்கம் செல்வார்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர். இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் புகாரி)
திரு மணத்தில் தீய பழக்கங்கள்
சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட 'சீர் திருத்தத் திருமணங்கள்' என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர்திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் சிலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே!
மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து மணப்பெண் கழுத்தில் 'தாலிகட்டும்' வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவணுக்குச் சமமானமகிமை அளிப்பதும்-
திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும் அரிசி அளக்க வைத்து அல்லாஹ்வின் இரணத்தை அள்ளி இறைப்பதும் மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும் பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும் ஆட்டுத்தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும் எங்கே போய்க் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்?
சமுதாயம் சீர் பெற இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப் பிடிக்க வேண்டும.
பெருமைக்காகவும்இ ஆடம்பரத்துக்காகவும் செய்யும் வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அப்போது தான் ஏழ்மையான மக்களின் சிரமங்களைக் குறைக்க முடியும்.
'குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் நிறைந்ததாகும்.' என்பது நபி மொழி. (அறிவிப்பவர். ஆயிஷா (ரலி) ஆதாரம் அஹ்மத்)
வரதட்சனை என்னும் வன்கொடுமை ஒழிய வேண்டும். சீர் வரிசை என்னும் பெயரில் பெண் வீட்டாரிடம் பணம்பறிக்கும் பாதகர்கள் திருந்த வேண்டும்.கல்யாணத்திற்காகக் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க இறையச்சமுள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்.
வரதட்சனை ஒரு மாபெரும் கொடுமை என்பதை உணர்ந்த ஏராளமான இளைஞர்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்யத் தயாராகி விட்டனர். என்றாலும் இது ஒரு சாதனை அல்ல. மணப் பெண்ணுக்கு உரிய மஹர் தொகையைக் கொடுத்து மணம் முடிக்க வேண்டும். இதுவே மார்க்கச் சட்டம். சிலர் மஹர் என்னும் பெயரில் சொற்பத் தொகையை நிர்ணயித்து அதையும் கொடுக்காமல் பள்ளிவாசலின் பதிவுப் புத்தகத்தில் பெயரளவில் எழுதி வைத்து விட்டு கட்டிய மனைவியிடம் கடன்காரனாகக் காலத்தைக் கழிக்கிறார்கள்.
மஹர் தொகையைக் கொடுக்காமல் கடன் காரனாக இருப்பவர்கள் இப்போதாவது கொடுத்து விட வேண்டும்.
மஹர் தொகையை இப்பேர்து கொடுப்பதால் 'தலாக்' ஆகி விடும் என்று சிலர் கருதுகின்றனர். இது மிகவும் தவறானநம்பிக்கை.
அறியாமல் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.
இன்னும் உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கும் அவ்விதமே சாலிஹான உங்கள் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன். (அல் குர்ஆன் 24 32)
வீடு கட்டுவதில் மூடப் பழக்கங்கள்
வாழ்க்கையில் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசை ஏற்படுவது அனைவருக்கும் இயல்பு. அப்படி வீடு கட்டும்போது மார்க்கத்திற்கு முரணில்லா வகையிலும் ஷிர்க் (இணை வைத்தல்) எந்த வகையிலும் ஏற்படாவண்ணமும் வீடு கட்டப்பட வேண்டும்.
வீடு கட்டுவதற்கு முன் வீட்டு மனையின் அளவையும் அமைப்பையும் பொறுத்து கட்டடப் பொறியாளரைக் கொண்டோ அல்லது அனுபவம் உள்ளவர்களைக் கொண்டோ நம் வசதிக்குத் தகுந்தபடி திட்டமிட்டுக் கட்டுவது நல்லது தான். அதற்காகச் சிலர் வாஸ்து சாஸ்திரம் - மனையடி சாஸ்திரம் என்னும் பெயரில் ஏமாற்றுச்சாஸ்திரங்களில் தங்கள் ஈமானை இழக்கின்றனர்.
மனையடி சாஸ்திரத்தில் ஒரு அளவைக் குறிப்பிட்டு இந்த அளவில் வீட்டின் நீள அகலம் இருந்தால் மரணம் ஏற்படும் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். அப்படியானால் அந்த அளவைத் தவிர்த்துக் கட்டப் படும் எந்த வீடுகளிலும் யாருமே மரணம் அடைவதில்லையா?
மனையடி சாஸ்திரம் மரணத்தைத் தடுக்காது. இரும்புக் கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் இறப்பது நிச்சயம்.
நாம் வசிக்க உருவாக்கும் வீட்டைஇ நம் வசதிக்கு ஏற்றபடியும் இடத்திற்குத் தக்கபடியும் நீள அகலங்களை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர -
வாஸது சாஸ்திரம் பார்த்து வாசற்படிகளை மாற்றி அமைப்பது மனித வாழ்க்கையில் எவ்வித மாறுதலையும்ஏற்படுத்தாது.
எந்த சாஸ்திரமும் - சம்பிரதாயமும் இன்றி அரபு நாடுகளிலும் மேலை நாடுகளிலும் கட்டப் பட்ட வீடுகளில் வசிப்போர் - நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்னமும் மூட சாஸ்திரங்களை முழுக்க முழுக்க நம்பிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டாமா?
கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் - அநாச்சாரத்தில் ஆரம்பிக்கப் படுவதும்-
கட்டுகிற வீடு நமக்கு உரியது என்பதைக் கூட மறந்து கட்டுபவர்களின் கலாச்சாரப்படி அனைத்து வகை ஆச்சாரங்களையும் அனுமதிப்பதும் - அங்கீகரிப்பதும் -
கதவு நிலை வைப்பதற்குக் கூட காலமும் நேரமும் பார்த்து பூவும் பொட்டும் வைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்வதும் -
காங்கிரீட் போடும் போது ஆடும் கோழியும் அறுத்து பலியிடுவதும் -
கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று பூசனிக்காய் கட்டித் தொங்க வீடுவதும் -
புதிய வீடு கட்டி முடித்த பின் மூலைக்கு மூலை பாங்கு சொல்வதும் - முதல் வேலையாக பால் காய்ச்சுவதும் -
கூலிக்கு ஆள் பிடித்து குர்ஆனும் - மௌலூதும் ஓதுவதும் -
இவைகள் யாவுமே புனித இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர வேண்டும்.
குர்ஆன் ஓதுவது எப்படித் தவறாகும்? என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். புதுமனை புகு விழாவுக்கு மட்டும் - அதுவும் கூலிக்கு ஆள் பிடித்து ஓதுவதற்கு அருளப்பட்டதல்ல குர்ஆன்.
குர்ஆன் எப்போதும் ஓதப்பட வேண்டும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஓத வேண்டும். சடங்காக்கப்படக் கூடாது.சொந்தமாக வீடு கட்டுவது என்பது சராசரி மனிதனுக்கு ஒரு சாதனை தான். எந்த வகையிலும் இந்த சாதனையில் அநாச்சாரம் நுழைந்து விடாமலும் ஷிர்க் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பிறந்தநாள்விழாவும்- பெயர் சூட்டு விழாவும்
பிறந்த குழந்தைக்கு 7 ஆம் நாள் ஆண் குழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும் பெண் குழந்தையாக இருப்பின் ஒரு ஆடும் அறுத்து அகீகா கொடுக்க வேண்டும். இது நபிவழி.
ஆனால் இந்த சுன்னத் (நபி வழி) புறக்கணிக்கப்பட்டு ஒரு பித்அத் உருவாகிவிட்டது. குழந்தை பிறந்த 40 ஆம் நாள் அன்று தடபுடலாக விருந்து வைத்துப் 'பெயர் சூட்டு விழா' என்று 'அசரத்தைக'; கூப்பிட்டு பெயர் சூட்டப் படுகிறது.
குழந்தை பிறந்தாலும் 40. திரு மணத்திலும் 40. இறந்தவர் வீட்டிலும் 40. சித்த மருத்துவத்தில் மருந்து சாப்பிட ஏற்பட்ட இந்த 'மண்டலக்' கணக்கிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. பெயர் சூட்டுவதற்கு ஒரு விழா வைத்து அசரத்தைக் கூப்பிட்டுத் தான் பெயர் வைக்க வேண்டும் என்பதில்லை. விருப்பமான பெயரைத் தேர்வு செய்து குழந்தைக்கு அதிக உரிமையுள்ள தாயோ தந்தையோ கூப்பிட வேண்டியது தான். இதற்கென்று எந்தச் சடங்கும் மார்க்கத்தில் இல்லை.
சிலர் வருடந்தோறும் குழந்தையின் பிறந்த நாளைர் கொண்டாடுகின்றனர். லீப் வருடத்தில் பிப்ரவரி 29 அன்று பிறந்த குழந்தைக்கு வருடந்தோறும் எப்படிக் கொண்டாடுவார்களோ? தெரியவில்லை.
இன்னும் சிலர் அநாச்சாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தையின் வயதுக் கணக்குப்படி மெழுகுவர்த்தி ஏற்றிஇ கேக் வெட்டி 'ஹேப்பி பர்த் டே' கொண்டாடுகின்றனர். இது முழுக்க முழுக்க ஓர் அந்நியக் கலாச்சாரம். இதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இல்லை. 'யார் அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல.' என்பது நபி மொழி.
இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தையைச் சிறு வயது முதலே இஸ்லாமியக் கலாச்சாரத்தின் படி வளர்க்க வேண்டும். குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஐவேளையும் தொழப் பழக்க வேண்டும். முழுக்க முழுக்க முஸ்லிம் குழந்தையாகப் பழக்கவும் வளர்க்கவும் வேண்டும்.
வெட்கங்கெட்ட விருத்தசேதன விழா
பெருமானார் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின் பற்றிச் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் 'சுன்னத்'ஆகும்.
நகம் வெட்டுவதும் தாடி வைப்பதும் தேவையற்ற முடிகளைக் களைவதும் பல் துலக்குவதும் இன்னும் இது போன்ற ஏராளமான சுன்னத்துகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் யாரும் விழா நடத்தி விருந்து வைப்பதில்லை.
ஆனால் ஆண் குழந்தைகளுக்கு 'கத்னா' என்னும் விருத்தசேதனம் செய்வதற்கு 'சுன்னத்' என்நு பெயர் வைத்து பத்திரிகை அடித்து ஊர் வலம் வைத்து விழா நடத்தி விருந்து போடுவதும் பெரும் பொருள் செலவு செய்து ஆடம்பரமாகக் கொண்டாடுவதும் பரவலாகக் கொண்டாடப் படுகிறது. இது மிகவும் கண்டிக்கப் படவேண்டிய தவறானப் பழக்கம்.
நகம் வெட்டுவதற்கு ஒப்பான- இந்த சாதாரனச் செயலைச் சிலர் - தம்மிடம் பணம் இருக்கின்றது என்ற காரணத்துக்காக - வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பணக்காரர்கள் செய்யும் இந்த பண்பாடற்றச் செயலைப் பார்த்து - எத்தனையோ ஏழைக் குடும்பத்தினர் இதற்கென ஆகும் செலவுகளுக்கு அஞ்சி தம் குழந்தைகளுக்குப் பல வருடங்கள் வரை கத்னா செய்யாமல் காலம் கடத்துகின்றனர்.
வசதி படைத்தவர்கள் விருத்த சேதன விழா நடத்தும் செலவில் - தங்கள் பகுதியில் உள்ள ஏழைச் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து - மருத்துவரிடம் அழைத்துச் சென்று (சுன்னத்) கத்னா செய்வதற்கு முயற்சி எடுத்தால் உண்மையான'சுன்னத்'தை நிறைவேற்றிய நன்மையும் கிடைக்கும். மிகப் பெரும் அநாச்சாரத்தை தடுத்து நிறுத்திய புண்ணியமும்கிடைக்கும்.
மானங்கெட்ட மஞ்சள் நீராட்டு விழா
பெண்கள் பருவம் அடைந்தால் அதற்காகப் பத்திரகை அடித்து உறவினர்களை அழைத்து பூமாலை போட்டு பூப்பு நீராட்டு விழா நடத்துவதும் அதற்காக விருந்து போடுவதும் கேட்பதற்கே கேவலமாக இல்லையா? மறைக்கவேண்டிய ஒரு செய்தியை ஊர் முழுக்க தம்பட்டம் அடித்து அறிவிக்க பிள்ளையைப் பெற்றோருக்கு வெட்கமாக இல்லையா? எங்கிருந்து காப்பியடிக்கப் பட்டது இந்த மானங்கெட்ட கலாச்சாரம்.
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் ஒரு குறிப்பிட்ட வயதில் பருவம் அடைகின்றனர். போகிற போக்கைப் பார்த்தால் அதற்கும் விழா நடத்த ஆரம்பித்து விடுவார்களோ?
பருவம் அடைதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இறைவன் அளித்த அருட்கொடை. இயற்கையாக ஏற்படும் இந்த மாற்றத்தை பகிரங்கப் படுத்த வேண்டும் என்று அவசியமில்லை.
தனக்கு ஏற்படும் இயற்கை மாற்றங்களை ஒரு பெண் தன் தாயுடன் பகிர்ந்துக் கொண்டு ஆலோசனைகள் பெறலாம். இதை தந்தை கூட அறிய வேண்டும் என்று அவசியமில்லை.
திருமணத்திற்குத் தயாராக ஒரு பெண் வீட்டில் இருப்பதைப் பலரும் அறிந்தால் பெண் கேட்டு வருவார்கள் என்று காரணம் சொல்வார்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் உறவினர்களுக்கும் அண்டை அயலாருக்கும் தெரியவரும். தாமாகவே பெண் கேட்டு வருவார்கள்.
