முஸ்லிம்கள் அவர்களது பணியை சரியாகச் செய்யாவிட்டால், ஏனையவர்களைக் கொண்டு அந்தப் பணியை நான் செய்வேன் என அல்லாஹ் சொல்லியிருக்கிறான்.
உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.
எனது பெற்றோர்கள் கல்ஹின்னையைச் சேர்ந்தவர்கள். எனது தந்தை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றினார். எனவே, அவருக்கு இடமாற்றம் கிடைத்து செல்லும் இடங்களுக்கெல்லாம் நாமும் செல்ல வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் நான் பதுள்ளையில் உள்ள 'தர்மதூத”பாடசாலையில் கற்றேன். பின்னர், கம்பளை ஸாஹிறாவுக்கு வந்து சாதாரண தரம் வரை கற்றேன். பின்னர், தந்தைக்கு கொழும்புக்கு இடமாற்றம் கிடைத்தது. கொழும்புக்கு வந்து வகுப்புக்களுக்குச் சென்று வந்தேன்.
அப்போதுதான் எனக்கு சினிமாத்துறையில் நடிகராக வரவேண்டும் என்ற ஆசை வந்தது. பின்னர் ஒரு பிரபலமான நடிகராக மாறினேன். 65 திரைப்படங்கள் கதாநாயகனாக நடித்தேன். தற்போது அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒரு வியாபாரத்தை நடாத்தி வருகிறேன்.
நீங்கள் எவ்வாறு சினிமாத்துறைக்கு வந்தீர்கள்?
எனது தந்தை ஓய்வு பெற்று டுபாய்க்குச் சென்று பணியாற்றிக் கொண்டிருந்தார். டுபாய் நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் பல உள்ளன. வந்தால் சேர்ந்துகொள்ளலாம் என தந்தையார் அடிக்கடி அழைத்துக்கொண்டிருந்தார். நான் செல்லவில்லை. நான் பல திரைப்படங்கள் பார்த்தேன். எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. சில மேடை நாடகங்களை அரங்கேற்றினேன். பலரிடம் போய் நடிக்க வாய்ப்புக் கேட்டேன். யாரும் எனக்கு வாய்ப்பு தரவில்லை. கடைசியாக நானே ஒரு படத்தைத் தயாரித்தால்தான் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தேன். எனவே, பணம் சேர்ப்பதற்காக டுபாய் செல்ல முடிவு செய்து தந்தையிடம் சொன்னேன்.
அங்கு சென்று சுமார் இரண்டு வருடங்கள் அளவில் தொழில் புரிந்து பணத்தைச் சேர்த்துக்கொண்டு வந்து ஒரு படத்தைத் தயாரித்தேன். அதுதான் 'ஒபட திவுரா கியன்னம்” என்ற திரைப்படம். சுனில் சோம பீரிஸ் என்பவர்அதனை இயக்கினார். அதில் அனோஜா வீரசிங்க அவர்கள் என்னோடு ஜோடியாக நடித்தார். அந்தத் திரைப்படம்138 நாட்கள் ஓடியது. மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.