இந்தியாவின் தலைநகர் டெல்லியில், பஸ்சில் 23 வயது நிரம்பிய மருத்துவ மாணவி கொலைவெறி பிடித்த கயவர்களால் கொடுமையான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு சின்னாபின்னம் ஆக்கியது சிறுவர் முதல் பெரியவர் வரை மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைப் பற்றி லோக் சபாவில் விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசியதாகவும், இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட வேண்டும். அவர்கள் யாருமே உயிருடன் இருக்கக் கூடாது. மறுபடியும் வாழ அவர்களுக்கு வாய்ப்பே தரக்கூடாது என்றும், ராஜ்யசபாவில் இதுதொடர்பாக நடந்த விவாதத்தின்போது சோகம் தாங்க முடியாமல் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர் விட்டு அழுததாகவும், அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள். இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன் என்றும் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியது கேட்பவர் நெஞ்சை உருக்கியது.
யார் காரணம்??? :
இவ்வாறெல்லாம் பேசிய இவர் அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையை சார்ந்தவள், இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் கலைத்துறையை சேர்ந்த இவர்கள் பாதிப்புக்குள்ளனதைவிட அந்த கலைத்துறையால் பொது மக்களும், வருங்கால சமுதயாமும் பாதிக்கப்படுகிறது என்பதை ஏனோ இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
இக்குற்றத்தை புரிந்த கயவர்களை விசாரித்தால் நாம் இந்த திட்டத்தை ஒரு படம் மூலம் பார்த்து தெரிந்துக் கொண்டோம், அதை நாம் செய்து பார்த்தால் எவ்வாறு இருக்கும் என்று முயற்சி செய்தோம் என்று கூறினால் கூட ஐயமில்லை. அந்த அளவுக்கு கலைத்துறை இன்று இளைஞர்களை தவறான வழிக்கு இழுத்து செல்கிறது. அவர்கள் புத்தியை மழுங்கச் செய்து முற்றிலும் அதிலே மூழ்கி கிடக்கச் செய்கிறது. இதனால் பல குடும்பங்கள், பெற்றோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அரைகுறை ஆடை, லிவிங் டுகெதர் லைப், டேட்டிங், லேட் நைட் பார்ட்டி போன்ற இழிவான விஷயங்களை இளையசமுதாயத்துக்குள் புகுத்திவிட்டு, இதெல்லாம் தவறே இல்லை என நெஞ்சில் நஞ்சை விதைத்து, அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் பெருமை முழுக்க முழுக்க திரைத்துறையினரையே சேரும்...
இதே போல் கடந்த பிப்ரவரி மாதம், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தனது ஆசிரியரை பள்ளியிலேயே கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்தான். அந்த வழக்கின் விசாரணையில் அம்மாணவன் தெரிவித்தது:- சமீபத்தில் பார்த்த “அக்னிபாத்” திரைப்படம் தான் தன்னை இப்படி செய்ய தூண்டியதாக தெரிவித்தார். பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் இது போன்ற காரியங்களில் இருந்து எவ்வாறு மீள்வது, நம் சமுதாயத்தை, நம் தலைமுறையை எவ்வாறு மீட்டெடுப்பது.
ஆண்கள் இவ்வாறு என்றால், பெண்கள் நடிகைகள் அணிவது போல் அரை குறை ஆடையை அணிவதும், ஆண்களுடன் சகஜமாக நட்பு பாராட்டுவதும், எவ்வித தயக்கமும் இன்றி கட்டுப்பாடும் இல்லாது பல ஆண்களுடன் ஊர் சுற்றுவதுமே இது போன்ற காரியங்கள் நடக்க மூலக் காரணமாக அமைகிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். சுதந்திரம் என்கின்ற பேரில் பெற்றோரும் கண் மூடித்தனமாக அனைத்தையும் அனுமதிப்பது அதைவிடக் கொடுமை. தன் குழந்தையின் வாழ்க்கையை சீரழிப்பதற்கு வழியை ஏற்படுத்தி தருவதில் இவர்களின் பங்கு தான் அதிகம்! இரவு நேரத்தில் தன் மகளை தனியே வெளியே அனுப்ப, ஊர் சுற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கு இது சரியான பாடம் என சொல்வதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை!