பெண் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் தக்க துணையும் - தகுந்த காரணமும் இல்லாமல் வெளியில் அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பான சூழலில் அமைந்த பள்ளிக் கூடங்களுக்கு மட்டுமே அனுப்பவேண்டும். அதுவும் பெண்கள் மட்டுமே தனியாகக் கல்வி கற்கும் கல்விக்கூடங்களில் சேர்க்க வேண்டும். குறிப்பாக மார்க்கக் கல்வியை கற்பிக்க வேண்டும்.
இனியேனும் இதுபோன்ற கேவலமான விழாக்களைத் தவிர்ப்போம். மாற்றுக் கலாச்சாரங்களை ஒதுக்கி இஸ்லாமிய வழி நடப்போம்.
ஜாதகமும் - ஜோதிடமும்
எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஏக இறைவனைத் தவிர வேறு எவருமே அறிய முடியாது என்று இறைமறை குர்ஆன் கூறுகிறது.
(இன்னும் நபியே) நீர் கூறுவீராக. அல்லாஹ்வைத் தவிர்த்து வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார். இன்னும் (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். ( அல்குர்ஆன் 27: 65)
ஜாதகம் எழுதி வைப்பதும், ஜோதிடத்தை நம்புவதும், பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கும் புறம்பானவை. இஸ்லாத்திற்கு முரணான இக்கொடிய குற்றங்கள் இன்று பல்வேறு பெயர்களில் பாமரர்கள் மட்டுமின்றி படித்தவர்களிடமும் பரவி விட்டன. பெயர் ராசி, பிறந்தநாள் ராசி, பெண் ராசி, கல் ராசி, கலர் ராசி, இட ராசி, இனிஷியல் ராசி, என்று எத்தனைப் பெயர்களில் அவதாரம் எடுத்தாலும், கைரேகை ஜோதிடம், கம்ப்யூட்டர்ஜோதிடம், கிளி ஜோதிடம், பால் கிதாபு ஜோதிடம், என்று எத்தனைப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இவை அத்தனையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
இவை அனைத்துமே மூட நம்பிக்கை மட்டுமல்ல, மிகப் பெரும் பாவம் என்பதை உணர வேண்டும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள். எவர் குறி சொல்பவனிடம் சென்று அவன் சொல்வதை உண்மையென நம்புகிறாரோ அவருடைய 40 நாள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர் அபூ ஹூரைரா. ஆதாரம் முஸ்லிம்)
நமது எதிர் காலத்தைக் கணித்துச் சொல்வதாகக் கூறி ஏமாற்றுகிறவன், நாள் முழுவதும் வீதிக்கு வீதி காத்துக் கிடக்கிறான். வீடு வீடாக ஏறி இறங்குகிறான். அன்றைய தினத்தில் எத்தனை பேர் தன்னிடம் ஜோதிடம் பார்ப்பார்கள் என்பதைக்கூட அவனால் கணிக்க முடியவில்லை. தன்னுடைய ஒரு நாள் பொழுதைப் பற்றிக் கூட அறிந்துக் கொள்ள முடியாதவன் அடுத்தவருடைய எதிர்காலத்தை கணித்துச் சொல்வான் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்?
ஜோதிடம் என்றதும், பிற மத ஜோதிடக் காரர்களை மட்டும் என்று பலரும் கருதுகின்றனர். பால் கிதாபும் ஒரு வகை ஜோதிடமே! பால் கிதாபு பார்க்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் ஜோதிடக் காரர்களே! என்பதை மறந்து விடக்கூடாது. பால் கிதாபு பார்த்துப் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சொல்பவர்களின் வாழ்க்கையையும் குடும்பத்தையும் கவனித்தால் ஏராளமான பிரச்சினைகள் இருக்கும். தமக்குத் தாமே பால் கிதாபு பார்த்துபிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வக்கற்றவர்கள், உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்துவார்கள் என்று எப்படி நம்புகிறிர்கள்?
ஒவ்வொருவரும் பிறக்கும்போது ஏற்படும் கோள்களின் சஞ்சாரமே நல்லதும் கெட்டதும் நடப்பதற்குக் காரணம் என்று நம்பும் புத்தி கெட்டவர்கள், புயல் வெள்ளத்திலும், பூகம்பத்திலும் ஒட்டு மொத்தமாக ஒரு ஊரே அழியும் போது, அந்த ஊரில் வாழ்ந்த, பல்வேறு காலங்களில் பிறந்த அனைவருக்குமே எப்படி ஒரே ஜாதகம் அமைந்தது? என்பதைக் கூட சிந்திக்க வேண்டாமா? ஜாதகமும் ஜோதிடமும் மூட நம்பிக்கைகளில் முதலிடம் வகிப்பவை என்பதை உணர்ந்து,முஸ்லிம் சமுதாயம் முற்றிலும் விடுபட வேண்டும். இறை நம்பிக்கையில் இன்னும் உறுதி வேண்டும்.
தாயத்தும் தகடுகளும்
அல்லாஹ்வின் வசனங்களை, அரபி எண்களாக உருமாற்றி அப்படியே சுருட்டி அலுமினியக் குழாய்களில் அடைத்து,கருப்பு நூலில் கோர்த்துக் கழுத்திலும், கைகளிலும், இடுப்பிலும் கட்டீக் கொண்டால், பில்லி சூனியம் பேய் பிசாசுகளை விட்டும் பாதுகாப்புக் கிடைக்கும் என்று சில அரைக் கிறுக்குகள் சொன்னதை நம்பி, ஆயத்துகளைத் தாயத்துகளாக்கித் தொங்க விட்டுக் கொண்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். எவர் தாயத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாரோ நிச்சயமாக அவர் இறைவனுக்கு இணை வைத்துவிட்டார். (ஆதாரம்: அஹ்மத்)
தற்காப்புக்காகப் பலரும் கராத்தே கற்றுக் கொண்டிருக்கும்போது - வெறும் தாயத்துகளில் தற்காப்புத் தேடும் இவர்களின் மடமையை என்னவென்பது? தாயத்துகளை நியாயப் படுத்துவோர், அதில் குர்ஆன் வசனங்கள் தானே எழுதப்படுகின்றன என்று கூறுவர். அப்படியானால், குர்ஆன் ஆயத்துகளைக் கட்டிக் கொண்டு மலம் கழிக்கச் செல்லலாமா? என்று கேட்டால், ஆயத்துகளுக்கு பதிலாக அரபி எண்கள் தானே எழுதப்படுகின்றன என்று பதில்கூறுவர். இதிலிருந்து எண்களுக்கு எந்தப் புனிதமும் இல்லை என்பதை இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். எண்கள் எப்படிப் பாதுகாக்கும்? என்பதைப் புரிந்துக் கொள்வதில்தான் முட்டாள்களாக இருக்கின்றனர். சில தாயத்துகளைப் பிரித்துப் பார்த்தால், சினிமா டிக்கட்டுகளும், பஸ் டிக்கட்டுகளும் கூட இருக்கும். இவை அவசரமாகத் தயாரிக்கப்பட்ட'அர்ஜன்ட்' தாயத்துகள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண்டாட்டம் தான்.
தங்கள் வயிற்றை நிரப்ப, கயிற்றை விற்று ஏமாற்றுகிறார்கள். இன்னுமா நீங்கள் ஏமாறப் போகிறீர்கள்? ஷிர்க்கை ஏற்படுத்தும் தாயத்துகளை அறுத்து எறியுங்கள். அரபி எண்களை குறுக்கெழுத்துப் போட்டிக் கோடுகளில் அடக்கிப் பித்தளைத் தகடுகளை பிரேம் போட்டு மாட்டி வைத்தால், வீட்டுக்குப் பாதுகாப்பு என்று மூளையற்றவர்கள் சொன்னதை நம்பி மூலைக்கு மூலைத் தொங்க விட்டவர்கள் - இறை வணக்கங்களால் தங்கள் இல்லங்களை நிரப்புவதை விட்டு, ஈயம் பித்தளைத் தகடுகளில் தங்கள் ஈமானைப் பறி கொடுத்தவர்கள் - பில்லிச் சூனியத்திலிருந்து பாதுகாக்கும் என்று நம்பிப் படிகாரக் கற்களை வீட்டுப் படிகளில் மாட்டி வைத்தவர்கள்- கட்டியவீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று புத்தி கெட்டுப் போய் பூசணிக்காயைக் கட்டி வைத்தவர்கள் - இனியேனும்,இவைகள் யாவும் இஸ்லாத்திற்கு முரணான மூடப் பழக்கங்கள் என்பதை உணர வேண்டும்.
வீடுகளில் மட்டுமின்றி, வியாபார நிறுவனங்களிலும் இந்த அஸ்மாத் தகடுகளை மாட்டி வைத்தால், வியாபாரம் பெருகும் என்று மூட நம்பிக்கைக் கொண்டவர்கள் - இந்தத் தகடுகளை விற்பனை செய்வோர், தாங்கள் தயாரித்தத் தகடுகள் முழுவதும் விற்றுத் தீரும்படித் தங்களுக்குத் தாங்களே தகடு செய்துக் கொள்ளாமல், கடைக் கடையாய் அலைவதைக் கண்ட பிறகாவது, இது ஏமாற்று வேலை என்பதை உணர வேண்டாமா? தரமானப் பொருளும்,நியாயமான விலையும், கனிவானப் பேச்சும் தான் வியாபாரத்தைப் பெருக்குமே தவிர, பித்தளைத் தகடுகளும், பிரேம் போட்ட அஸ்மாக்களும் ஒரு போதும் வியாபாரத்தைப் பெருக்காது, மாறாக பாவப் படுகுழியில் கொண்டு போய் தள்ளும் என்பதை உணர வேண்டும்.
செய்வினையும் - பொய்வினையும்
உடல் நில சரியில்லை என்றால், உரிய மருத்துவம் செய்ய வேண்டும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். அதை விட்டு விட்டுச் சிலர், மந்திரவாதிகளையும்,மலையாளத் தங்கள் களையும் அணுகிப் பரிகாரம் தேடுகின்றனர். ஏமாற்றிப் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்ட எத்தர்களுக்கு இவர்களைக் கண்டால் கொண்டாட்டம் தான். நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லை,எல்லா வகையான மருத்துவமும் பார்த்தாகி விட்டது என்று இவர்களே வாக்கு மூலம் கொடுக்க - சரியான இளிச்சவாயன் கிடைத்து விட்டான் என்று மந்திரவாதி அசரத்துகளுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. 'உங்களுக்கு செய்வினை செய்யப் பட்டுள்ளது' 'நீங்கள் எந்த டாக்டரைப் பார்த்தும் ஒரு பயனும் இல்லை' என்று சொல்லி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குக் கொஞ்சம் செலவு ஆகும் என்று அவர் தனது முதல் வியாபாரத்தை ஆரம்பிக்க - கொஞ்சம் கொஞ்சமாக இருக்கின்ற பணத்தையெல்லாம் இழந்து - கடனும் வாங்கிகிச் செலவு செய்துக் கடைசியில் கண்ட பலன் ஒன்றும் இருக்காது. இழந்தது பணத்தை மட்டுமல்ல, ஈமானையும் கூட என்பதை இந்தப் பாவிகள் உணர மாட்டர்கள். யாரோ யாருக்கோ செய்து வைத்தது இவனுக்கு எப்படித் தெரியும்? என்பதைக் கூட இந்த மூடர்கள் சிந்திப்பதில்லை.
இவர்களுக் கெல்லாம் தலையில் மூளைக்கு பதில் வேறு என்னவோ இருக்கின்றது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. செய்வினை செய்யப்பட்டுள்ளது என்று சொன்னவன் அத்துடன் நிறுத்திக் கொள்ள மாட்டான். அவனது ஈனத்தனமான பிழைப்பும் வருமானமும் தொடர வேண்டுமே! 'உங்களுக்கு வேண்டியவர் - உறவினர் தான் செய்து வைத்திருக்கிறார்கள்' என்று அந்த அயோக்கியன் சொல்ல - தமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள்,இப்படி ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்பட்டு வீண்பழி சுமத்தி, இதன் காரணமாக நெருங்கிய சொந்த பந்தங்கள்,உடன்பிறந்தவர்,அண்டை அயலார், அனைவர் மீதும் பகைமைகொண்டு பிரிந்து போன குடும்பங்கள் எத்தனையோ ஒரு தாய் வயிற்றில் பிறந்து - உயிருக்குயிராய் நேசித்து அன்பு செலுத்தி - ஆதரவாய் அணுசரனையாய் இருந்த சகோதர சகோதரிகள் கூட, கண்ட கண்ட கழிசடைகளின் பேச்சையெல்லாம் நம்பி, செய்வினை என்னும் பொய்வினையில் மூழ்கிப் போய் இரத்த பந்தங்களை முறித்துக் கொள்கின்றனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இரத்த பந்த உறவு அல்லாஹ்வின் அர்ஷைப் பிடித்துக் கொண்டு கூறும். யார் என்னை சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். என்னை யார் துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான்.
யாரும் யாருக்கும் எதுவும் செய்யலாம் என்று நம்புபவர்கள், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகச் செயல்படுபவர்களுக்கும், பேசுபவர்களுக்கும், எதிராகச் செய்து வைக்க வேண்டியது தானே! செயல்பட முடியாமல் கை கால்களை முடக்க வேண்டிளது தானே! பதவிப் போட்டியிலும், அரசியல் போட்டியிலும், தொழில் போட்டியிலும்,ஒருவரையொருவர் வீழ்த்த தங்கள் ஆற்றலையும் திறமையையும், பொருளாதாரத்தையும், வீணடிப்பதை விட்டு விட்டுச் செய்வினையையும், பில்லி சூனியத்தையும் பயன்படுத்த வேண்டியது தானே! இவை அனைத்தும் எமாற்று வேலை என்பதற்குச் சிறிதளவேனும் சிந்திப்பவர்களுக்கு - இந்த உதாரணங்கள் போதும்.
