அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Friday, 28 August 2015

‘ரியா’ மறைவான இணைவைப்பு- பாகம் 4

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
 'ரியா" ஏற்படுவதற்கான காரணங்கள்

    'ரியா" ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் இறை நம்பிக்கையில் (ஈமானில்) ஏற்படும் பலவீனம் ஆகும். அல்லாஹ்வின் மீது ஒரு மனிதனுக்கு உறுதியான நம்பிக்கையில்லா விட்டால், அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதை விட மக்களின் அபிமானத்தைப் பெறுவதே அவனுக்குப் பொிதாகத் தோன்றும். ஈமானில் ஏற்படும் இந்த பலவீனத்தின் விளைவாக மறுமையில் கிடைக்கும் வெகுமதிகளையும், அருள் வளங்களையும் அவன் புறக்கணிக்கின்றான். இதே நேரத்தில், இந்த உலகில் கிடைக்கும் பெயருக்காகவும், புகழுக்காகவும் அவனது எண்ணம் அலை பாய்கின்றது. இத்தகைய எண்ணமே 'ரியா"வில் அவனை வீழ்த்துகின்றது.

'ரியா"விற்கு மூன்று அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகளைக் கண்டவுடன் இறை நம்பிக்கையாளர்கள் எச்சாிக்கையாகி, கவனமாக செயல்பட வேண்டும்.
    1. புகழை விரும்புவது:-
    நரகில் வீசப்படும், அறிஞர், வீரமரணமடைந்த தியாகி மற்றும் கொடையாளி தொடர்பாக நாம் முன்பு கண்ட நபிமொழியில் இந்த அறிகுறியைக் கவனிக்க முடிகின்றது. இந்த மூவரும், மக்களிடம் புகழ் பெற விரும்பினார்கள். அல்லாஹ்வின் திருப்தியை விட இந்தப் புகழை அவர்கள் பொிதாகக் கருதினார்கள். மக்களிடம் புகழை எதிர்பார்க்கும் மனிதன் தன்னுள் பெருமைப்பட்டுக் கொள்கிறான். தான் புகழப்படத் தகுதியுடையவன் என்றும் அவன் கருதிக் கொள்கிறான். எனவே அவன் வீம்பும், தற்புகழ்ச்சியும் உடைய மனிதனாக உருவாகும் அபாயம் ஏற்படுகின்றது.

    அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
    அல்லாஹ் சொல்கிறான் 'பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும் வல்லமை என்னுடைய அங்கியாகவும் உள்ளது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடுகிறானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன்" நூல்கள்: அபுதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்

    தற்பெருமை கொண்ட ஒரு மனிதரைப் பற்றி அல்லாஹ்வின் தூதர்; பின்வருமாறு எச்சாித்ததாக இன்னொரு நபிமொழியில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் எச்சாிக்கின்றார்கள்.

    அழிவை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் மூன்று உள்ளன. மன இச்சையைப் பின்பற்றுதல், பேராசைக்கு அடிபணிதல் மற்றும் தற்பெருமையும், இறுமாப்பும். இது (கடைசியாகச் சொன்னது) தான் மூன்றிலும் மிக மோசமானதாகும். நூல்: மிஷ்காத் அல் மசாபிஹ்

கிறிஸ்தவர்கள், யூதா;களைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு எச்சாிக்கின்றது.

    தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் தண்டனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று (முஹம்மதே!) நீர் நினைக்காதே! அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை உள்ளது. (திருக்குர்ஆன் 3:188)

    இதனால் தான், நபித்தோழர்கள், புகழப்படக்கூடிய சூழலில் கூட சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் எச்சாிக்கையாக இருந்தார்கள்.

    அப்துர்ரஹ்மான் லைலீ (இவர் இரண்டாம் கலீபா உமர் (ரலி) காலத்தில் பிறந்தவர். அலீ (ரலி), உபைபின் கஅப் மற்றும் பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டு அறிவித்தவர்) அறிவிக்கிறார்கள்.

    'அன்சார்களாக இருந்த நூற்றி இருபத்திற்கும் மேற்பட்ட நபித்தோழர்களை நான் சந்தித்துள்ளேன். அவர்களிடம் யாராவது வந்து மார்க்கத் தீர்ப்பு கேட்டால், வேறு யாராவது தனக்காக இந்தத் தீர்பை வழங்க மாட்டாரா? என்று விரும்புகிறவர்களாக அவர்கள் இருந்தனர்"
ஆதார நூல்: அத்தாாிமி

மார்க்கத்தைப் பற்றி தவறுதலாக சொல்லி விடக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் தயக்கம் காட்டுபவர்களாக இருந்தனர்.

    2. விமர்சனத்திற்கு அஞ்சுதல்
    தனது செயல்களில் உள்ள குறைகள் விமர்சனம் செய்யப்படுவதை யாரும் விரும்புவதில்லை. மார்க்க விஷயங்களில் விமர்சனம் செய்வதை விரும்பாதவர்களை இரண்டு வகையாகப் பிாிக்கலாம்.

