அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Tuesday, 1 January 2013

பொறுமை சொர்க்க வாசிகளின் பண்பு. பொறுமைக்குக் கூலி சுவனமாகும்.


இந்தப் பொறுமையானது மூன்று அடிப்படையின் மீதுள்ளது. முதலாவது, அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கட்டுப்பட்டு வாழ்வதில் ஏற்படும் இடையூறுகளை சகித்துக் கொள்வது. இரண்டாவது அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் காரியங்களில் ஈடுபடாமல் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வதில் உள்ள சகிப்புத் தன்மை. மூன்றாவது உலகத்தில் ஏற்படும் துன்பங்களையும் சோதனைகளையும் சகித்துக் கொள்வது.
இப்படிப்பட்ட சகிப்புத் தன்மை கொண்ட மக்களை அல்லாஹ் புகழ்ந்து பேசுகிறான். அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று வாக்களிக்கிறான்.
وَالَّذِينَ صَبَرُواْ ابْتِغَاء وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُواْ الصَّلاةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلانِيَةً وَيَدْرَؤُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُوْلَئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ  جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَالْمَلائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ سَلامٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ
எவர்கள் தமது இரட்சகனின் (சங்கையான) முகத்தை நாடி, பொறுமையாக இருந்து, தொழுகையை நிலைநாட்டி, நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் பரசியமாகவும் செலவு செய்து, தீமையை நன்மையால் தடுக்கின்றார்களோ அவர்களுக்கே (சுவனம் எனும்) இறுதி வீடு உண்டு.
அவர்களும் அவர்களது மூதாதையர்கள், அவர்களது துணைவிகள், அவர்களது சந்த்திகள் ஆகியோரில் நல்லவர்களாக இருந்தவர்களும் நிலையான சுவனச்சோலைகளில் நுழைவார்கள். வானவர்கள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் அவர்களிடம் நுழைவார்கள். நீங்கள் பொறுமையாக இருந்த்தற்காக உங்கள் மீது சாந்தி உண்டாவதாக.  (சுவனம் என்னும்) இறுதி வீடு மிகவும் சிறந்த்தாகி விட்டது. (13: 22,23,24)

இறைநம்பிக்கையாளர்கள் பொறுமையை மேற்கொள்வார்கள். ஏனெனில் பொறுமையை மேற்கொள்ளுமாறு அல்லாஹ் அவர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறான்.
يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاة ان الله مع الصابرين
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (2:153)
يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون
நம்பிக்கைகொண்டோரே! நீங்கள் பொறுமையாக இருங்கள்; சகிப்புத் தன்மையை மேற்கொள்ளுங்கள். இன்னும் உறுதியாக இருங்கள். நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.(3:200)
இறைநம்பிக்கையாளர்கள் பொறுமையை மேற்கொள்வார்கள். ஏனெனில் பொறுமையை மேற்கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்குக் அவ்வாறு கட்டளையிட்டிருக்கிறார்கள்.
தன் உறவினர் ஒருவரின் கப்ருக்கு அருகே அவரின் பிரிவை எண்ணி அழுது கொண்டிருந்த ஒரு பெண்மணியை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, நீ அல்லாஹ்வை அஞ்சி பொறுமையை மேற்கொள்வாயாக! என்று கட்டளையிட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் தன் தோழர்களிடம் இவ்வாறு கூறினார்கள், ஹவ்ளி(ல் கவ்சரி)ல் என்னை நீங்கள் சந்திக்கும் வரை பொறுமையை மேற்கொள்ளுங்கள் (புகாரி, முஸ்லிம்)
தன் குழந்தையின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து கவலைப் பட்ட தன் அருமை மகளிடம் நபி (ஸல்) அவர்கள் சொல்லியனுப்பிய ஆறுதல் மொழிகள் இவ்வாறிருந்தன:
 அல்லாஹ் எதனை எடுத்துக் கொள்கிறானோ அது அவனுக்குரியது!எதை அவன் கொடுத்தானோ அதுவும் அவனுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடத்தில் குறித்த  தவணை உள்ளது! எனவே (என் மகளாகிய) அவள் அல்லாஹ்விடம் பிரதிபலனை எதிர்பார்த்து பொறுமையை மேற்கொள்ளட்டும்! (புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு மரணம் வரை பொறுமையைக் கடைபிடிப்பவர்களே நல்லடியார்கள். அவர்களே சொர்க்கவாசிகள்.