பேயும் இல்லை பிசாசும் இல்லை
இறந்து போனவர்களின் ஆன்மா மறுபடியும் வரும் என்றும் மனிதர்களைத் தீண்டும் என்றும், இவை தான் பேய் என்றும், பிசாசு என்றும் சில மூடர்கள் நம்புகின்றனர்;. இந்த மூட நம்பிக்கையை மூட்டை கட்டி வைத்து விட்டு,முதலில் இறந்தவர் ஆத்மா குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது? என்பதை தெளிவாக விளங்கிக் கொண்டால், பேய் பிசாசுகளின் பெயரால் யாரும் நம்மை ஏமாற்ற முடியாது. ஒருவர் மரணித்து விட்டால், மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்ட பின் மலக்குகள் அவரிடம் விசாரனை நடத்துவர். அவர் நல்லவராக இருந்தால்- 'புது மாப்பிள்ளையைப் போல் உறங்குவீராக' என்று கூறப்படும். அல்லாஹ் அவரை மண்ணறையிலிருந்து எழுப்பும் நாள் வரை அவர் உறங்கிக் கொண்டே இருப்பார். கெட்டவராக இருப்பின் மறுமை நாள் வரை மண்ணறையில் தண்டனையைஅனுபவித்துக் கொண்டே இருப்பார் என்பதை ஆதாரப்பூர்வமான நபி மொழிகளின் மூலம் அறியலாம்.
உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்கு காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்தில் இருப்பதாகவும், நரகவாசியாக இருந்தால் நரகத்தில் இருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்) மேலும் 'அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்றவரை இதுவே (கப்ரே) உனது தங்குமிடம்' என்று கூறப்படும். என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆதாரம் புகாரி)
இதிலிருந்து நல்லவர்களோ, கெட்டவர்களோ, எவருமே மறுபடியும் இவ்வுலகுக்குத் திரும்பி வர முடியாது என்பதைஅறியலாம். இவ்வளவு தெளிவாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்து விட்ட பிறகு - இறந்தவர்கள் மறுபடியும் எழுந்து வருவார்கள் என்றோ - பேய் பிசாசுகளாக உலவுவார்கள் என்றோ நம்புவதற்கு இஸ்லாத்தில் இடமேயில்லை. சரி, அப்படியானால் பேய்களைப் பார்த்ததாகப் பலரும் சொல்கிறார்களே! இதற்கு என்ன பதில்? பேயைப் பார்த்ததாகச்சொல்பவரிடம், துருவித் துருவிக் கேளுங்கள் இறுதியில் அவர் தாம் பார்க்கவில்லை (இருந்தால் அல்லவா பார்ப்பதற்கு?) தமக்குத் தெரிந்த ஒருவர் பார்த்ததாகத்தான் தம்மிடம் சொன்னார் என்பார். சொன்னவரைத் தேடிச் சென்று அவரிடம் விசாரித்தால் அவரும் இதே பதிலைத்தான் சொல்வார். இது சங்கிலித் தொடர் போல் நீண்டுக் கொண்டே போகும். இவ்வளவுக் கெல்லாம் யாரும் முயற்சிகள் எடுப்பதில்லை.
பேய் பிசாசுகள் பகலில் வந்ததாகவோ, இரவில் வெளிச்சம் உள்ள இடங்களில் இருப்பதாகவோ யாரும் சொல்வதில்லை. இருளில் தெளிவாகத் தெரியாத எதையேனும் பார்த்து விட்டு - ஏற்கனவே அடி மனதில் தங்கிவிட்ட பேய்க் கதைகள் நினைவுக்கு வர - இல்லாத பேய்களுக்கு கையும் காலும் வைத்து கதை அளக்க ஆரம்பித்து விடுவார்கள். பேய்களைப் பற்றிக் கதைகளில் படித்தவைகளும், படங்களில் பார்த்தவைகளும் ஒன்று சேர, யாராவது கதைவிட்டால் அதுவும் இதில் சேர, பேய்கள் இப்படித்தான் கற்பனைகளால் உருவாக்கப்படுகின்றன.
பேய் பிசாசு பற்றிய மூட நம்பிக்கையில் பலரும் மூழ்கிக் கிடப்பதற்குக் காரணம் - சிறு வயதிலிருந்தே அந்தநம்பிக்கை வளர்க்கப்பட்டு விட்டதால் - வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகும் கூட மனதில் அப்படியே நிலைத்து விடுகின்றது. எனவே பெற்றோர்கள், இனியாவது தம்; குழந்தைகளின் பிஞ்சு நெஞ்சங்களில் கோழைத் தனத்தை விதைக்காமல், தைரியத்தையும் துணிச்சலையும் ஊட்டவேண்டும். அப்போதுதான் எதிர்காலச் சமுதாயம் வீரமுள்ள சமுதாயமாக உருவெடுக்கும். அச்சம் பயம் கோழைத்தனம் என்னும் பேய்களை ஓட்டுவோம். கற்பனைப் பேய்கள் தாமாக ஓட்டமெடுக்கும்.
ஒழிக்கபபட வேண்டிய ஒடுக்கத்துப் புதன்.
அரபி வருடத்தின் இரண்டாவது மாதமாகிய சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதும், அந்த மாதத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தாமல் தவிர்ப்பதும், அறியாமைக் காலத்தில் அரபிகளின் வழக்கம். ஆனால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அப்படி நியதி எதுவும் இல்லை. சபர் மாதத்தின் இறுதி புதன் கிழமைக்கு ஒடுக்கத்துப் புதன் என்று பழந்தமிழில் பெயர் சூட்டி அன்றைய தினத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், கடற்கரையிலும்,பூங்காக்களின் புல்வெளிகளிலும் பொழுதைக் கழிப்பதும், அன்றைய தினத்தில் முஸீபத்துகள் இறங்கும் என்று நினைப்பதும், இலைகளிலும் தட்டுக்களிலும் எதையெதையோ எழுதிக் கரைத்துக் குடிப்பதும், அன்றைய தினத்துக்காகவே வீடு முழுவதையும் கழுவிச் சுத்தப்படுத்துவதும், இவை அனைத்தும் அறிவுக்கும் பொருந்தாத செயல்.
அல்லாஹ்வின் மார்க்கத்திலும் இல்லாத செயல். குடி இருக்கும் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சரிதான். ஆனால் அதை ஒடுக்கத்துப் புதனுக்காக மட்டும் செய்வது மூடப் பழக்கம். ஒடுக்கத்துப் புதனை கொடிய நகசு என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவதாக சில அண்ணடப் புளுகர்கள் அரபுத் தமிழ் நூல்களில் எழுதி வைத்திருக்கின்றனர். திருமறை குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்புகள் வந்து விட்டன. முழக் குர்ஆனையும் படித்துப் பாருங்கள். குர்ஆனின் ஒரு இடத்தில் கூட ஒடுக்கத்துப் புதனைப் பற்றி குறிப்பிடப்படவேயில்லை. புதன் கிழமைஎன்னும் வார்த்தைக் கூட இல்லை.
அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன், அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன், இவர்களை விட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி அடைய மாட்டார்கள்.(அல் குர்ஆன் 10 : 17)
பூரியான் பாத்திஹா
பணக்காரர் ஆக வேண்டும் என்னும் ஆசை அனைவருக்கும் உண்டு. அதற்குப் பாடுபட்டு உழைக்க வேண்டும். அதை விட்டு விட்டு முன்னோர்கள் செய்தவை என்று மூட நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு, ரஜப் மாதம் வந்து விட்டால் - பூரியானை பாயசத்துடன் சேர்த்து வைத்துப் பாத்திஹா ஓதி, விறகு வெட்டி கிஸ்ஸாவை விடிய விடியப்படித்து விட்டால் பணக்காரர் ஆகிவடலாம் என்று சிலர் பகல் கனவு காண்கிறார்கள். பூரியானை நினைத்துப் பூரித்துப் போகிறார்கள். வீடு வீடாகச் சென்று பூரியானுக்குப் பாத்திஹா ஓதியவர்களும் பணக்காரர் ஆகவில்லை. புத்தி கெட்டு பூரியானுக்கு பணத்தை செலவு செய்து பாத்திஹா ஓத வைத்தவர்களும் பணக்காரர் ஆகவில்லை. காலமெல்லாம்ஓதியவர்கள். இப்போதும் கடன் வாங்கி ஓதிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணெயில் போட்ட பூரியான்கள் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை போலும். பூரியான் பாத்திஹா ஓதாமலேயே பணக்காரர் ஆனவர்களும் உண்டு. பூரியானுக்குச் செலவு செய்து கடனாளி ஆனவர்களும் உண்டு. அப்படியே பணக்காரர் ஆகியிருந்தாலும் பூரியானின் புண்ணியத்தால் பணக்கரர் ஆனதாக நம்பிக்கை வைத்தால் - இறை நம்பிக்கையை (ஈமானை) குழி தோண்டிப் புதைத்ததாகப் பொருள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக. மார்க்கத்தில் உள்ள அனைத்து வணக்க வழிபாடுகளும்மறுமையில் கிடைக்கும் பலனை அடிப்படையாகக் கொண்டவை. இறை வணக்கத்தின் நோக்கம் இவ்வுலக வாழ்வாக இருக்குமானால் நம்மை விடச் சிறந்த இறை நேசர்கள் அனைவருமே செல்வந்தர்களாக இருந்திருக்க வேண்டும்.
அல்லாஹ் தான் நாடியவருக்கு ஏராளமாகக் கொடுக்கிறான். (தான் நாடியவருக்கு) அளவோடு கொடுக்கிறான்.எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் அற்பமேயன்றி வேறில்லை. (அல் குர்ஆன் 13:26)
மதீனாவின் பெயரில் மாபெரும் பொய்
மதீனாவில் நடந்த உண்மை என்று தலைப்பிட்டு, மக்கள் மறந்திருக்கும் சமயங்களில், அவ்வப்போது ஒரு பிரசுரம் சில விஷமிகளால் வெளியிடப்படும். அதில், மதீனாவில் வசிக்கும் ஷேக் அஹமத் தெரிவிப்பது என்னவென்றால்,நான் ரவுலா ஷரீபில் தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு கனவு கண்டேன்.... என்று துவங்கி ஏதேதோ எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு பிரசுரத்திலும் அவரவர் மனதில் தோன்றியதை சேர்த்தும் குறைத்தும் எழுதிவிட்டு. இது போல் 1000 பிரதி அச்சிட்டு வெளியிட்டால், நினைத்தது நடக்கும். செல்வம் பெருகும். பம்பாயில் ஒருவர் அச்சிட்டு வெளியிட்டார். கோடீஸ்வரர் ஆனார். கல்கத்தாவில் ஒருவர் கிழித்துப் போட்டார். கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார்.என்றெல்லாம் ரீல் விடப்பட்டிருக்கும். இதைப் படித்து விட்டு,பணக்காரர் ஆகலாம் என்று இது போல் அச்சிட்டு வெளியிட்டு ஏமாந்தவர் பலர்.
இதை மறுத்தால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அல்லாஹ்வை மறந்து அஞ்சியவர்; பலர். இந்தப் பித்தலாட்டப் பிரசுரங்களில் காணப்படும் கருத்துக்கள் அனைத்தும் தவறானவை. அச்சிட்டு விநியோகிக்கக் கூறப்படும் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை. ஆரம்ப காலத்தில் மக்காவில் நடந்த உண்மை என்று தலைப்பிட்டு இப்பிரசுரம் வெளியானது. அதில் 'நான் ரவுலா ஷரீபில் தூங்கிக் கொண்டிருந்த போது' என்றுதொடங்கியதைப் பார்த்து ரவுலா ஷரீப் மதீனாவில் அல்லவா உள்ளது? என்று சிலர் கேட்க - அடுத்தடுத்த பிரசுரங்களில் மாற்றிக் கொண்டார்கள். இதிலிருந்தே மக்காவுக்கும் மதீனாவுக்கும் வித்தியாசம் தெரியாத எவனோ ஒரு மடையன் எழுதியுள்ளான் என்பதை உணரலாம். 'ரவுலா ஷரீபில் தூங்கிக் கொண்டிருந்த போது' என்ற வாசகமும் பொய்யானது. ஏனனில் ரவுலா ஷரீபில் யாரையும் தூங்க அனுமதிப்பதில்லை.
பெருமானார் (ஸல்) அவர்களின் ரவுலா ஷரீபை ஸியாரத் செய்து விட்டு வந்தவர்களுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும். பல்வேறு தர்காக்களைப் பார்த்துப் பழகிப் போனவர்கள் அதே கண்ணோட்டத்தில் அண்ணல் நபி(ஸல்)அவர்களின் அடக்கஸ்தலத்தையும் கருதி விட்டார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தை அல்லாஹ் எல்லா அசுத்தங்களிலிருந்தும் பாதுகாத்து வைத்திருக்கின்றான். ஒரு ஜூம்ஆவிலிருந்து மறு ஜூம்ஆ வரை 60 ஆயிரம் முஸ்லிம்கள் இறப்பதாகவும், அதில் ஒருவருக்குக் கூட ஈமான் இல்லை என்பதாகவும் அப்பிரசுரத்தில் ரீல் விடப்பட்டுள்ளது. ஈமான் என்பது உள்ளம் சம்பந்தப்பட்டது. உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. இன்னும் இது போன்ற ஏராளமான தவறுகள் அப்பிரசுரத்தில் காணப்படுகின்றன.