இந்தியச்சட்டத்தினை நம்பினால் :
இந்தியா முழுவதும் டெல்லி கற்பழிப்பு சம்பவம் குறித்து எதிர்ப்பு அலைகள் வருகிறது. கடுமையான தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என பலரும் கூறிவருகிறார்கள். மத்திய மாநில அரசு பொறுப்புதாரிகளும் இனி இது போல் சம்பவம் நடக்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க போவதாகவும் அறிவித்திருக்கின்றன. நல்ல விஷயம் தான்... இவர்களின் செயல்பாடுகளில் நம்பிக்கையில்லாத நம் கேள்விக்கு ஷிண்டே இவ்வாறு பதில் கூறியிருந்தார் "2 நாள் கழித்து இந்த சம்பவத்தை அப்படியே மறப்பேன் என நினைக்க வேண்டாம்... நானும் 3 பெண் குழந்தைகளை வைத்துள்ளேன். அதனால் நிச்சயம் நடவடிக்கை கடுமையாக இருக்கும்"... நம்பிக்கை ஊட்டி சந்தேகத்தை போக்கும் விதமான பதிலுக்கு நிச்சயம் பாராட்டு தெரிவித்தே ஆக வேண்டும்... ஆனால்ல்ல்ல்ல்.......
இதே போலவே... கேரளாவில் ஓடும் ரயிலில் சவுமியா என்ற பெண்ணை ஒரு கயவன் கற்பழித்து அந்த பெண் தன் கற்பை காக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த போதும் வெறியடங்கா அந்த ஈனப்பிறவி தலையில் அடிப்பட்ட நிலையிலும் கூட அவளை கற்பழித்திருக்கிறான். இதே போலவே நாட்டை உலுக்கிய சம்பவம் அது! அந்த வெறிநாய்க்கு இதுபோலவே மரணதண்டனை என சொல்லப்பட்டதோடு சரி... இன்னும் இதுபோல் சம்பவங்கள் எந்த ஒரு அச்சமும் இல்லாமல் அரங்கேறிதான் வருகிறது. கடந்த வருடத்தில் மட்டுமே டெல்லியில் 572 பெண்கள் பலத்காரத்திற்குட்படுத்தப்பட்டார்கள் என அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டிருக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு! இந்திய சட்டம் போன்ற குற்றவாளிகளை தப்பிக்க விடும் சட்டத்தால் இக்கயவர்களை ஒன்றும் அசைக்க முடியாது என்பது மட்டும் உறுதி! நிச்சயமாக இன்று ஆவேசக்குரல் எழுப்புபவர்கள் அடுத்த சூடான செய்தி வரும் சமயம் இதில் இருந்து ஒதுங்கிவிடுவார்கள்... இதான் இன்றைய நிலை!
தீர்வை நோக்கி பயணிப்போம்:
இஸ்லாம் கூறும் ஹிஜாப் என்பது ஆடைகளில் மட்டும் அல்ல! பேச்சில், செயலில், நடைமுறையில் என அனைத்திலும் கட்டுப்பாடு ஒழுக்கம் பேணிவது தான் ஹிஜாப்! ஆண்களுக்கும், பெண்களுக்கு சமமான கட்டளையை இட்டு “அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் “ (24:30,31) என தங்களை தீங்குகளில் இருந்து பாதுகாத்து கொள்ள எச்சரிக்கிறது. இது போன்ற தீங்குகளில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவே அற்புதமான அழகிய அறிவுரையை வல்ல இறைவன் வழங்கியுள்ளான். பின்வரும் இவ்வசனம் ஒன்றே போதும் பெண்கள் இது போன்ற கஷ்டங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்பதற்கு. சுபஹானல்லாஹ்....