    (அ) தன்னுடன் இருப்பவர்களின் விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக அல்லாஹ்வின் ஆணையை நிராகாிக்கும் மனிதர்கள் முதல் வகையினர். மனிதர்களிடையே புகழை இழப்பதை விட அல்லாஹ்வின் ஆணைகளைப் புறக்கணிப்பது மேல் என்று கருதுபவர்கள்இவர்கள். உதாரணமாக:- சில ஆண்கள் தாடி வைக்க விரும்புவதில்லை. இதே போல் தங்கள் தோழியர் விமர்சிப்பார்கள் என்று அஞ்சி சில பெண்கள் உாிய முறையில் பர்தா அணிவதில்லை. இவையெல்லாம் ஹராம் (தடுக்கப்பட்டது) தான். இவை 'ரியா"வின் கீழ் வராது. இறை நம்பிக்கையாளர்கள் குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

    நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோாிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போாிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போாின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். நாடியோர்க்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாரளமானவன். அறிந்தவன். (திருக்குர்ஆன் 5:54)

    படைப்பினங்களின் விமர்சனம், படைப்பாளனாக அல்லாஹ்வின் விமர்சனத்துடன் ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என்பதை உண்மையான நம்பிக்கையாளர்கள் நன்கு உணர்வார்கள்.

    (ஆ) அல்லாஹ்விற்காக அல்லாமல், மனிதர்கள் தன்னை ஏளனமாகப் பார்ப்பார்கள், தன்னைக் குறை சொல்வார்கள் என்பதற்காக இஸ்லாத்தின் சில கட்டளைகளைப் பின்பற்றுபவர்கள் இரண்டாம் வகையினர் ஆவர். உதாரணமாக வீட்டிலே தொழுது கொள்கிறார் என்று மற்றவர்கள் குறை சொல்வார்கள் என்பதற்காக அல்லது அவர் தொழுவதே இல்லை என்று மக்கள் எண்ணக் கூடாது என்பதற்காக ஒருமனிதர் பள்ளிவாசலில் தொழலாம். அல்லது மார்க்கக் கூட்டங்களின் போது அங்கு வரும் தனது மார்க்கச் சகோதாிகள் அல்லது உரையாற்றுபவர் தன்னைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காக ஒரு முஸ்லிம் பெண்மணி பர்தா அணியலாம்.

    3 மற்ற மக்களிடம் உள்ள செல்வங்களுக்காக பேராசைப்படுதல்
    மற்ற மக்களிடம் உள்ள பணம், அதிகாரம் அல்லது செல்வாக்கு மீது ஒருவருக்குப் பேராசை ஏற்பட்டால், பிறகு தன்னைப் போன்று மற்றவர்களும் தன் மீது பொறாமை கொள்ள வேண்டும் என்று அவன் விரும்புகிறான். உதாரணமாக சமுதாயத்தில் குறிப்பிட்ட அந்தஸ்தில் உள்ள மனிதர் மீது ஒருவருக்கு பொறாமை ஏற்பட்டால், அதே அந்தஸ்தை தானும் அடைய எல்லா வகையிலும் அவன் முயலுகிறான். இந்த எண்ணத்தின் விளைவாகத் தனது வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக் கொள்கிறான். அவனது பணம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவை மற்றவர்களுக்குப் பகட்டாகக் காண்பிக்கப் படுகின்றது. மார்க்க விஷயங்களும் கூட பகட்டாக காட்டப்படுகிறது. இறுதியில் 'ரியா" என்னும் பெரும் பாவத்திற்கு இவை இழுத்துச் செல்கின்றன.

    அண்ணல் நபி அவர்களின் பின்வரும் அமுத மொழி இந்த மூன்று வகையினரையும் சுட்டிக் காட்டுகின்றது.
    அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருமனிதர் நபிகள் நாயகம் அவர்களிடம் வந்து, 'ஒரு மனிதன் (பிறர் தன்னைக் குறை சொல்வதைத் தவிர்ப்பதற்காக) தனது கண்ணியத்தைத் தற்காத்துக் கொள்வதற்காகப் போாிடுகிறார். இன்னொருவர் தனது துணிச்சலை(அதற்காக பாராட்டப்பட வேண்டுமென்பதற்காக) நிரூபிப்பதற்காகப் போாிடுகிறார். மூன்றாமவர் (தனது அந்தஸ்தைப் பிறர் அறிய வேண்டுமென்பதற்காக) பகட்டிற்காகப் போாிடுகிறார். இந்த மூவாில் அல்லாஹ்வின் பாதையில் போாிடுபவர் யார்? என்று கேட்டார்.

நாயகம் அவர்கள் (பின் வருமாறு) பதில் சொன்னார்கள்.