இதே போன்ற பிரசுரம் திருப்பதியின் பெயரால் ஒரு சாராரும், வேளாங்கன்னியின் பெயரால் ஒரு சாராரும் வெளியிடுகின்றனர்;. அவற்றின் ஆரம்பத்தில் காணப்படும் செய்திகளில் மாற்றங்கள் இருந்தாலும் - இறுதியில் காணப்படும் எச்சிக்கைகள் ஒரே மாதிரியாக இருக்கும். இதிலிருந்தே இவை திட்டமிட்டு கட்டி விடப்பட்ட கதைகள் என்பதை உணரலாம். இது போன்ற முட்டாள்தனமான பிரசுரங்களில் ஈமானை இழக்காமல் அல்லாஹ் நம்மைக் காப்பானாக. இறுதியாக, பெருமானார் (ஸல்) அவர்களின் ஓர் எச்சரிக்கை : யார் வேண்டுமென்றே என் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: புகாரி)
பஞ்சா எடுப்பதும்- தீ மிதிப்பதும்
முஹர்ரம் மாதம் 10 ஆம் நாளை கோலாகலமாகக் கொண்டாடுவது ஷியாக்களின் வழக்கம். முஹர்ரம் பண்டிகை என்னும் பெயரில் நம்மில் சிலர், மார்க்கத்தில் இல்லாத இப் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்;. பிற மதத்தவரின் தீ மிதித் திருவிழாவைப் பின் பற்றி அன்றைய திpனம் சில மூடர்கள் பக்திப்பரவசத்துடன் யாஅலி. யாஹூஸைன் எனன்ற கோஷத்துடன் தீயில் நடப்பதும், புலி வேஷம் போட்டு ஆடுவதும்,என்று இன்னும் பல்வேறு அநாச்சாரங்களையும் அரங்கேற்றுகின்றனர்.
இப்படிப்பட்ட காட்டுமராண்டித் தனத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை. இவை யாவும் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட கொடிய பாவங்களாகும். பக்தியின் பெயரால் தீ மிதிக்கும் செயலை - கடவுள் பக்தி அறவே இல்லாத நாத்திகர்களும் கூட செய்து காட்டுகின்றனர். பஞ்சா என்ற பெயரில் அன்றைய தினம் கைச் சின்னத்தைக் கையிலேந்தி மாலை மரியாதையுடன் பவனி வருவதும் மார்க்கத்தில் மாபெரும் பாவச் செயலாகும். பஞ்சா என்பதற்கு பாரசீக மொழியில்ஐந்து என்று பொருள்.நபி(ஸல்), அலி (ரலி), பாத்திமா (ரலி), ஹஸன்(ரலி), ஹூஸைன்(ரலி), ஆகிய ஐந்து பேருக்கும் தெய்வீகத் தன்மை இருப்பதாக நம்புவது ஷியாக்களின் கொள்கை.
இதன் அடையாளமாகத் தான் பஞ்சா எடுக்கும் மாபாதகச் செயலை பஞ்சமா பாதகர்கள் செய்கிறார்கள். ஓரிறைக் கொள்கையை வேறுக்கும் இது போன்ற கொடிய குற்றங்கள் ஈமானுக்கே ஆபத்தானவை. எச்சரிக்கை.
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின் பற்றாதீர்கள். இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத் தக்கவற்றையும் (செய்ய) நிச்சயமாக ஏவுவான்.(அல் குர்ஆன்:24:21)
புதுக்கணக்கும் பொய்க்கணக்கும்
வீடுகளில் மூடப் பழக்கங்கள் வியாபார நிறுவனங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன. அவற்றில் ஒன்று தான் புதுக் கணக்கு எழுதுதல். தொழிலில் ஏற்படும் லாப நஷ்டங்களை அறிந்துக் கொள்ளவும் வருமானக் கணக்கைஅரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கவும் கணக்கு எழுதி வைக்க வேண்டும்.
அரசாங்கத்தை ஏமாற்றப் பொய்க்கணக்கு எழுதுபவர்களும் உண்டு. இவர்கள் கூடப் புது வருடத் துவக்கத்தில் புதுக் கணக்கு எழுத, சிலச் சடங்கு சம்பிரதாயங்களைக் கடைப் பிடிக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் பாத்திஹா ஓதுவதற்குத்தான் சில அசரத்துமார்கள் இருக்கின்றார்களே! கூப்பிட்டதும் ஓடி வந்து ஒரு அவசர பாத்தியாவை ஓதிவிட்டு தட்சனையை பெற்றுக் கொள்வ தோடு அவர்கள் வேலை முடிந்து விட்டது.
இப்படியெல்லாம் மார்க்கத்தில் இல்லை என்று எப்படி சொல்வார்கள்.புதுக் கணக்கு எழுதினால் நமக்கென்ன, பொய்க் கணக்கு எழுதினால் நமக்கென்ன? மதது வருமானகக் கணக்கு சரியானால் போதும் என்று இருந்து விடுகிறார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை மறைத்த குற்றத்துக்கு ஆளாவதை அவர்கள் உணரவில்லை.
பாத்திஹா ஓதி சடங்கு சம்பிரதாயங்களுடன் புதுக் கணக்கு எழுதிவிட்டால் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கும் என்றால்- நஷ்டத்தில் நடந்துக் கொண்டிருக்கின்ற அல்லது மூடப்பட்டு விட்ட கம்பெனிகளும், வியாபார நிறுவனங்களும், அசரத்தைக் கூப்பிட்டு அல்பாத்திஹா ஓதி புதுக் கணக்கு எழுதிவிட்டால் புத்துயிர் பெற்று விடுமே!தொழிலில் நேர்மையும், ஹலாலான முறையும், தரமான பொருளும், கனிவான பேச்சும், நியாயமான விலையும்,வியாபாரத்தைப் பெருக்கும். புதுக் கணக்கு பூஜைகள் வருமானக் கணக்கில் எவ்வித மாற்றத்தையும் எற்படுத்திவிடாது.
786 எழுதுவது கூடுமா?
சிலர் கடிதம் எழுதும் போதும், அல்லது ஏதேனும் எழுதத் தொடங்கும் போதும், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று தொடங்குவதற்குப் பதிலாக 786 என்று எழுதுகின்றனர். நியூமராலஜி என்னும் எண் கணித முறையில்,ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாக எண்களைப் பயன்படுத்துவர். இதே முறையைப் பின்பற்றி அரபி எழுத்துக்களுக்குப் பதிலாக எண்களைப் பயன்படுத்தும் முறை சில வழிகேடர்களால் உருவாக்கப் பட்டது. ஜோதிடத்தில் ஒரு வகையான பால் கித்தாபு பார்க்கும் கொடிய யூத கலாச்சாரத்திற்கு இந்த அரபி நியூமராலஜி தான்அடிப்படை காரணமாகும். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்... என்னும் அழகான பொருள் கொண்ட திருமறையின் உன்னத வாக்கியத்தை- இறைவன் கற்றுத் தந்த இனிய வாசகத்தை, சில வழிகேடர்கள் 786 என்னும் எண்ணாக மாற்றி வேத வரிகளுடன் விளையாடுகின்றனர். இது மிகவும் தவறு. கடிதங்களில் பிஸ்மில்லாஹ்வை எழுதும் போது தவறுதலாகக் கண்ட இடங்களிலும் விழுந்து விடலாம். எனவே தான் 786 எழுதுவதாகச் சிலர் கூறலாம். அப்படியானால் 786 என்பதில் புனிதம் இல்லை என்பதை இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். புனிதம் இல்லாததை ஏன் எழுத வேண்டும்? எவரேனும் தமது பெயருக்குப் பதிலாக இவ்விதம் பெயரில் உள்ள எழுத்துக்களை எண்களாக்கி அழைக்கப் படுவதை விரும்புவாரா? அப்படியிருக்க அல்லாஹ்வின் திருநாமத்தை எப்படி எண்களாக்குகிறார்கள்? அரபியில் ஹரே கிருஷ்னா என்று எழுதி அதன் எண்களைக் கூட்டினாலும் இதே கூட்டுத் தொகை தான் வரும். எனவே இது போன்ற மூடப்பழக்கத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும். அல்லாஹ்வின் அழகிய திருப் பெயரால் எதையும் தொடங்க வேண்டும்.
பள்ளிகளில் உண்டியல் வசூல்
புதிய பள்ளிவாசல் கட்டட நிதிக்காகவும் ஏழை மாணவர்கள் பயிலும் இஸ்லாமியக் கல்விக் கூடங்களுக்காகவும் வெள்ளிக் கிழமைகளில் அதிகமானோர் தொழுகைக்குக் கூடுவதால் ஜூம்ஆத் தொழுகைக்குப் பிறகு சில சமயம் நிதி வசூல் செய்வது வழக்கத்தில் உள்ளது. இது தவறும் அல்ல. ஆனால் எந்தக் காரணமும் இல்லாமல் பல பள்ளிவாசல்களில் இதையே வழக்கமாக்கிக் கொண்டுவிட்டனர். ஜூம்ஆத் தொழுகை முடிந்து சலாம் கொடுத்ததும் இந்த வசூல் வேட்டையில் இறங்கி விடுகின்றனர்.
சமூகத்தில் ஏற்பட்ட மூடப் பழக்கங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் இப்படித்தான் சிறுகச் சிறுக மூக்கை நுழைத்தன. போகப் போக பெருமளவில் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன. முதலில் பெருநாளைக்கு மட்டும் என்று என்றிருந்த இப்பழக்கம், இப்போது ஒவ்வொரு ஜூம்ஆவுக்கும் என்ற நிலைக்கு வந்து விட்டது. பிறகு தினமும் ஒவ்வொரு நேரத்தொழுகைக்கும் என்று தொடர ஆரம்பித்து விட அதிக காலம் பிடிக்காது. இதன் மூலம் கிடைக்கும் கிடைக்கும் தொகையைக் கொண்டு பள்ளிகளைப் பரிபாலனம் செய்வதாகப் பள்ளி நிர்வாகிகள் கூறலாம். பைத்துல்மால் என்னும் இஸ்லாமியப் பொது நிதி இல்லாத பள்ளிகளை நிர்வகிக்க பொருளாதாரம் தேவைதான் என்பமை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கு வழி இதுவல்ல. அந்தந்த ஊரில் உள்ள செல்வந்தர்களிடம், அல்லாஹ்வின் பள்ளிக்காக செலவுச்செய்வதால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துச் சொன்னால் வாரி வழங்க எத்தனையோ தயாள மனம் கொண்ட செல்வந்தர்கள் தயாராக இருக்கின்றனர். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளிச் சொத்துக்களை அல்லாஹ்வுக்கு அஞ்சிய நல்லவர்களிடம் ஒப்படைத்து ஹலாலான முறையில் வருமானம் கிடைக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து நிரந்தர வருமானத்திற்கு வழி வகை செய்யவேண்டும். வாரந்தோறும் ஜூம்ஆத் தொழுகையை வசூலுக்கு பயன்படுத்தும் வன் கொடுமையை பள்ளி நிர்வாகிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் இப்பழக்கம் எதிர் காலத்தில் பெரும் விபரீதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். எச்சரிக்கை!
முரீது வாங்க வேண்டுமா?
பொய்யான ஆன்மீகத்தின் பெயரால் போலி ஷெய்குதார்கள் சிலர், ஏதுமறியா பாமர மக்களை வஞ்சித்து ஏமாற்றி வழிகெடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு ஷெய்கும் தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கித் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, பாமர மக்களை மூளைச் சலவை செய்து முட்டாள்களாக்கி வைத்திருக்கின்றனர்.'ஆன்மீகப் பாட்டை' என்பார்கள், 'ஆத்மீகப் பக்குவம்' என்பார்கள், 'அந்தரங்கக் கல்வி' என்பார்கள், 'ரகசிய ஞானம்' என்று ரீல் விடுவார்கள். இறுதியில் இதெல்லாம் உங்களுக்குப் புரியாது என்பார்கள்.எவ்வளவு தான் தொழுதாலும், இறைவணக்கங்கள் புரிந்தாலும், ஏற்கனவே ஆன்மா பக்குவப்பட்ட(?) ஒரு ஆன்மீகக் குருவிடம் சென்று முரீது என்னும் தீட்சை வாங்கினால் தான் மோட்சம் கிடைக்குமாம்.
இஸ்லாத்தில் இல்லாத இந்த கிரேக்க அத்வைத தத்துவத்தை இவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக உருவாக்கிஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றுகிறார்கள்.இவர்களில் பல்வேறு பிரிவினர்கள் உண்டு. சில ஷெய்குகள் தம்மை அண்டி வந்து நெருக்கமானவர்களுக்கு, தனித்தனியாக சில திக்ருகளை சொல்லிக் கொடுப்பார்கள். ஒருவருக்கு சொல்லிக் கொடுத்ததை பிறருக்கு சொல்லக்கூடாது என்பார்கள்.இல்லற வாழ்க்கை முதற் கொண்டு தௌ;ளத் தெளிவாக பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தில் 'ரகசிய ஞானம்' என்றுஏமாற்றுகிறார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயத்தில் யாருக்கும் எதையும் ரகசியமாக சொல்லிக் கொடுக்க வில்லை. இறுதி ஹஜ்ஜின் போது அரபாத் பெருவெளியில் கூடி நின்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஸஹாபாக்களின் முன்னர் 'நான் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேனா?' என்று கேட்கிறார்கள். அதற்கு அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் 'ஆம்! அல்லாஹ்வின் தூதரே' எனச் சாட்சி பகர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! நீயே சாட்சி!' என்று அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி)
இவ்ளவு தெளிவாக, தாம் எதையும் மறைக்கவில்லை என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிரகடனப் படுத்திய பிறகு - போலி ஷெய்குமார்கள் ரகசிய ஞானம் என்று ரீல் விடுகிறார்கள்.ஆன்மா பக்குவப்பட்டதாகச் சொல்லப் படுபவர்கள் ஆடம்பரப் பங்களாக்களில் வசிக்கின்றனர். உல்லாசக் கார்களில் பவனி வருகின்றனர். ஊருக்கு ஊர் வசூல் வேட்டைக்குப் போகும்போது கூடப் பணக்கார முரீதகளின் பங்களாக்களில் தான் தங்குவர். ஆன்மா பக்குவப்பட்ட(?) இந்த அடலேறுகள் ஏழைகளின் குடிசையில் தங்கலாமே!எந்த உழைப்பும் இல்லாமல் பிறரிடம் யாசகம் வாங்கித் தின்றே வயிறு வளர்ப்பவர்களுக்கு ஆன்மா பக்குவப்பட்டு விட்டதாம். ஏழ்மையில் வாழ்ந்துக் கொண்டு தம் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, இந்த ஷெய்குமார்களுக்கு தட்சனையும் கொடுத்துக் கொண்டு,இறை வணக்கங்கள் புரிந்து வாழ்பவர்களுக்கு இன்னும் ஆன்மா பக்குவப்படவில்லையாம்.