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அலங்கலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; (24:31).
மேற்குறிப்பிட்ட அறிவுரை போல் அல்லாது நட்பு என்கின்ற பெயரில் அந்நிய ஆடவருடன் அரை குறையாக பார்ப்பவரை கவரும் வகையில் ஆடை அணிந்து வரைமுறையற்று ஊர் சுற்றினால் துறவனும் கண் திறந்து ரசிப்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த அறிவுரையை ஒவ்வொரு பெற்றோரும் அனுதினமும் தன் பிள்ளைகளுக்கு கூறி எச்சரிக்கை செய்தால் அவர்கள் கவனமாக இருக்க இது போன்ற சம்பவங்களில் தங்களை காப்பாற்றிக் கொள்ள உதவும், இதனால் தான் உங்களுக்கு நம்பிக்கையான உங்கள் குடும்ப உறுப்பினர்களை தவிர எவ்வித பாதுகாப்பும், அக்கறையும் அற்ற அந்நிய ஆண்களுடன் தனித்து இருப்பதை இஸ்லாம் எச்சரிகிறது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:- ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போது மூன்றாவதாகசைத்தான் இருக்கிறான்( நூல் – திர்மிதி)வரும் முன் காப்பதே சிறந்ததே தவிர, வருவது வரட்டும் வாழ்வது மாடர்ன் உலகம் என்றாகி போனால் கண்ணை விற்று ஓவியம் வாங்குவதற்கு சமம்.
மேலும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். “நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடன்நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறானநோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையேபேசுங்கள்”.அல்குர்ஆன்-33:32
இப்படி ஒரு கொடுமைக்கு ஆளான அந்த பெண்ணால் இனி இந்த உலகில் எவ்வாறு சுதந்திரமாக, கண்ணியமாக வாழ முடியும். அனுதினம் செத்து செத்து பிழைக்கும் அவளது வாழ்வு நரகமே. இதற்காகவே இஸ்லாம் வகுத்த ஹிஜாப் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் முக்கியமான ஒன்று என்பதை இது போன்ற சம்பவங்கள் மேலும் மேலும் வலியுறுத்துகிறது. உண்மையை சொல்ல வேண்டும் எனில் எத்தனையோ பேர் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் என்பது ஓர் அடக்குமுறை, அடிமைத்தனம், சுதந்திரமற்றவை என்று கூச்சல் போடுகின்றனர். உண்மையில் ஹிஜாப் என்ற ஆபாசம் அற்ற கவசத்தை உடையாகவும் வாழ்வியல் நெறியாகவும் அணிந்து, அடக்கத்தை கையாண்ட எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு பரிதாபம் ஏற்பட்டதில்லை என்பதே உண்மை.
உடை தான் சுதந்திரம் என்றால், எதற்காக அரை குறை ஆடை அணிந்து பாதி சுதந்திரத்துடன் உலகில் உலாவ வேண்டும், ஒன்றும் அணியாமல் நீங்கள் முழு சுதந்திரத்துடன் அலையலாமே இவ்வுலகம் உங்களை முழு சுதந்திரமானவள் என்று பாராட்டும் அல்லவா??
யாரை குறை சொன்னாலும், குறை கூறினாலும் பெண்கள் தங்களை பெண்களுக்கென்று வகுத்த கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாத வரை இது போன்ற சம்பவங்கள் நிகழும் என்பதில் ஐயமில்லை. இதற்கு மூலக் காரணம் ஆன கலைத் துறையை சேர்ந்தவர்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து விட்டு அவர்கள் வேலையை மீண்டும் தொடரத்தான் போகிறார்கள். நம் வருங்கால தலைமுறையை ஆட்கொண்டு அழிக்கத்தான் போகிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதில் இருந்து தங்கள் பிள்ளைகளை காக்க ஒவ்வொரு பெற்றோரும் கவனம் செலுத்த வேண்டும். இன்ஷா அல்லாஹ்...
0 comments:
Post a Comment