பொறுமை நன்மையைக் கொண்டு வரும். இதை அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.
وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُواْ بِمِثْلِ مَا عُوقِبْتُم بِهِ وَلَئِن صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصَّابِرِينَ  وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلاَّ بِاللَّهِ وَلاَ تَحْزَنْ عَلَيْهِمْ وَلاَ تَكُ فِي ضَيْقٍ مِّمَّا يَمْكُرُونَ  إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَواْ وَّالَّذِينَ هُم مُّحْسِنُونَ
நீங்கள் தண்டிப்பதாயின் நீங்கள் துன்புறுத்தப்பட் அளவுக்கே தண்டியுங்கள். நீங்கள் பொறுமையுடனிருந்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே மிகச் சிறந்ததாகும். (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக! உமது பொறுமை அல்லாஹ்வுக்கே அன்றி வேறில்லை. அவர்களுக்காக நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் சூழ்ச்சி செய்வதன் காரணமாக நீர் (மன) நெருக்கடிக்குள்ளாக வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) அஞ்சி நடப்பவர்களுடனும், நன்மை செய்பவர்களுடனும் இருக்கின்றான். (16:126-128)
இறை நம்பிக்கையாளனின் பொறுமையைக் குறித்து தமது வியப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் கூறினார்கள்.
ஒரு முஃமினின் காரியம் ஆச்சரியமானதே! அவனது காரியம் அனைத்தும் நல்லதாக அமைகிறது. ஒரு முஃமினைத் தவிர வேறு எவருக்கும் இது நிகழ்வதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் நன்றி கூறுகிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகிறது. அவனக்கு தீயவை ஏற்பட்டுவிட்டால், பொறுமையாக இருக்கிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகிறது (முஸ்லிம்)
சகிப்புத் தன்மை இறுதியில் அழகிய முடிவைத் தரும். இறை உதவியைப் பெற்றுத் தரும்.
இதற்குச் சிறந்த உதாரணம் இறைதூதர் யூசுஃப் (அலை) அவர்களின் பொறுமையும் அதன் காரணமாக அல்லாஹ் அவர்களுக்கு அளித்த சிறப்பும் ஆகும். இந்த அழகிய வரலாற்றுச் செய்தியை அல்லாஹ் திருமறையின் பன்னிரண்டாம் அத்தியாயத்தில் விவரித்துள்ளான்.
யூசுஃப் (அலை) அவர்கள் தம் சகோதரர்கள் கிணற்றில் தள்ளி தனக்கு இழைத்த கொடுமையை சகித்துக் கொண்டார்கள். தான் அறிந்த நிலையிலேயே அற்ப விலைக்கு விற்கப்படுவதை சகித்துக் கொண்டார்கள். அஸீஸின’ மனைவியின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் சிறை செல்ல நேரிட்டதையும் சிறை வாழ்க்கையையும் பொறுத்துக் கொண்டார்கள். அதனால் சிறையிலிருந்து வெளி வரும்போது ஒரு நாட்டின் நிதி அமைச்சர் என்ற கண்ணியமான பதவியைப் பெற்றுக் கொண்டார்கள். அல்லாஹ் அவருக்கு கண்ணியத்தையும் சிறப்பையும் கொடுத்தான். தனக்குத் தீங்கிழைத்த தன் சகோதரர்களிடம் இதை யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நினைவூட்டியதை அல்லாஹ் இவ்வாறு விவரிக்கின்றான்.