இஸ்லாத்திற்கு விரோதமான - குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படாத- புதுப்புது தத்துவங்களைக் கண்டுபிடித்து உளரிக் கொண்டிருப்பவர்கள், மறுமையை மறந்து விட்டார்கள். மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிய இந்தமாபாதகர்கள் நிரந்தர நரகத்தில் வீழ்ந்துக் கிடப்பார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.இந்த போலி ஷெய்குமார்கள் சொன்னதை யெல்லாம் வேத வாக்காகக் கருதியவர்கள், திக்ரு என்னும் பெயரில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததையெல்லாம் மந்திரங்களாக மொழிந்துக் கொண்டிருந்தவர்கள், இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய ஸஜ்தாவை- தம்மைப் போன்ற சக மனிதர்களுக்குச் செய்து- சிரம் தாழ்த்தி வணங்கியவர்கள்,அனைவரும் அல்லாஹ்வை அஞ்சவேண்டும்.அறியாமையால் பாமர மக்கள் காலில் விழுந்த போது அதனைத் தடுக்காமல் அகம்பாவத்துடன் ரசித்து வேடிக்கை பார்த்தவர்களே!, நாளை மறுமையில், படைத்த இறைவனுக்கு முன்னர் நிறுத்தப் படுவீர்கள் என்பதை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? தப்பிக்க முடியாத அந்த நாளை மறந்து விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
மீலாது விழா
அரசியல் தலைவர்களுக்கும் சினிமா நடிகர்களுக்கும் பிறந்த நாள் விழா கொண்டாடும்போது, உலகத்தின் எல்லா தலைவர்களையும் விட எல்லா வகையிலும் உயர்வான அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் (மீலாது) விழா கொண்டாடுவது எப்படித் தவறாகும்?வருடந்தோறும் ரபீவுல் அவ்வல் 12 ஆம் நாள்- மீலாது விழா கொண்டாடுவோரின் வாதம் இது. தாய் தந்தையை விட, மனைவி மக்களை விட, இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் விட, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு தான் இந்த மீலாது விழா என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் மார்க்கத்தில் இதற்கு அனுமதி உண்டா? நம்மை விட பன்மடங்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு வைத்திருந்த - தம் இன்னுயிரைக் கூட அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்காக அர்ப்பணிக்கத் தயாராக இருந்த - நபித் தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தபோதோ அல்லது அவர்கள் இம் மண்ணுலகை விட்டு மறைந்த பிறகோ இப்படி மீலாது விழா கொண்டாடினார்களா?அண்ணல் நபி (ஸல்) அவர்களை மகிமைப் படுத்த வேண்டும்,எனில் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல;வது தான். அவர்களின் அங்கீகாரம் இல்லாத மீலாது விழாவைகொண்டாடுவது அவர்களை மகிமைப் படுத்துவதாகாது.தம் மீது ஸலவாத் சொல்லும்படி கேட்டுக் கொண்ட அண்ணல் நபி (ஸல்), தமக்காக மீலாது விழா கொண்டாட வேண்டும் என்றால் அதையும்சொல்லியிருப்பார்கள்.மீலாது விழா கொண்டாடுவது நபி (ஸல்) அவர்களை மகிமைப் படுத்தும் என்றிருந்தால், நபித் தோழர்கள் நம்மை விட இச்செயலில் முந்தியிருப்பார்கள்.வருடத்தில் ஒரு நாள் மீலாது விழா கொண்டாடி விட்டு மற்ற நாட்களில் அவர்களை மறந்து விடுவதை விட- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் அவர்களை நினைக்கவேண்டும். அவர்களின் பொன்னான போதனைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும். அமிகமதிகம் அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும். இதுவே அவர்களை மகிமைப் படுத்தும்.
சந்தனக் கூடும் - சமாதி வழிபாடும்
நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது. இந்தியா போன்ற நாடுதளில் மக்கள் எழுச்சிபெற்றனர். ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.அதை விட்டு விட்டு அவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டி, கந்தூரி என்ற பெயரில் ஆண்டு தோறும் கல்லறைகளுக்கு விழா எடுப்பதும், அர்ச்சனையும் ஆராதனையும் செய்வதும், நேர்ச்சை என்ற பெயரில் சமாதிகளை நாடிச் சென்று முடி எடுப்பதும், காணிக்கை செலுத்துவதும், உரூஸ் என்ற பெயரில் பாட்டுக் கச்சேரியும் பரத்தையர் நாட்டியமும் நடத்தி கண்டு களிப்பதும், சந்தனக் கூடு என்ற பெயரில் சமாதிகளுக்கு சந்தனத்தில் அபிஷேகம் செய்வதும், இவைகள் யாவுமே அந்த இறை நேசர்களை கேவலப் படுத்தும் செயல்களேதவிர கண்ணியப்படுத்தும் செயல்கள் அல்ல.
'எனது கப்ரைத் திரு விழா நடத்தும் இடமாக ஆக்கி விடாதீர்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள்எச்சரிக்கிறார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திலேயே விழா நடத்துவது கூடாது என்றிருக்க -அவ்லியாக்களின் கப்ருகளில் ஆண்டு தோறும் விழா நடத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும்.அவ்லியாக்களின் சமாதிகளுக்குப் பூமாலை போடுவதும், போர்வை வாங்கிப் போர்த்துவதும், உண்டியலில் காணிக்கை போடுவதும்,பாவச் செயல்களில் உள்ளவை.பூமாலையாலும் போர்வையாலும் அந்தப் புனிதர்களுக்கு என்ன பிரயோஜனம்?உண்டியலில் போடும் காணிக்கையால் அந்த உத்தமர்களுக்கு என்ன பயன்? இறை நேசர்கள் பெயரால் இடைத் தரகர்கள் அலல்லவா கொள்ளை அடிக்கிறார்கள்?
யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளைவணக்கஸ்தலங்களாக்கி விட்டனர். அறிவிப்பவர்: அபூஹூiரா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்)
நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்கள் ஆக்கி விட்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருக்க, அவ்லியாக்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்குவது எவ்வளவு பெரிய பாவம்?பெண்கள் கப்ருஸ்தான்களுக்குச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். தர்காக்களுக்குப் பெண்கள் அறவே செல்லக் கூடாது.ஏனெனில் தர்காக்களும் கப்ருஸ்தான்கள் தான்.கப்ருகளை ஸியாரத் செய்யும்பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். (அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி) ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)
தர்காக்களுக்குச் செல்லும் பெண்கள் சபிக்கப் பட்டவர்கள். தம் குடும்பப் பெண்களை தர்காக்களுக்கு அழைத்துச் செல்லும் ஆண்கள் மாபெரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.
எங்கே போனது மனித நேயம்?
மன நிலை சரியில்லாதவர்களையும், நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டவர்களையும், உரிய மருத்துவம் செய்யாமல் தர்காக்களில் கொண்டு போய் தங்கவைப்பதற்கும், இறுதியில் நல்லவர்கள் கூட பைத்தியங்கள் ஆக்கப்படுவதற்கும், மூட நம்பிக்கைகளே முக்கிய காரணம்.சிகிச்சை என்ற பெயரில் தர்காக்களில் நடக்கும் சித்திரவதைகள் கல் நெஞ்சத்தையும் கரைய வைக்கும்.ஏர்வாடி தர்காவில் மனநோய்க்காகச் சிகிச்சைக்கு(?) வந்து, தனியார் காப்பகம் ஒன்றில் இரும்புச் சங்கிலிகளால் கட்டப் பட்ட நிலையில் மன நோயாளிகள் தங்கியிருந் கூடாரம் நள்ளிரவில்தீப்பிடிக்க, கதறிக் கதறிக் கூக்குரலிட்டு, காப்பாற்ற யாருமின்றி, கடைசியில் கரிக் கட்டைகளாய் கருகிப் போனவர்களின் கதறல் சப்தமும், ஓலக் குரல்களும், இன்னுமா உங்கள் இதயங்களைப் பழியவில்லை? எங்கே போனது மனித நேயம்?
தர்காக்கள் என்னும் கல்லறைகளில் - மீண்டும் எழ முடியாத நீண்ட நித்திரையில் உறங்கிக் கொண்டிருக்கும் உத்தம இறை நேசர்கள், பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்ப்பதாக எந்தப் பைத்தியங்கள் கூறின?உண்மையில், இப்படிச் சொன்ன பைத்தியங்கள் தான் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப் படவேண்டும். அப்போது தான் மனநலம் குன்றியவர்களின் மரண வேதனை இந்த மனித மிருகங்களுக்குப் புரியும்.நீண்ட நாட்கள் மருத்துவம் செய்தும் நோய் குணம் அடையவில்லை என்றால், இன்னமும் என்ன நோய் என்பது சரியாகக் கண்டறியப் படவில்லை என்றும்,உரிய மருத்துவம் செய்யப் படவில்லை என்று தான் பொருள்.
'அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள். எந்த ஒரு நோய்க்கும் மருந்தில்லாமல் அல்லாஹ்வைக்கவில்லை' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) ஆதாரம்:புகாரி)
வலிமார்கள் நமக்கு வக்கீல்களா?
அவ்லியாக்கள் பெயரால் நடைபெறும் அநாச்சாரங்கள் மார்க்கத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்ந்து ஒதுக்கித் தள்ளிய உத்தமர்களிலும் கூடச் சிலர், தர்காக்களுக்குச் செல்வதையும், வலிமார்கள் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதையும், நியாயம் என்று நினைக்கின்றனர்.தமது தேவைகளை அவ்லியாக்கள் மூலம் கேட்பதற்குச் சில உதாரணங்களை ஆதாரங்களாக அள்ளி வீசுவார்கள்.முதலமைச்சரை நாம் நேரடியாகச் சந்திக்க முடியுமா? நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினரை முதலில் சந்திக்க வேண்டும். அவர் நம்மை அழைத்துச் சென்று முதலமைச்சரிடம்அறிமுகப் படுத்தி வைப்பார். அதன் பிறகுதான் முதலமைச்சரிடம் நமது தேவையைக் கேட்க முடியும்
.இதே உதாரணம், முதலமைச்சருக்குப் பதிலாக மன்னர், பிரதமர், கலெக்டர், என்று இடத்துக்குத் தக்கபடி மாறுவது உண்டு.நீதி மன்றத்தில் நீதிபதியிடம் நாமே சென்று வாதாட முடியுமா? நமக்காக வாதாட திறமையுள்ள ஒரு வக்கீல் தேவையல்லவா? இது போல் தான் வலிமார்கள் நமக்கு வக்கீல்களைப் போன்றவர்கள்.இப்படி இன்னும் இதுபோன்ற ஏராளமான உதாரணங்களைச் சொல்வார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் போது இவை அனைத்தும் நியாயமாகத்தான் தோன்றும்.முதலமைச்சரையோ, பிரதமரையோ, நாம் நேரடியாகச் சந்திக்க முடியாது என்பதும், இடையில் சபாரிசுக்கு ஒருவர் அவசியம் என்பதும் உண்மை தான். ஏனென்றால் முதலமைச்சருக்கோ பிரதமருக்கோ நாம் யார் என்பது தெரியாது. எனவே நமக்கு அறிமுகமான ஒருவர் நம்மை அறிமுகப் படுத்தி வைப்பது முக்கியம்.
ஆனால் அல்லாஹ், அப்படிப்பட்ட பலகீனம் உடையவன் அல்லவே! நாம் யார் என்பதும், நமது செயல்கள் எப்படிப் பட்டவை என்பதும் நம்மைப் படைத்து பாதுகாத்து வரும் அல்லாஹ்வுக்குத் தெரியாதா? (நவூது பில்லாஹ்)நாம் செய்கின்ற செயல்களை மட்டுமல்ல, நமது உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களைக் கூட அவன் அறிபவன் ஆயிற்றே!மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்.அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கின்றோம்.(அல் குர்ஆன் 50: 16) என்று திருடறை குர்ஆன் பறை சாற்றுகின்றது
.நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகின்ற போது 'நடந்தது என்ன' என்பது பற்றி நீதிபதிக்கு எதுவும்தெரியாது. வக்கீல்களின் வாதத்தின் அடிப்படையில்தான் நீதிபதி தீர்ப்பு வழங்குவார்.செய்த குற்றத்தை மறைத்து - குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவும் வக்கீல்களால் முடியும். எசய்யாத குற்றத்தைச் செய்ததாகப் போலி ஆதாரங்களுடன் நிரூபிக்கவும் வக்கீல்களால் முடியும். அப்டியானால் நாம் செய்து விட்ட தவறானசெயல்களுக்காகவும் வக்கீல்களாகிய அவ்லியாக்கள் இறைவனிடம் வாதாடுவார்களா? வக்கீல்கள் என்று இவர்கள் கருதும் அவ்லியாக்களின் வாதத்தைக் கேட்டுத்தான் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவானா? அல்லாஹ்வுக்கு எதுவும் தெரியாதா? (நவூது பில்லாஹ்) உதாரணங்களைச் சொல்லும் கேடு கெட்டவர்களின் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருக்கின்றதா? அல்லாஹ்வின் தனித்தன்மைக்கே இந்த உதாரணங்கள் களங்கத்தை எற்படுத்து கின்றனவேஇதையெல்லாம் கொஞ்சமும் சிந்திக்க மாட்டார்களா?அவனுக்கு நிகராக யாருமே இல்லை (அல் குர்ஆன் 112; :5)என்று குர்ஆன் கூறுகின்றது.