    எவர் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்க வைக்க (அதாவது, இஸ்லாத்திற்கு கண்ணியம் சேர்ப்பதற்காகவும், இஸ்லாத்தை இந்த பூமியில் நிலை நாட்டவும்) போாிடுகிறாரோ அவர் தான் அல்லாஹ்வின் பாதையில் போாிடுபவர் ஆவார்." ஆதாரம்: புகாாி 123, 2810, 3126, 7458, முஸ்லிம், அபூதாவூத்

    'ரியா"வைப் பற்றி முன்னெச்சாிக்கைகள்!
    சில செயல்கள் 'ரியா"வின் வரம்பிற்குள் நேரடியாக வராவிட்டாலும், அவை ரியாவிற்கு இழுத்துச் செல்லும் முன்னெச்சாிக்கையாக விளங்குகின்றன. அவை 'ரியா" வரப் போகின்றது என்பதை எச்சாிக்கும் செயல்களாக விளங்குகின்றன. இந்தச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் மனிதன், தான் அதில் இறங்கியிருப்பதற்கான நோக்கத்தைத் தூய்மையான முறையில் ஆராய வேண்டும். இப்படிச் செய்வதின் மூலம் ரியாவின் வீழ்வதை அவன் தவிர்த்துக்கொள்ள இயலும்.

    1. கட்டாயக் கடமைகளை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டுதல்
    அல்லாஹ் கடமையாக்கியுள்ள தொழுகை, ஜகாத் அல்லது ஹஜ் போன்ற கடமைகளை நிறைவேற்றுவதில் ஒருவர் கவனக்குறைவாக இருப்பாரேயானால் அவரது இறை நம்பிக்கை பலவீனமாக உள்ளது என்பதற்கு அது அடையாளமாக உள்ளது. உதாரணமாக: கடைசி நிமிடம் வரை தொழுகையைத் தாமதப்படுத்தி நிறைவேற்றுவதை வழக்கமாகக் கொள்ளுதல். சில நபர்கள் சூாியன் மறைவதற்கு சில நிமிடங்கள் முன்பு தான் அஸர்; தொழுகையை நிறைவேற்றுவார்கள். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

    தமது தொழுகையில் கவனமற்று பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுவோர்க்குக் கேடு தான். அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கிறார்கள். (திருக்குர்ஆன் 107:4-7)

    இந்த வசனங்களில் கட்டாயக் கடமைகளை நிறைவேற்றுவதில் காட்டப்படும் தயக்கத்தை அல்லாஹ் ரியாவுடன் தொடர்புபடுத்துகிறான். குறித்த நேரத்தில் இந்தக் கடமைகளை நிறைவேற்ற ஒரு மனிதனுக்கு அவனது இறை நம்பிக்கை (ஈமான்) உத்வேகம் அளிக்கா விட்டால், 'ரியா" தான் அவனுக்கு அக்கடமைகளை நிறைவேற்ற உத்வேகம் அளிக்கின்றது என்று கருதலாம்.

    2. இறைவணக்கத்தில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது
    தனது அதிபதியான அல்லாஹ்வை வணங்குவதில் ஆர்வம் காட்டாத மனிதன், மனிதர்களிடமிருந்து புகழைப் பெறுவதில் மட்டும் ஆர்வம் காட்டக்கூடியவனாக விளங்குவான். நயவஞ்சகர்களைக் குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறும் போது:-

    நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். அல்லாஹ்வைக் குறைவாகவே நினைவு கூறுகின்றனர். (திருக்குர்ஆன் 4:142)

    வணக்க வழிபாட்டை நிறைவேற்றுவதில் காட்டப்படும் சோம்பல் தனத்தை இறைவன் இந்த வசனங்களில் ரியாவுடன் தொடர்புபடுத்துகிறான்.

    3. நற்செயற்களைப் பகிரங்கமாகச் செய்தல்
    தான் செய்யும் செயல்களில் நற்செயல்களைப் பகிரங்கமாகவும், தீய செயல்களை ரகசியமாகவும் செய்வதை ஒரு மனிதன் உணருவானேயானால், ரியாவில் வீழ்ந்திருப்பதற்கு இது அடையாளமாக விளங்குகின்றது.

    ரியாவை ஏற்படுத்தும் காரணங்களை நாம் உள்ளத்திலிருந்து அகற்றிக் கொள்ள வேண்டும். குழந்தைகளைப் போல் அல்லது மிருகங்களைப் போல் முக்கியமற்றவர்களாக உங்களால் கருதப்படுபவர்களின் கருத்துகளுக்கும் நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பார்த்துக் கொண்டு இருப்பது அல்லது பார்க்காமல் இருப்பதை அளவுகோலாக வைத்து உங்கள் வணக்கத்தின் நிலையை மாற்றிக் கொள்ளாதீர்கள். (உதாரணமாக மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் மட்டும் சுன்னத் தொழுகை தொழக் கூடாது. பார்க்காமல் இருக்கும் வேளையில் சுன்னத் தொழுகையை விட்டுவிடுதல்) அல்லாஹ் எப்போதும் யாவற்றையும் அறிந்து கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும்.


நற்செயல்களைப் பாழ்படுத்தும் துர்க்குணங்கள்    ...
இன்ஷா அல்லாஹ்  - அல்லாஹ்  நாடினால்   >>>>>>>>  தொடரும்

0 comments: