இறைவனின் மாபெரும் உதவியோடு அருட்கொடையாம் ரமலானை கடந்து வந்திருக்கிறோம். சற்று பொருத்து யோசித்து பார்ப்போம்!
இந்த ரமலான் நம்மில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது?
ரமளானில் அதிகமாக குர் ஆன் ஓதினோம்...
அதிகமாக இரவு வணக்கம் புரிந்தோம்...
தவறாமல் பஜ்ரு தொழுதோம்.....
தான தர்மங்கள் அதிகம் செய்தோம்....
பாவமன்னிப்பு அதிகம் கேட்டோம்...
நன்மைகள் அதிகம் செய்தோம்....
நோன்பு வைத்து கொண்டு டிவி பார்க்காமல் இருந்தோம்........
பொய் பேசுவதை தவிர்த்து கொண்டோம்..
கோபப்படுவதை, சண்டையிடுவதை தவிர்த்தோ அல்லது குறைத்து கொண்டோம்.
வெட்டி பேச்சு பேசுவதை குறைத்து கொண்டோம்....
அல்லாஹ்விற்கே எல்லா புகழும்..... இத்தகைய நல்ல காரியங்கள் எல்லாம் ரமளானுக்கு மட்டுமே உரித்தானதா??? இத்தகைய நற்காரியங்களை ரமலான் அல்லாத நாட்களிலும் நாம் செய்ய வேண்டும் என்பதற்காக வல்லோன் ஏற்படுத்திய பயிற்சி வகுப்பே நோன்பு!
"பயிற்சி வகுப்பா?" என நாம் ஆச்சர்யப்படலாம்....!!!!! மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக, நன்மை தீமையை பிரித்து அறிவிக்க கூடிய வேதத்தை ரமளானில் அல்லாஹ் அருளினான். இந்த வேதத்தை(தியரி) படித்தால் மட்டும் போதாது! அதை செயல்முறை பயிற்சியின் (ப்ராக்டிகல்) மூலமாக மனிதன் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இறைவன் ஒரு மாதம் எடுக்கும் பயிற்சி வகுப்பே நோன்பு! இதன் மூலம் மனிதன் இறை அச்சம் உடையன் ஆகிறான். அதனால் தான் அல்லாஹ் "நோன்பு எனக்குரியது! அதற்கு நானே கூலி கொடுக்கிறேன்" என கூறுகிறான்.
பொதுவாக நாம் ரமளானில் தவிர்த்து கொண்ட காரியங்களை மற்ற மாதங்களிலும் தவிர்த்து இதே போல நற்செயல்கள் செய்தால்தான், நம்முடைய 'நன்மை அக்கவுண்டில்' மேலும் மேலும் நன்மையை சேர்க்க முடியும். இல்லையென்றால் நம் நிலை என்னவாகும் தெரியுமா?
உதாரணமாக,
நாம் கேரளாவிற்கு அவசர வேலையாக மூன்று நாட்கள் செல்லவிருக்கிறோம் என வைத்து கொள்ளுங்கள். அதற்கு தேவையான உடைகள், அணிகலன்கள், பிரஸ், பேஸ்ட், சீப்பில் இருந்து குடிக்க தண்ணீர், ஜூஸ், பிஸ்கட் என்ன என்ன தேவைப்படுகிறதோ எல்லா பொருட்களையும் எடுத்து வைத்து விட்டோம். அப்படியே கொஞ்சம் நெருப்பு கங்கையும் எடுத்து வைத்து விட்டோம்! என்னாகும் நம் நிலை???? ஊர் சென்று பார்த்தால் பொருட்கள் அனைத்தும் பொசுங்கிவிடும்! அது போலவே, நாம் பாடுபட்டு சேர்த்த கொஞ்ச, நஞ்ச நன்மைகளையும் நம்முடைய தீமைகளால் பாழடித்துவிடுகிறோம்.
நாம் சிறுவயதில் இருந்து வருடா வருடம் நோன்பு வைக்கிறோம்! ஆனால், நம்மிடம் உள்ள தீய குணங்களான அற்ப விசயத்திற்கும் பொய் சொல்லுதல், பிறரை குறை சொல்லுதல், கோபப்படுவது, சண்டை போடுவது, வெட்டி பேச்சுகள் பேசுவது எதுவும் குறைந்த பாடில்லை! அப்புறம் எப்படி நாம் இறையச்சம் உடையவராக ஆக முடியும்? நமக்கு முப்பது வயது என்றால் ஒவ்வொரு வருட நோன்பும் நம்மை பண்படுத்தி, சீர்திருத்தி இருக்க வேண்டும்! பத்து வயதில் இருந்த நம்மிடம் இருந்த பொய் பேசும் பழக்கமும், இருபது வயதில் நம்மிடம் வந்த புறம் பேசும் பழக்கமும், வெட்டி பேச்சும் நம் நாற்பது வயதிலும், ஐம்பது வயதிலும் தொடர்ந்தால் நாம் வைத்த நோன்பு நம்மை பண்படுத்தவில்லை என்பதே உண்மை!
உடனடியாக இப்பழக்கங்களை நம்மால் ஒரே நாளில் குறைக்க முடியாது. நாம் அனைவரும் இந்த பெருநாளில் ஒரு உறுதிமொழி எடுத்து கொள்வோம். அடுத்து வரும் மாதங்களில் இத்தகைய தீய பண்புகளை செய்வதை விட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட புது மனிதனாக ஈதுல் பித்ர் உடைய நாளில் அடி எடுத்து வைப்போம் இன்ஷா அல்லாஹ்...
நாம் வருடக்கணக்காக சுமந்து வந்த பாவ மூட்டைகளுக்காக இம்மாதத்தில் பாவமன்னிப்பு கேட்டு உள்ளோம்.... அடுத்து வரும் வருடங்களில் நிறைய நன்மைகளை பார்சல் செய்து கொண்டு செல்ல நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொள்வோம்.
இன்னும் என்று என்றும் உயிர் வாழ்பவனே! வானம்,பூமி படைப்பினங்கள் அனைத்தையும் நிலை நிறுத்துபவனே!உன்னுடைய அருளின் பொருட்டால் வேண்டுகிறேன்.என்னுடைய காரியங்கள் அனைத்தையும் சீராக்குவாயாக. கண் இமைக்கும் நேரம் கூட என் மனோ இச்சையிடம் என்னை ஒப்படைத்துவிடாதே! என்ற து ஆ வை தினமும் தவறாமல் கேட்போம்.(ஹாக்கிம் 545)
இன்னும் ரமளானில் விடுபட்ட நோன்புகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நோற்க வேண்டும். சுன்னத்தான நோன்புகளான ஷவ்வால் நோன்பு, அரபா நோன்பு வைத்து நன்மைகளை அள்ளலாம்.
‘ஒருவர் ரமழானில் நோன்பு நோற்று, அடுத்து ஷவ்வாலின் ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு வைத்தால், காலம் முழுவதும் நோன்பு வைத்தவர் போலாவார்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ அய்யூப்(ரழி), நூல்: முஸ்லிம்
அரஃபா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘சென்று போன மற்றும் வர உள்ள வருடங்களின் பாவங்களை அது அழிக்கும்’ என பதில் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி). நூல்:முஸ்லிம்.
அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்....
ஆதமுடைய மக்களே!மெய்யாகவே நாம் உங்களுக்கு மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும், தக்வா எனும் ஆடையே மேலானது.
நாம் ரமளானில் தக்வா என்னும் ஆடையை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என ரப்புல் ஆலமீன் கொடுத்த பயிற்சியை போடுபோக்குதனமாக விட்டு விட்டு ஷவ்வால் பிறந்ததும் தொழுகையை விட்டு விடுகிறோம்....
இல்லையென்றால் நேரம் தவறி சேர்த்து வைத்து களாவாக தொழுவது என அசட்டையாக இருக்கிறோம்.. பள்ளிகள் எல்லாம் வெறிச்சோடு கிடக்கும். முசல்லாகளுக்கு விடுமுறை கொடுக்கப்படும். திக்ரு செய்த விரல்கள் டிவி ரிமோட்டை அழுத்தி கொண்டு இருக்கும்.
காலையில் தயாரித்த டீயை மாலை குடிப்பீர்களா? சாப்பிடுவது, குடிப்பது மட்டும் சரியான நேரத்தில் ப்ரெஸ் சாக வேண்டும் நமக்கு. படைத்தோனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வதில் சோம்பேறித்தனம். இதன் மூலம் ரமளானில் நாம் அணிந்த தக்வா என்னும் ஆடையை மெல்ல மெல்ல கழட்டி வைத்து விடுகிறோம்.
தக்வா என்னும் ஆடையை அடிக்கடி அணிய விரும்புபவர் சுன்னத் ஆன நோன்புகளான13,14,15 ,மற்றும் திங்கள்,வியாழன் நோன்புகளை நோற்கலாம். இதனால் நம்மிடையே உள்ள தீமைகளை களையலாம்.... ரமளானுடைய நோன்பும் நமக்கு கடுமையாக தெரியாது!
இன்னும் ரமளானில் நாம் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான பயிற்சி வகுப்பிலும் நம்மை அறியாமல் கலந்து கொண்டுள்ளோம்! தஹஜ்ஜத் தொழுது எளிதாக சொர்க்கம் செல்ல நினைப்பவர்கள் ரமளானில் அதிகாலையிலே அலாரம் வைத்து எழுவதைப் போல் சவ்வாலிலும் அதையே பழக்கமாக்கி தொழுது கொள்ளலாம்.
இரவில் சீக்கிரம் தூங்கும் பழக்கமும் நமக்கு வந்துவிடும். பெருநாள் அன்று நம்முடைய மாற்று மத சகோதரர்களுக்கு அழைப்பு பணி செய்யும் விதமாக விருந்திற்கு அழைப்பதும் சிறந்ததாகும்.காலத்தை சரியான முறையில் பயன்படுத்தி அடுத்த ரமலானிற்குள் நிறைய நன்மைகள் கொள்ளையடிக்கும் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக!
''இந்த உலகம் நம்மை விட்டு சென்று கொண்டு இருக்கிறது.ஆனால்,மறு உலகம் நம்மை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.இரண்டுக்கும் குழந்தைகள் உண்டு.மறு உலகத்தின் குழந்தைகளாக இருங்கள்.இவ்வுலகத்தின் குழந்தைகளாக இருக்காதீர்கள்.இன்று செயல் மட்டும் தான் கேள்வி இல்லை.நாளை கேள்வி மட்டும்தான்.செயல் இல்லை.மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் மரணத்தருவாயில்தான் விழித்து கொள்கிறார்கள்.(புகாரி)
0 comments:
Post a Comment