ஒவ்வாருவரும் தமக்கு விருப்பமான அவ்லியாக்கள் தமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதோ குர்ஆன் கூறகிறது. சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.(74 :48) எவர்கள் பரிந்து பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்களோ அவர்களையே அங்கு காண முடியாது.....எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ உங்களுக்குப் பரிந்துப் பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் உங்களுடன் இருப்பதை நாம் காணவில்லை.உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது.உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன.(என்று கூறுவான்.) அல் குர்ஆன் (6:94)
கராமத்துகளும் - கட்டுக்கதைகளும்
இறைத் தூதர்கள் பலருக்கும், இறைவன் அளித்த அற்புதங்கள் அனைத்தும், இறைவனின் அனுமதியுடன் நடத்தப் பட்டதாக இறை மறை குர்ஆன் கூறுகிறது.உதாரணத்திற்கு ஒரு வசனம்.
ஈஸா நபி (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும்போது.... இன்னும் நீர் களி மண்ணால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போல் உண்டாக்கி, அதில் நீர் ஊதிய போது, அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும், சுகப்படுத்தியதையும், இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்து) வெளிப் படுத்தியதையும், (நினைத்துப் பாரும்.).... (அல் குர்ஆன் 5 : 10)
இந்த வசனத்தைக் கொஞ்சம் கவனித்தால், ஒவ்வொரு அற்புதத்தைப் பற்றிக் குறிப்பிடும் போதும், மீண்டும் மீண்டும் என் உத்தரவைக் கொண்டு என்னும் வார்ர்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான் என்பதும், நபிமார்கள் கூட தம் விருப்பத்துக்கு எதையும் செய்ய வில்லை என்பதும், அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டே அனைத்து அற்புதங்களும் நிகழ்ந்தன என்பதும் புரியும்.ஆனால் அவ்லியாக்கள் பெயரால் இட்டுக் கட்டப்பட்ட கட்டுக் கதைகள்பெரும்பாலும் அவ்லியாக்கள் அவரவர் விருப்பப்படி தாமே நிகழ்த்தியவையாகவும், மார்க்கத்திற்கு முரணானவையாகவும் இருக்கும்.
அவ்லியாக்களின் சரித்திரங்களை எழுதியவர்கள் அப்படித்தான் கதைகளை சித்தரிக்கின்றனர்.அவ்லியாக்களின் பெயரால் கூறப்படும் கதைகளைக் கவனித்தால்- இந்தக் கதைகளுக்கும் அந்த இறை நேசர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும், இந்தக் கதைகள் அனைத்தும் அந்த இறை நேசர்களைக் கேவலப் படுத்தும் கதைகள் தானே தவிர,இறை நேசர்கள் புகழை உயர்த்தும கதைகளல்ல என்பதும் புரியும்.அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) தம் சீடர்களுடன் சென்றுக் கொண்டிருந்தார்களாம். சீடர்கள் 'பசிக்கிறது' என்று கூற அங்கிருந்த ஒரு சேவலைப் பிடித்து அறுத்து அனைவரையும் சாப்பிடச் சொன்னார்களாம். சேவலுக்கு உரிமையாளர் வந்து 'எனது சேவல் எங்கே?' என்று கேட்க,தின்று விட்டுப் போட்ட சேவலின் எலும்புகளை ஒன்று கூட்டி கும் பி இத்னில்லாஹ் என்று அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூற சேவல் உயிர் பெற்று எழுந்நததாம்.இது ஒரு பிரபல்யமான கதை. பல் வேறு இடங்களிலும் இந்தக் கதையின் நாயகர்கள் மாறுவார்கள். அல்லது பிராணிகள் மாறும்.கதை என்னவோ ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.அடுத்தவர் பிராணியை அவரின் அனுமதியின்றி எந்த இறை நேசராவது அறுத்துச் சாப்பிடுவாரா? அறுத்துச் சாப்பிட்டது உண்மையென்றால் அவர் எப்படி அவ்லியாவாக இருக்க முடியும்? இந்த அளவுக் கெல்லாம் யாரும் சிந்திப்பதில்லை.
அடுத்தவர் பிராணியை அனுமதியின்றி அறுத்துச் சாப்பிடுவது ஹராம் ஆயிற்றே! ஹராமானதைச் சாப்பிட்டு விட்டு கும் பி இத்னில்லாஹ் என்று சொன்னால், அல்லாஹ் எப்படி எற்றுக் கொள்வான்? அடுத்தவர் பிராணியைத் திருடிச் சாப்பிட்டு விட்டுத் தனது அற்புதத்தை நிரூபிப்பதை விட, தனது மந்திரச் சக்தியால் ஒரு பிராணியையேவரவழைத்திருக்கலாமே!நாகூரில் அடக்கமாகி இருப்பதாகக் கூறப்படும் இறை நேசர், வெற்றிலையை மென்று ஒரு பெண்ணுக்குக் கொடுத்துக் குழந்தை பிறக்க வைத்தாராம்! இயற்கை நியதிக்கும், இறைவனின் ஏற்பாட்டுக்கும்,முரணான இது போன்ற முட்டாள் தனத்தை எல்லாம் அற்புதம் என்று நம்புவது மிகப் பெரும் பாவம்.உலக வரலாற்றிலேயே அற்புதமாகக் குழந்தை பிறந்தது மர்யம் (அலை) அவர்களுக்கு மட்டும் தான். ஈஸா நபி (அலை) அவர்கள் பிறந்த அற்புதத்தை இறைவன் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.இதைத் தவிர, மற்ற அனைத்தும் கட்டுக்கதைகளே! இது போன்றக் கதைகளை நம்புவது இறைவனுக்கு இணை கற்பிக்கும் ஷிர்க் ஆகும். ஷிர்க்கை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். ஜாக்கிரதை!
குத்பிய்யத் ஒரு கொடும் பாவம்'
யார் தனிமையில் அமர்ந்து ஆயிரம் முறை என் பெயரைக் கூறி என்னை அழைக்கிறாரோ அவரது அழைப்பின் அவசரத்திற்கேற்ப ஓடி வந்து உதவி செய்வேன்' என்று அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறினார்களாம்.யா குத்பா என்னும் நச்சுக் கவிதையில் வரும் ஷிர்க்கான இந்த வார்த்தைகளை, ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் வாழ்ந்த ஒரு இறை நேசர் ஒரு போதும் கூறியிருக்க மாட்டார் என நாம் உறுதியாக நம்புகிறோம்.இந்த நச்சுக் கவிதையை ஆதாரமாகக் கொண்டு சில கொடியவர்கள், 'குத்பிய்யத்' என்னும் பெயரில் இருட்டறையில் நின்று கொண்டு 'யா முஹ்யித்தீன்' என்று ஆயிரம் முறை ஓலமிடுகிறார்கள்.
இது எவ்வளவு பெரிய ஷிர்க் என்பதை இவர்கள் உணரவில்லை.எத்தனை பேர் எங்கிருந்து எந்நேரம் அழைத்தாலும் அனைவரின் அழைப்பையும் ஒரே நேரத்தில் செவியேற்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. இது அவனுக்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு.அல்லாஹ்வைப் போலவே அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் செவியேற்பார்கள்என்று கருதுவதும் - ஓடி வந்து உதவுவார்கள் என்று நம்புவதும், எவ்வளவு பயங்கரமான ஷிர்க் என்பது இன்னுமா புரியவில்லை? இந்த ஷிர்க்கை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
ஷிர்க்கின் பித்தம் தலைக்கேறிப் போனவர்களால் மட்டுமே அல்லாஹ்வையும் அப்துல் காதிர் ஜீலானியையும் சமமாகக் கருதமுடியும். இது போன் ஷிர்க்கிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக.பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் சிலர் அல்லாஹ்வை அழைப்பதற்குப் பதிலாக யா முஹ்யித்தீன் என்று அபயக் குரல்எழுப்புகின்றனர். இது மிகப் பெரிய பாவம் என்பதை என்பதை தாய்மார்கள் உணர வேண்டும்.உண்மையான அழைப்பு அவனுக்கே உரியதாகும்.
எவர் அவனையன்றி (மற்றவர்களை) அழைக்கிறார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்.(அல் குர்ஆன் 13 : 14)
கொடியை வணங்கும் கொடிய பழக்கம்ஊருக்கு ஊர் கொடி மரங்கள் நட்டு பச்சைக் கொடியை அதில் பறக்க விட்டு. புனிதம் என்று கருதி பூமாலைப் போட்டு பூரண கும்ப மரியாதை செலுத்தி, ஆண்டு தோறும் கொடியேற்று விழா நடத்துவது பல் வேறு ஊர்களிலும் பழக்கத்தில் உள்ளது.அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால் தான் பெரும்பாலும் இந்தக் கொடிகள் ஏற்றப் படுகின்றன. அப்துல் காதிர் ஜீலான் (ரஹ்) அவர்களுக்கும் இந்தக் கொடிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்கிற சாதாரண அறிவு கூடச் சமுதாய மக்களிடம் இல்லாமல் போனது எப்படி?கொடியை வணங்கும் இக் கொடிய பழக்கம், இஸ்லாமிய சமுதாயத்தில் இடம் பிடித்தது எப்படி?பெருமானார் (ஸல்) அவர்கள் பெயரால் கூட உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாத கொடிகள் அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறியதுஎப்படி?நாட்டுக்கு நாடு கொடிகள் உண்டு. கோட்டை கொத்தளங்களில் கொடியேற்றுவது உண்டு. போர்க் களங்களிலும்;, போராட்டக் களங்களிலும் கொடிகள் உண்டு. அரசியல் கட்சிகளுக்குக் கொடிகள் உண்டு.அவ்லியாக்கள் பெயரால் கொடிகளை எந்தக் கொடியவர்கள் இஸலாமிய சமுதாயத்தில் ஏற்றி வைத்தார்கள்?இவர்கள் கொடி மரங்களில் கொடிகளை ஏற்ற வில்லை. ஏதுமறியா பாமர மக்களின் ஈமானைக் கழுவில் ஏற்றி விட்டார்கள்.
மார்க்கம் அறியாத மக்களின் பக்தியை மரத்தில் ஏற்றி விட்டார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் கூண்டில் ஏற்றி விட்டார்கள். இறையச்சத்திற்குப் பதிலாக இணை வைத்தல் என்னும் ஷிர்க்கை இதயத்தில் ஏற்றி விட்டார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நினைவாக, அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, அவர்கள் மண்ணுலகை விட்டு மறைந்த பிறகும் சரி, எந்த நபித் தோழரும் இப்படிக் கொடியேற்றிக் குதூகலிக்க வில்லை.பெருமானார் (ஸல்) அவர்களிடம் சில நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்தனர். வரலாற்றுப் புகழ் பெற்ற இச்சம்பவம் ஒரு மரத்தடியில்நடை பெற்றது. நாளடைவில் அந்த மரத்தை மக்கள் புனிதமாகக் கருதலாயினர். ஹஜ்ரத் உமர் (ரலி) உடனே அந்த மரத்தை வெட்டி எறியும்படி உத்தரவிட்டார்கள்.மூட நம்பிக்கையின் வாயில்கள் எல்லா வகையிலும் மூடப்பட்ட ஒரு மார்க்கத்தில், சின்னஞ்சிறு விஷயத்தில் கூட ஷிர்க் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்ட ஒரு மார்க்கத்தில் சில கொடியவர்கள் இந்தக் கொடியேற்றப் பழக்கத்தைக் கொண்டு வந்து புகுத்திவிட்டனர். புகழ் மிக்க இறை நேசர்கள்பெயரால் - ஊருக்கு ஊர் தர்காக்களை உருவாக்க முடியாமல் கொடி மரங்கள் வைத்துக் கொள்ளிக் கட்டைகளால் தம் அரிப்பைச் சொரிந்துக் கொள்ளும் கொடியவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும்.கொடி மரங்களுக்கு மகிமை உண்டென்று மனதால் கூட நம்புவதும், அவற்றைப் புனிதம் என்றுக் கருதி சுற்றி வருவதும், தொட்டு முத்தமிடுவதும். கொடியேற்ற நிகழ்ச்சிக்கு நேர்ச்சை செய்வதும், காணிக்கை செலுத்துவதும், மார்கத்தில் கொடியகுற்றம் என்பதை இனியேனும் உணர வேண்டும்.இறை நேசர்கள் மீதுள்ள கண்ணியம் நமது இதயத்தில். கொடிய குற்றத்தை ஏற்படுத்தும் கொடிகள் இனி நமது காலடியில்.
இறந்தவர் வீட்டில் எத்தனை பாத்திஹாக்கள்!
