இறைவன் தனது திருவேதத்தில், ‘என்னை அழையுங்கள். நான் பதில் அளிக்கிறேன்” (அத்தியாயம் 40 சூரத்துல் முஃமின் – 60வது வசனம்) எனக் கூறியுள்ளான். நாம் அல்லாஹ்விடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் நமது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே! ஏன்? என்று மக்கள் இமாம் இப்ராஹிம் இப்னு அதஹம்(ரஹ்) அவர்களிடம் கேட்டார்கள்.
‘நீங்கள் உயிரோட்டமுள்ள இதயங்களிலிருந்து இறைவனை அழைப்பதில்லை. உங்களிடம் காணப்பட வேண்டிய பத்து விஷயங்கள் இல்லாது போய்விட்டதால் உங்கள்
இதயங்களில் ஜீவனே இல்லை!” என்று பதிலளித்தார்கள்
- இறைவனை நீங்கள் உணருகிறீர்கள்: ஆனால் அவன் ஏவிய வழிகளிலே நீங்கள் நடந்து செயல்படத் தவறிவிட்டீர்கள்.
- திருக்குர்ஆனை ஓதுகிறீர்கள்: ஆனால், அதைச் சரியாகப் புரிந்து கொண்டு நீங்கள் செயலாற்றுவதில்லை.
- பெருமானார் (ஸல்) அவர்களின் சமுதாயத்தவர்கள் நாங்கள்: அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கிறோம் எனப் பெருமைப்படுகிறீர்கள். ஆனால், அவர்களது சீரிய வாழ்வு முறையை நீங்கள் பின்பற்றுவது கிடையாது.
- சொர்க்கத்தைப் பற்றி நிறைய பேசுகிறீர்கள். அதற்குச் செல்ல வேண்டுமென்றும் ஆசைப்படுகிறீர்கள். ஆனால், அதற்குத் தகுதியானவர்களாக மாற எந்த முயற்சியும் நீங்கள் செய்வதில்லை.
- நரகத்திற்குப் பயப்படுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள் செய்யும் செயல்களோ நரகத்தின்பால் உங்களை இழுத்துச் செல்வதாகவே உள்ளன. நீங்கள் அவற்றை விட்டும் தவிர்ந்து கொள்வதில்லை!
- மரணம் நிச்சயமானது என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால், இந்த உலகமே நிரந்தரமென்று எண்ணிக்கொண்டு செயலாற்றுகிறீர்கள்.
- உங்கள் சகோதரர்களிடமுள்ள சிறு குறை கூட உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால், உங்களிடம் மலிந்துள்ள பல குறைகளை நீங்கள் எண்ணிப் பார்ப்பதே கிடையாது.
- ஷைத்தானை வெறுப்பதாகவும், அவன் உங்களின் மிகப்பெரும் எதிரி என்றும் வெளியிலே பேசிக் கொள்கிறீர்கள். ஆனால், அந்தரங்கத்திலோ அவனை வரவேற்று விருந்தளித்து கொஞ்சுக்குலாவி அவனுடன் உல்லாசமாகப் பொழுதை செலவிடுகிறீர்கள். அவனது வழிகேட்டிலேயே சதாவும் உழன்று கொண்டிருக்கிறீர்கள்.
- இறைவன் உங்களுக்களித்துள்ள அருட்பெரும் கொடைகளை புரிந்து கொள்கிறீர்கள். ஆனால் அவனுக்கு நன்றியுள்ள அடியானாக நீங்கள் நடந்து கொள்வதில்லை!
- இறந்தோரைப் புதைத்து விடுகிறீர்கள். ஆனால், உங்கள் உள்ளம் தெளிவு பெறுவதில்லை! அதிலிருந்து எந்தப்படிப்பினையும் நீங்கள் கற்றுக் கொள்வதில்லையே!
நாம் இவற்றையெல்லாம் சிந்தித்து பாடம் பெற்றுக் கொள்வது எப்போது?
‘எங்கள் இறைவா! உனது அருட்பெரும் கொடையை எங்களுக்கு வழங்கி, எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!”
0 comments:
Post a Comment