ஒருவர் இறந்த பின் அவரது சொத்து வாரிசுதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். வாரிசுரிமைப் பற்றிக் குறிப்பிடும் 4:11,12வது வசனங்களில்,
. . . இவ்வாறு வாரிசுகளுக்குச் சொத்து பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான். . . என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனவே, இறந்தவருக்குக் கடன் இருந்தால் சொத்து பிரிக்கப்படுவதற்கு முன் கடன் அடைக்கப்பட வேண்டும்.
"மார்க்கப் போரில் உயிர் நீத்த ஷஹீத் (தியாகி)க்கு கடனைத் தவிர மற்றெல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான். இந்த விஷயத்தை எனக்கு ஜிப்ரீல் (அலை) கூறினார்கள் என நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்.
ஆதாரம்: அஹ்மத் 2220; முஸ்லிம் 4860; திர்மிதீ 1640, 1886; நஸயீ 3156
மார்க்கப் போரில் உயிர் நீத்த ஷஹீத் என்று கூறப்படும் உயிர்த்தியாகி கேள்வி கணக்கு ஏதுமின்றி சுவர்க்கம் செல்வார் என்றிருக்க அவருக்குக் கடன் இருக்குமானால் அது மட்டும் மன்னிக்கப்படாது. ஏனெனில் கடன் என்பது பிறரது உரிமை ஆகும். பிறரது உரிமை அவர் மன்னிக்காதவரை இறைவனால் மன்னிக்கப்பட மாட்டாது. எனவேதான் இறந்தவருக்குக் கடன் இருந்தால் அதை முதலில் கொடுத்துவிட வேண்டும். அல்லது இறந்தவருக்குக் கடன் கொடுத்தவர் விரும்பினால் அந்தக் கடனைத் திரும்பிப் பெறாமல் மன்னித்து விடலாம். அதுவரை உயிர்த்தியாகியான ஷஹீத் கூட மன்னிக்கப்பட மாட்டார்.
சொத்து முழுவதும் கடனுக்கே சரியாகப் போனால் கடன் அடைக்கப்பட்டு, வாரிசுதாரர்களுக்கு ஏதும் கொடுக்கப்பட மாட்டாது. அல்லது வாரிசுதாரர்கள் இருக்க, கடன் தொகை இருக்கும் சொத்தை விட அதிகமாக இருந்தால் வாரிசுதாரர்கள் தான் அந்தக் கடனுக்கும் பொறுப்பேற்க வேண்டும். அவர்களும் வறியவர்களாக இருந்தால் செல்வந்தர்கள் யாராவது அக்கடனுக்குப் பொறுப்பேற்கலாம். அல்லது கடன் கொடுத்தவர்கள் பெருந்தன்மையோடு கடனை மன்னித்து விடலாம்.
கடன் என்பதில் மக்களிடம் வாங்கிய கடன் மட்டுமின்றி, இறந்தவர் செலுத்த வேண்டிய ஸகாத், நஷ்ட ஈட்டுத் தொகை முதலியவையும் அடங்கும் என்று சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் மனைவிக்குக் கொடுக்க வேண்டிய மஹர் கூட கடன் தான் என்றும் குறிப்பிடுகின்றனர். மற்றும் சில அறிஞர்கள், ஒரு மனிதன் இறந்த பின்னர் அல்லாஹ்வுக்காக செலுத்த வேண்டிய ஸகாத் போன்றவற்றைச் செலுத்தத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அம்மய்யித்தை அடக்கம் செய்வதற்கான செலவினங்களுக்கும், கஃபன் ஆடை போன்றவற்றிற்கும் அவரது சொத்தில் இருந்துதான் செலவு செய்ய வேண்டும். அவரது உறவினர்களில் மகன், மகள் போன்றவர்கள் தமது சொந்தப் பணத்தில் செலவு செய்தால் அது குற்றமாகாது. எனவே, இறந்தவருக்குக் கடன் இருந்தால் அதைக் கொடுத்த பின்னர் தான் அவரது சொத்து வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும்.
வஸிய்யத் (உயில்) அவசியமா?வஸிய்யத் என்றால் இறந்தவர் இறக்கும் முன் அல்லது இறக்கும் தருவாயில் சொத்துரிமைப் பங்கீடு பெறாதவர்களுக்கு அல்லது ஏதாவது தர்ம காரியத்திற்கு அல்லது மத்ரஸா, பள்ளிவாசல், அறக்கட்டளை போன்றவற்றிற்கு தனது சொத்தை சாஸனம் செய்தல் ஆகும்.
வஸிய்யத் செய்யத்தக்க பொருள்வளம் பெற்றவராக ஒருவர் இருந்தால், அப்பொருள் அவருக்குக் கிடைத்து, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வஸிய்யத்து எழுதப்பட்டு விட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(புகாரி, முஸ்லிம், முஅத்தா, திர்மிதீ, அபூதாவூத், நஸயீ)
மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள் ரஸுல் (ஸல்) அவர்களிடம் "நான் இதைக் கேள்விப்பட்ட பின்னர், எனது வஸிய்யத்தை நான் எழுதி வைத்து விட்டேன். எழுதி வைக்காமல் ஓர் இரவு கூடக் கழித்ததில்லை!" எனவும் குறிப்பிடுகிறார்கள்.
"வஸிய்யத்து செய்யத்தக்க பொருளாதாரம் ஒரு முஸ்லிமிடம் இருக்க இரண்டு இரவுகள் கடக்கலாகாது!" என நபி (ஸல்) குறிப்பிட்டதாக அஹ்மதில் பதிவாகியுள்ளது,
"உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர், ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின் அவர் (தம்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் முறைப்படி வஸிய்யத் (மரண சாஸனம்) செய்வது விதியாக்கப் பட்டிருக்கிறது. இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது முத்தகீன்கள் (பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.
வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர் எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ, அவர்கள் மீதே சாரும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகாவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
ஆனால் வஸிய்யத் செய்பவரிடம் (பாரபட்சம் போன்ற) தவறோ, அல்லது மனமுரண்டான அநீதமோ இருப்பதை அஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து அந்த (வஸிய்யத்தை) சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கின்றான்.
(அல்குர் ஆன்: 2:180,181,182)
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் வஸிய்யத் செய்வது அவசியம் என்கின்றனர் சிலர். ஒவ்வொரு வாரிசுகளுக்கும் உரிய பங்கு இவ்வளவுதான் எனக் கூறும் 4:11,12 மற்றும் 4:176வது வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னருள்ள நிலையாகும் இது. வாரிசுகளின் பாகங்கள் இவ்வளவு என இறைவன் வரையறுத்து விட்டதால் வஸிய்யத் செய்வது அவசியமானது அல்ல. ஒருவர் விரும்பினால் வஸிய்யத் செய்யத் தடை ஏதும் இல்லை.
ஆயினும், யார் யாருக்கு எவ்வளவு பாகம் என்று இறைவன் வரையறுத்து விட்டானோ அவர்களுக்காக வஸிய்யத் செய்ய அனுமதி இல்லை. அவர்கள் அல்லாத மற்றவர்களுக்காக வஸிய்யத் செய்யத் தடை இல்லை. இதற்கான ஆதாரங்கள் வருமாறு:
மேற்கண்ட 2:180வது திருவசனத்தில் பெற்றோருக்கும், உறவினருக்கும் வஸிய்யத் செய்ய வேண்டுமென வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இந்தத் திருவசனம் பற்றிக் குறிப்பிடுகின்ற அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், வாரிசுரிமை பற்றிய முன்னர் குறிப்பிட்ட திருவசனங்கள் இறங்கியவுடன் 2:180வது திருவசனம் மாற்றப்பட்டு விட்டது என குறிப்பிடுகிறார்கள்.
"நிச்சயமாக! அல்லாஹ் யாருக்கு எவ்வளவு பங்கு உரித்தானதோ, அந்த அளவு அவர்களுக்கு வழங்கி விட்டான். எனவே, வாரிசுரிமைப் பங்கு பெற்றவர்களுக்கு வஸிய்யத்து செய்யலாகாது என நபி (ஸல்) கூறினார்கள். அபு உமாமதல் பாஹிலீ (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபூதாவூதில் 2870வது ஹதீஸாகும்.
எனவே, வாரிசுரிமைப் பங்கு பெற்றவர்களுக்கு அறவே வஸிய்யத் செய்யலாகாது. பங்கு பெறாதவர்களுக்கு வஸிய்யத் செய்யலாம்.
வாரிசுதாரர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது: (மரண சாஸனத்தின் மூலம் வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது என அல்லாஹ் குறிப்பிடுகிறான். (அல்குர் ஆன் 4:12) எனவே வாரிசுகளுக்குக் கிடைக்க வேண்டிய பாகத்தில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாதவாறு வஸிய்யத்து செய்ய வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் நான் நோய் வாய்ப்பட்டிருந்த போது, என்னை நோய் வினவுவதற்காக ரஸுல் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டு விட்டேன் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள். எனக்கு ஏராளமான பொருட் செல்வம் உள்ளது. எனக்கு ஒரே ஒரு மகள் மட்டும் தான் வாரிசு. எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானமாக வழங்கிடட்டுமா? எனக் கேட்க, "வேண்டாம்" என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் பாதியை தானமாகக் கொடுத்து விடவா?" எனக் கேட்க அதற்கும் மறுத்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்து விடவா? என நான் மீண்டும் கேட்க, "மூன்றில் ஒரு பங்கு என்பது அதிகம்", என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள் "மக்களிடம் கையேந்திப் பிழைக்கும் ஏழைகளாக உமது சந்ததியினரை விட்டுச் செல்வதை விட பணக்காரர்களாக விட்டுச் செல்வது மிக நல்லது" என நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கூறியதாக ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்.
ஆதாரம் : புகாரி: 3936, 4409, 5668, 6373; முஸ்லிம்;
முஅத்தா; அபூதாவூத்; நஸயீ; திர்மிதீ
எனவே வஸிய்யத்து செய்யும் போது மூன்றில் ஒரு பங்கை விட அதிகம் வஸிய்யத்து செய்து சொத்துரிமை உள்ளவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாகாது. மூன்றில் ஒரு பங்குக்கு மேல் வஸிய்யத்து செய்திருந்தால் அது செல்லாது எனவும் அறிய முடிகிறது. மேலும் சொத்துரிமை பெறத்தக்கவர்களுக்கும் வஸிய்யத் செய்திருந்தால் அதுவும் செல்லாது என்று அறியலாம்.
பயிற்சி வினாக்கள்: (1) வாரிசுதாரர்களுக்கு சொத்து பிரித்துக் கொடுக்கும் முன் கவனிக்கப்பட வேண்டிய காரியங்கள் எவை? அதற்கான ஆதாரங்களைக் குறிப்பிடுக.
(2) உயில் (வஸிய்யத்) என்றால் என்ன? அதன் அளவு என்ன?
(3) வாரிசுரிமை பெறக் கூடியவர்களுக்கு வஸிய்யத் செய்யலாமா?
|
0 comments:
Post a Comment