குடும்பத்தில் எவரேனும் இறந்து விட்டால், மறுநாளிலிருந்து தொடங்கி விடும் பாத்திஹாக்களின் அணிவகுப்பு. 3, 5, 7, 10, 15, 20, இப்படியே 40 ஆம் நாள் தடபுடலாகப் பெரிய பாத்திஹா. பிறகு 6 மாதம், 1 வருடம். பின்னர்வருடந்தோறும்.பாத்திஹாக்கள் ஓதி ஓதியே, இருக்கின்ற பணத்தையெல்லாம் இழந்து கடனாளி ஆனவர் பலர். கையில் பணம் இல்லாவிட்டால் கடன் வாங்கியும், கடன் கிடைக்காவிட்டால் வட்டிக்கு வாங்கியும், பாத்திஹா ஓதும் முட்டாள்களை என்னவென்பது? இதனால் இம்மையிலும் நஷ்டம். மறுமையிலும் ஒரு பயனும் இல்லை.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நமது அனுமதி இல்லாத எரு காரியத்தை எவரேனும் செய்தால், அது ரத்து செய்யப்படும்.(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம். : புகாரி)
இந்த பாத்திஹாக்களின் மூலம் எத்தனையோ ஏழைகளுக்கு வயிறார உணவு கிடைக்கின்றதே, என்றும் இது நன்மை தானே என்றும் சிலர் கூறலாம், பசித்தவர்களுக்கு உணவளிப்பதில் புண்ணியம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை பாத்திஹா ஓதி தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை.பாத்திஹா ஓதி விருந்தளிப்பவர்கள் பெரும்பாலும் வசதி படைத்த உறவினர்களைத் தான் அழைக்கின்றனரே தவிர, பசியால் வாடும் ஏழைகளை மனமுவந்து அழைப்பதில்லை. விருந்து சமயத்தில் வரும் ஒரு சில ஏழைகளுக்கு-வேண்டா வெறுப்பாக- அதுவும் மிச்சம் மீதி இருந்தால் மட்டுமே கொடுக்கப்படுகின்றது. எனவே ஏழைக்கு உணவளிக்க பாத்திஹா ஓதுவதாகக் கூறுவது சுத்தப் பொய்.பெற்றோர்கள் இறந்து விட்டால் ஓரிரு நாட்கள் மட்டும் நினைவு நாள் கொண்டாடி பாத்திஹா ஓதுவதில் அர்த்தமில்லை. தினமும் அவர்களுக்காக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.ஒவ்வொரு தொழுகையிலும், தமது பெற்றோர் மண்ணறை வேதனையிலிருந்து காப்பாற்றப் படவும், மறுமையில் நற்பேற்றை அடையவும், இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். இஸ்லாம் கூறும் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தச் செலவும் இல்லை.
இறந்தவர்களுக்குக் குர்ஆன் ஓதுதல்
திரு மறை குர்ஆன் இறக்கப்பட்ட காரணங்களை இறைவனே திரு மறையின் பல்வேறு வசனங்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.
இந்த வேதம் பயபக்தி உடையோருக்கு நேர்வழி காட்டியாகும். (2:2) இது அகிலத்தாருக் கெல்லாம் உபதேசமாகும்.(81:27)
அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன் மாராயமாகவும் இருக்கின்றது.(46:12)
ஆனால் இதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் இறந்தவர்களுக்கு ஓதி ஹதியாச் செய்வதற்கு இறக்கப்பட்டதாகச் சிலர் ஒதுக்கி வைத்து விட்டனர்.திரு மறையின் ஓர் இடத்தில் கூட, இது இறந்தவர்களுக்கு ஓதுவதற்கு அருளப்பட்டதாகக் கூறப்படவில்;லை. அண்ணல் நபி (ஸல்) அவர்களும் இறந்தவர்களுக்கு ஓதி ஹதியாச் செய்யும்படிக் கூறவில்லை.மார்கத்தின் எந்த ஒரு செயலும், அல்லாஹ் திருமறையில் அறிவித்ததாகவோ, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவோ இருக்க வேண்டும். நாமாக நம் விருப்பப்படி எதையும் முடிவு செய்யக்கூடாது.
குர்ஆன் ஓதுவது நன்மை தான். அதில் சந்தேகமேயில்லை.ஆனால் இறந்தவர்களுக்கு ஓத - அதுவும் கூலிக்கு ஆள் பிடித்து ஓத மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றதா? என்றால், இல்லை.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மிகவும் அன்புடன் நேசித்த அவர்களின் மனைவி கதீஜா (ரலி) உட்பட ஏராளமானோர், நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே மரணித்துள்ளனர். அவர்களில் யாருக்கேனும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதி ஹதியாச் செய்ததாக எந்த ஹதீஸிலும் காணப்பட வில்லை.நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் எந்த ஒரு நபித் தோழரும் அவர்களுக்காக குர்ஆன் ஓதியதாக ஆதாரம் இல்லை.
நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒரு காரியத்தை எவரேனும் செய்தால் அது ரத்து செய்யப்படும். என நபி (ஸல்)அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி)
சுப்ஹான மவ்லிது
ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால், 12 நாட்களும் பள்ளிகள் தோறும் பக்திப் பரவசத்துடன் மவ்லிது ஓதப் படுகின்றது. பணக்காரர்கள் சிலர் பரக்கத்துக்காகத் தமது வீடுகளிலும் இந்த மவ்லிதை ஓதி விருந்து படைக்கின்றனர்.தமது வயிற்றுப் பிழைப்புக்காக, சில கூலிப் பட்டாளங்கள் உருவாக்கிய இப்பழக்கம், இறைவனாலோஇறைத்தூதர் (ஸல்) அவர்களாலோ, அங்கீகரிக்கப் பட்தல்ல. இந்த மவ்லிதை நிராகரிப்பதற்கு இந்த ஒரு காரணம் மட்டுமே போதும்.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் புகழ் பாடுவதாகச் சொல்பவர்களுக்கு, அந்த மவ்லிதின் அர்த்தம் தெரியாது. பொருள் தெரியாமல் இவர்கள் எப்படி புகழ் பாடுகிறார்கள்?
பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ் பாடுவது நன்மை தானே என்று சொல்பவர்களிடம், பணம் கொடுக்காமல் ஒவ்வொருவர் வீட்டிலும் வந்து புகழ் பாடிவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்லிப் பாருங்கள் காணாமல் போய்விடுவார்கள்.வசதியுள்ள வீட்டுக்கு விடி மவ்லிது. ஏழை வீட்டுக்கு நடை மவ்லிது. என்று தரம் பிரித்து தட்சணைக்குத் தகுந்தபடி வேகமும் ராகமும் வித்தியாசப் படும்.இன்னும் இது போன்ற ஏகப்பட்ட திரு விளையாடல்களால் கேலிக கூத்தாக்கப்பட்ட இந்த மவ்லிது சமாச்சாரம் இஸ்லாத்திற்கு முரணானது என்பதை உணர வேண்டும்.நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) கஃபு இப்னு சுஹைர் (ரலி) போன்ற நபித் தோழர்கள் கவிதை பாடியிருப்பதாகச் சொல்வார்கள்.ஆம் உண்மை தான்.அண்ணல் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப் பட்ட அந்தக் கவிதைகளையே எந்த நபித் தோழரும் புனிதம் என்றுக் கருதவில்லை. பள்ளிக்குப் பள்ளி பக்திப் பரவசத்துடன் ஓதிக்கொண்டிருக்கவில்லை. வீடுகளில் ஓதினால் பரக்கத் ஏற்படும் என்று நம்ப வில்லை. ராகம் போட்டு ரபீவுல் அவ்வல் மாதத்தில் வீடு வீடாகப் போய் பாடி, காசு வாங்கவில்லை.தமது செயல்களை நியாயப் படுத்த ஆதாரங்களை அள்ளி வீசுவோர் அவற்றின் மறு கோணத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை.-
முஹ்யித்தீன் மவ்லிது
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி ரபீவுல் அவ்வல் மாதம் முழுவதும் தங்கள் பிழைப்பை படுஜோராக நடத்தியவர்கள், அடுத்த ரபீவுல் ஆகிர் மாதத்திற்கான பிழைப்புக்கு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைப் பகடைக் காயாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்.அடுத்தடுத்த மாதத்திற்கான வருமானத்துக்குரிய அவ்லியாக்களின் பட்டியல் இன்னும் தயாராக வில்லை போலும்!கொஞ்சம் கூட உண்மை கலக்காமல்- முழுக்க முழுக்க கற்பனைக் கதைகளால் ஹிகாயத் என்னும் சம்பவங்களை உருவாக்கி அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் அப்பட்டமான ஷிர்க்கை எதுகை மோனையுடன் கவிதைகளாகப் புனைந்து, அதற்கு முஹ்யித்தீன் மவ்லிது என்று பெயர் சூட்டி - அல்லாஹ்வை மட்டுமே அழைத்துப் பிரார்த்திக்க கட்டப் பட்ட பள்ளிவாசல்களில் ஓதுவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணரவில்லை.அரபியில் இருப்பதால் உங்களுக்கு அர்த்தம் புரிய வில்லை. அதன் பொருளை உணர்ந்தால் துடிதுடித்துப் போவீர்கள். அந்த அளவுக்கு முஹ்யித்தீன் மவ்லிதின் படல்கள் முழுவதும்,அண்ணல் நபி (ஸல்) அவர்களை விடவும் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் அதிக சிறப்புக்கு உரியவராகவும்,அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தராகவும் வர்ணிக்கப் படுகிறார்கள்.அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத - ஷிர்க் என்னும் கொடும் பாவத்தை ஏற்படுத்தும் - இந்த முஹ்யித்தீன் மவ்லிது நன்மையைத் தருவதற்குப் பதிலாக நரகப் படு குழியில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை மறந்து விடாதீர்கள். எச்சிக்கை!
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான். (அல் குர்ஆன் 4: 48) -
புர்தாவின் பெயரால் புருடா
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி. சுப்ஹான மவ்லிதை வைத்துப் பிழைப்பு நடத்துவது போதாதென்று, கூடவே கஸீதத்துல் புர்தா என்னும் கவிதையையும் சேர்த்துக் கொண்டனர்;.எதுகையும் மோனையும் இலக்கிய நயமும் இருக்கிறது என்பதற்காகவும், ராகத்துடன் பாடுவதற்கேற்ற ரம்மியமான பாடல் என்பதற்காகவும்,இக்கவிதையை ரசிக்கலாம் என்றால், இக் கவிதையில் நபி (ஸல்) அவ ர்களை வரம்பு மீறிப் புகழப்படுகின்றது.
கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போல என்னை யாரும் வரம்பு மீறிப் புகழவேண்டாம். என்னை அல்லாஹ்வின் அடியார் என்றும், அவனது தூதர் என்றுமே கூறுங்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : புகாரி)
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால்- நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழும் இக்கவிதையை புறக்கனிக்க வேண்டும்.இந்தப் புர்தாவை ஓதுவதால் கஷ்டங்கள் நீங்கும், நோய் நொடிகள் விலகும், நாட்டங்கள் நிறைவேறும், என்று கருதுவதும், இதற்காக வெள்ளிக் கிழமை இரவுகளிலும், விசேஷ நாட்களிலும், புனிதமாகக்கருதி இதை ஓதுவதும், மார்க்கத்திற்குப் புறம்பானது.மார்க்கத்தின் பெயரால் இது போன் மடமைகளை அரங்கேற்றி தாமும் வழி கெட்டுப் பிறரையும் வழி கெடுப்பவர்கள், தங்கள் வருமானத்திற்காக மார்க்கத்தில் இல்லாததையெல்லாம் சடங்குகளாக்கி - புதிதாகப் புகுத்துபவர்கள்- புர்தாவின் பெயரால் புருடாக்கள் விட்டு பகாமர மக்களை ஏமாற்றியவர்கள், இனியாவது அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். அறியாமையால் செய்த தவறுகளுக்குஅல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேட வேண்டும்.
ஸலவாத்துன்னாரியா
நோய் நொடிகள் நீங்க, கஷ்டங்கள் தீர, நாட்டங்கள் நிறைவேற ஸலவாத்துன்னாரியா என்னும் புதிய ஸலவாத்தைக் கண்டு பிடித்து அதை 4444 ஓத வேண்டும் என்று எண்ணிக்கையையும் நிர்ணயித்திருக்கின்றனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நிர்ணயித்திருப்பதன் நோக்கமே, தனியொரு நபராக ஓதுவது சிரமம், பலரையும் கூப்பிட்டு ஓதச் சொல்வார்கள், கணிசமான ஒரு தொகையைக் கறந்து விடலாம் என்பது தான். தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக,மவ்லிது, புர்தா, ஸலவாத்துன்னாரியா, என்று இந்தக் கூலிப் பட்டாளங்களின் கண்டு பிடிப்புகள் தொடருகின்றன.இந்த ஸலவாத்தின் கருத்துக்கள் முழுவதும் தவறானவை.
அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் கொண்டுதான் நாட்டங்கள் நிறைவேறுவதாகவும், கஷ்டங்கள் தீருவதாகவும், இந்தஸலவாத்தில் காணப்படுகின்றது. இதற்கெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை.
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். மூமின்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல் குர்ஆன் 33 : 56)
என்னும் திருமறை வசனம் அருளப்பட்ட போது, நபித் தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் 'நாங்கள் எப்படி ஸலவாத் சொல்வது?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் என்று துவங்கும், அத்தஹிய்யாத்தில் ஓதுகின்ற ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்.அரபியைத்தாய் மொழியாகக் கொண்ட நபித் தோழர்கள், ஸலவாத்தை தாங்களே உருவாக்கிக் கொள்ளாமல், நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுத் தான் தெரிந்துக் கொண்டார்கள். அப்படியிருக்க, யாரோ உருவாக்கிய, அதுவும் குர்ஆனுக்கும் ஹதீஸூக்கும் முரணான கருத்துக்களை உள்ளடக்கிய ஸலவாத்தை, புனிதம் என்று கருதுவதும், அதைக் கொண்டு நாட்டங்கள் நிறைவேறும், கஷ்டங்கள் தீரும் என்று நம்புவதும், மார்க்கத்திற்கே விரோதமானது என்பதை மறந்துவிடக் கூடாது.
திக்ரு செய்வது எப்படி?
வெள்ளிக் கிழமை இரவுகளிலும், மற்றும் புனித நாட்களிலும், பள்ளிகளில் திக்ரு செய்யப் படுகின்றது. ராத்திபு என்னும் பெயரில் அழைக்கப்படும் இந்த திக்ருகளில் காதிரியா, ஷாதுலியா, ஜலாலியா, என்று எத்தனை பாகுபாடுகள்! அல்hஹ்வின் பள்ளிகளில் ஒலி பெருக்கியை வைத்துக் கொண்டு, உரத்த சப்தத்துடன் கூச்சல் போடுவது திக்ரு செய்யும் முறையல்ல. எப்படி திக்ரு செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக அல்லாஹ்வே கூறுகிறான்.
(நபியே) நீர் உம் மனதிற்குள் பணிவோடும், அச்சத்தோடும், (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும், உம் இறைவனின் (திரு நாமத்தை) திக்ரு செய்துக் கொண்டு இருப்பீராக. (அல் குர்ஆன் 7:205)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் சென்றோம். அப்போது ஓடைகளைக் கடக்கும் போதெல்லாம் சப்தமாகத் தக்பீர் கூறினோம்.உடனே நபி (ஸல்) அவர்கள் 'உங்களுடைய சப்தத்தைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் செவிடனையோ எங்கோ இருப்பவனையோ அழைக்கவில்லை. மாறாக செவியேற்பவனும் அருகில் இருப்பவனுமாகிய அல்லாஹ்வையே அழைக்கிறீர்கள்.' எனக் கூறினார்கள். (அறிவிப்பவர் அபூ மூஸல் அஷ்அரி (ரலி) ஆதாரம்: புகாரி)
குர்ஆனின் அடிப்படையிலும் நபி மொழி அடிப்படையிலும் உரத்த சப்தமின்றி மெதுவாகத் தான் திக்ரு செய்ய வேண்டும்.இல்லல்லாஹ் என்றும் ஹூ ஹூ என்றும் சிலர் திக்ரு செய்கின்றனர். 'இல்லல்லாஹ்' என்றால்'அல்லாஹ்வைத் தவிர' என்று பொருள். ஹூ ஹூ என்றால் அவன் அவன் என்று பொருள். இது போன்ற வாக்கியம் முழுமை பெறாத, அர்த்தமற்ற திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. யாரோ அடையாளம் தெரியாத ஆசாமிகள் உருவாக்கிய இது போன்ற அர்த்தமற்ற திக்ருகளை அடியோடு ஒதுக்கி விட்டு, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த திக்ருகளை, அவர்கள் கற்றுத் தந்த முறைப்படி மட்டுமே செய்ய வேண்டும். மார்க்க விஷயங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை விடவும் அதிகம் அறிந்தவர் எவரும் இல்லை என்பதை உணர வேண்டும்
சிறிய செயல்கள் ஆனால் பெரிய பாவங்கள்
சமுதாயத்தில் பரவலாகக் காணப்படும் மூட நம்பிக்கைகளையும், மூடப் பழக்கங்களையும் மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளோம். இவை போக ஊருக்கு ஊர், இன்னும் ஏராளமானவை இருக்கின்றன.பெண் குழந்தைகளுக்கு காது குத்த காணி விழா நடத்துவதும், கர்ப்பினிப் பெண்களுக்கு வளை காப்பு நடத்துவதும், வெள்ளி திங்கள்இரவுகளில் ஊதுபத்தி கொளுத்துவதும், சாம்பிராணிப் புகை போடுவதும், இரவு நேரங்களில் சில பொருட்களை அடுத்தவருக்குக் கொடுக்கக் கூடாது என்பதும், வீட்டைப் பெருக்கக் கூடாது என்பதும், கண் திருஷ்டிக்காகச் சுற்றிப் போடுவதும், ஆரத்தி எடுப்பதம், நாட்டங்கள் நிறைவேற 16 நோன்பு வைத்துப் பாத்திஹா ஓதுவதும், வீட்டுக்கு பாம்பு தேள் போன்ற விஷ ஜந்துக்கள் வந்தால் சுலைமான் நபி பாத்திஹா ஓதுவதும், குறிப்பிட்ட கிழமைகளில் எவரேனும் இறந்து விட்டால், கோழி வாங்கிக் கொடுப்பதும், இறந்தவர் வீட்டுக்கு ஆறுதல் கூற குறிப்பிட்ட கிழமைகளில் போகாமல் தவிர்ப்பதும், குர்ஆனைத் திறக்கும் போது கண்களில் ஒற்றிக் கொள்வதும், கை தவறி குர்ஆன் கீழே விழுந்து விட்டால் எடுத்து முத்தம் போடுவதும், எடைக்கு எடை உப்பு வாங்கிக் கொடுப்பதும், விதவப் பெண்கள் வெள்ளைத் துணி தான் உடுத்த வேண்டும் என்பதும், அவர்களை அபசகுனமாகக் கருதுவதும், காசு பணத்தை லட்சுமி என்று சொல்வதும், காலில் பட்டால் முத்தம் போடுவதும், பிறை நட்சத்திரத்தை இஸ்லாமிய சின்னமாகக் கருதுவதும், அம்மை நோய் ஏற்பட்டால் தாலாட்டுப் படுவதும், தலை பாத்திஹா ஓதுவதும், அம்மை நோய் கோபப்படும் என்று நம்புவதும், அப்பப்பா! எழுத எழுத இந்தப் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்தில் எங்கிருந்து வந்தன இத்தனை மூடப் பழக்கங்கள்? இவை அனைத்தும் அந்நிய கலாச்சாரங்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சேர்ந்தவர் அல்ல.
இவை அனைத்தும் சிறிய செயல்கள் தான். ஆனால் பெரும் பாவத்தை ஏற்படுத்தும்.-
என்னருமைச் சகோதரா!என்ன பதில் சொல்கிறாய்?
இஸ்லாம் இறைவனின் மார்க்கம். இது எல்லோருக்கும் சொந்தம். சத்திய மார்க்கத்தின் பால் - அதன் உயர்ந்த கோட்பாடுகளாலும், உன்னதக் கொள்கைகளாலும், கவரப்பட்ட மக்கள் சமத்துவத்தைத் தேடி - சகோதரத்துவத்தை நாடி வந்துக் கொண்டிருக்கின்றனர். ஊருக்கு ஊர் நடை பெறும் அழைப்புப் பணிகளால், ஈர்க்கப் பட்டு - ஏராளமான பிற சமய சகோதர சகோதரிகள், திறந்த மனதுடன் கேள்விகள் கேட்டுத் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துக் கொள்வதை தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் கண்டு வியப்படைகிறோம்.
நல்லதொரு விடியலை நோக்கி பலரும் நகர்ந்து வருகின்றனர்.இந்த இனிய மார்க்கத்தை நாடி வரும் சகோதர சகோதரிகளை இரு கரம் நீட்டி வரவேற்கும் அதே வேளையில் அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்? கேள்வி இது தான்.உண்மையான மார்க்கத்தின் பால் அழைப்பதாகச் சொல்கிறீர்கள். எங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? எல்லாச் செயல்களும் நடை முறைகளும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கின்றன. பெயர்கள் வேண்டுமானால் வித்தியாசப்படலாம்.
செயல்கள் எல்லாம் ஒன்று தான். ஏற்கனவே இருந்துக் கொண்டிருக்கும் வழியிலேயே இருந்து விடலாமே. புதிய வழிக்கு வரவேண்டிய அவசியம் என்ன? எந்தப் பழக்கங்களிலும் எந்த வித்தியாசமும் இல்லையே!நாங்கள் திதி திவசம் செய்கிறோம்.நீங்கள் பாத்திஹா ஓதுகிறீர்கள்.நாங்கள் தேர் இழுக்கிறோம்.நீங்கள் கூடு இழுக்கிறீர்கள்.நாங்கள் சோதிடம் பார்க்கிறோம்.நீங்கள் பால் கிதாபு பார்க்கிறீர்கள்.எங்களுக்கு ஊருக்கு ஊர் குல தெய்வங்கள்.உங்களுக்கு ஊருக்கு ஊர் தர்காக்கள்.கோயில்களில் கும்பாபிஷேகம். தர்காக்களில் சந்தனாபிஷேகம். எங்களுக்கு சாமியார்கள். உங்களுக்கு ஷெய்குமார்கள்.இந்தக் கேள்விகளுக்கு என்னருமைச் சகோதரா என்ன பதில்சொல்கிறாய்.இவையெல்லாம் இஸ்லாத்தில் உள்ளவை அல்ல. இஸ்லாத்திற்கும் இந்த மூடப் பழக்கங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புனித இஸ்லாம் இது போன்ற அனைத்து மூடப் பழக்கங்களுக்கும் அப்பாற்பட்டது. இதில் இறைவனின் பெயரால் ஏமாற்றுதல் இல்லை. ஏய்த்துப் பிழைக்கும் இழி செயல்கள் இல்லை. என்று பதில் சொல்லத் தயாராகி விட்டாயா?
இஸ்லாமிய மார்கத்தின் இணையற்ற தத்துவங்களை, ஒப்பற்ற ஒழுக்க நெறிகளை, வாழ்வின் வளமார் நடைமுறைகளை, சாந்தி வழியை, சமத்துவக் கொள்கையை, சகோதரத்துவ வாஞ்சையை, சத்தியக் கருத்துக்களை,நமது சொல்லால், செயலால், நடைமுறையால் வாழ்ந்துக் காட்டுவோம். இறைவன் காட்டிய வழியில், இறைத் தூதர் போதித்த நெறியில் நாமும் நடப்போம். பிறரையும் அழைப்போம்.
முடிவுரை
திருமறை குர்ஆனும், திரு நபி (ஸல்) அவர்களின் ஆதாரப் பூர்வமான பொன் மொழிப் பேழைகளாம், புகாரி முஸ்லிம் திர்மிதி போன்ற நூல்களும் தெளிவான தமிழில் மொழி பெயர்க்கப் பட்டு விட்ன.பொருள் தெரிந்து படித்தால்தெளிவான வழிகாட்டுதல் கிடைக்கும். நம்மிடம் இருக்கின்ற பழக்க வழக்கங்களில் எவை எவை இஸ்லாத்தில் இல்லாதவை என்பதைச் சுலபமாக இனம் கண்டு விட்டொழிக்க முடியும்.
மார்க்க விஷயங்களில் புதிது புதிதாக உருவாக்குபவைகளை உங்களுக்கு நான் எச்சரிக்கிறேன். அனைத்துப் புதியவைகளும் பித்அத் ஆகும். அனைத்து பித்அத்துகளும் வழிகேடாகும். அனைத்து வழிகேடுகளும் நரகிற்கே இட்டுச் செல்லும். என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள். (ஆதாரம். அபூ தாவூத்- திர்மிதி)
எனவே மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப் பட்ட எல்லா மூடப் பழக்கங்களை விட்டும், நூதன செயல்களை விட்டும்,மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மார்க்க விஷயங்களை அறிந்துக் கொள்ள அரபிக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெறிமுறைகளையும், அடுத்த தலைமுறையினருக்கு அழகாக எடுத்துச் சொன்ன நபித் தோழர்கள் எவரும் மவ்லவி பட்டம் வாங்கியவர்களல்ல. அண்ணல் நபி (ஸல்) என்னும் ஆன்மீகப் பல்கலைக் கழகத்தில் நேரடியாகப் காடம் பயின்றவர்கள். அந்தப் பல்கலைக் கழகம் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர்களின்ஒவ்வொரு சொல்லும் செயலும் அணு அணுவாக ஆராயப் பட்டு ஆதாரப் பூர்வமாகப் பதிவு செய்யப் பட்டு அருமையான நூல்களாக நம்மிடம் இருக்கின்றன. அனைத்தையும் படித்து அறிந்துக் கொள்ள நமக்கேது ஞானம்?நமக்கேது நேரம்? என்று இருந்து விடக் கூடாது. இருக்கின்ற அறிவை இன்னும் அதிகப் படுத்தும்படி இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்.
அதற்கான முயற்சிகளில் நாமும் இறங்க வேண்டும்.இருக்கின்ற நேரத்தில் எவ்வளவோ சாதனைகள் நிகழ்த்த முடியும். மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ள - மாநபி வழியை அறிந்துக் கொள்ள - சரியான வழியில் நாமும் நடக்க - நம்மைச் சார்;ந்தோருக்கும் போதிக்க - சிறிது நேரத்தையேனும் செலவிட வேண்டும்.தூய்மையான இஸ்லாத்தில், இடைக் காலத்தில் புகுந்து விட்ட மடமைகளை, பித்அத்துகளை, அநாச்சாரங்களை, மூடப் பழக்கங்களைத் தூக்கி எறிந்து விட்டு முழுமையான முஸ்லிம்களாக வாழ்வோம்.பிறகு நிச்சயமாக உம் இறைவன்,எவர்கள் அறியாமையினால் தீமை செய்து பின்பு (அவற்றிலிருந்து விலகி) பிழை பொறுக்கத் தேடி தங்களை சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (மன்னிப்பளிப்பவன்) நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவனாகவும், கிருபை யுடையவனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 16:119)திருக் குர்ஆன் காட்டிய திருவழியில்திரு நபி வாழ்ந்த பெரு வழியில்நபித் தோழர்கள் வாழ்ந்த நல்வழியில்அவ்லியாக்கள் வாழ்ந்த அறவழியில்இஸ்லாத்தை அதன் தூய வடிவில்பின்பற்றி வாழ்வோம். இனியேனும்

0 comments:
Post a Comment