قَالَ هَلْ عَلِمْتُم مَّا فَعَلْتُم بِيُوسُفَ وَأَخِيهِ إِذْ أَنتُمْ جَاهِلُونَ قَالُواْ أَإِنَّكَ لَأَنتَ يُوسُفُ قَالَ أَنَاْ يُوسُفُ وَهَذَا أَخِي قَدْ مَنَّ اللَّهُ عَلَيْنَا إِنَّهُ مَنَّ يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ اللَّهَ لاَ يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
“நீங்கள் அறியாதோராக இருந்தபோது யூசுஃபுக்கும் அவரது சகோதரருக்கும் என்ன செய்தீர்கள் என்பதை அறிவீர்களா? என்று (யூசுஃப்) கேட்டார்.
(அதற்கு அவர்கள்) நிச்சயமாக நீர்தான் யூசுஃபோ எனக் கேட்டனர். அ(தற்கவ)ர் ‘நான்தான் யூசுஃப்; இவர் என் சகோதரர். நிச்சயமாக அல்லாஹ் எம்மீது பேருபகாரம் புரிந்துள்ளான். எவர் (அவனை) அஞ்சி நடந்து, பொறுமையுடன் இருக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்’ எனக் கூறினார் (12:89,90)
இறை நம்பிக்கையாளர்கள் பொறுமையை மேற்கொள்வார்கள். ஏனெனில் பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கின்றான் என்பதால். அல்லாஹ்வின் பாதையில் உறுதியுடன் இந்த நன்மக்களைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.
… فَمَا وَهَنُواْ لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُواْ وَمَا اسْتَكَانُواْ وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ
…அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் மனம் தளரவோ, பலவீனப்படவோ, அசத்தியத்திற்கு அடிபணியவோ இல்லை. மேலும் பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான். (3:146)
பொறுமையாளர்களுடனேயே அல்லாஹ் இருக்கிறான்.
وَأَطِيعُواْ اللَّهَ وَرَسُولَهُ وَلاَ تَنَازَعُواْ فَتَفْشَلُواْ وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُواْ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
மேலும் நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்களுக்குள் முரண்பட்டுக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் துணிவிழந்து உங்கள் பலமும் இல்லாமல் போய்விடும். பொறுமையாக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (8:46)
பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான். பொறுமையாளர்களோடு அல்லாஹ் இருக்கிறான். எனவே அல்லாஹ்வுடைய உதவியும் பொறுமையின் மீதே அமைந்திருக்கிறது.
وما النصر الا من عند الله العزيز الحكيم
இவ்வுதவி யாவற்றையும் மிகைத்தவனும் ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர இல்லை.(3:126)
இறை நம்பிக்கையாளர்கள் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் பொறுமை ஈடேற்றம் தரும். நிரந்தரமான இழப்பிலிருந்து விடுதலை தரும். மனித சமுதாயம் நஷ்டத்தில் இருக்கிறது. ஆம் நிரந்தரமானதொரு இழப்பில்! நான்கு விசயங்கள் யாரிடம் ஒருங்கிணைந்திருக்கிறதோ அவர்கள் அந்த நிரந்த இழப்பிலிருந்து விடுபடுவர். அப்படிப்பட்ட குணங்களில் ஒன்று பொறுமையாகும். இதனையே அல்லாஹ் தனது திருமறையில் 103 வது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறான்.
وَالْعَصْرِ  إِنَّ الإِنسَانَ لَفِي خُسْرٍ إِلاَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
காலத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். (எனினும்) எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்து, இன்னும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொண்டுமிருந்தார்களோ அவர்களைத் தவிர. (103:1-3)
ஈமான் கொண்டு நல்லறங்கள் புரிந்து, நன்மையை ஏவி தீமையைத் தடுத்து பொறுமையையும் மேற்கொள்ளும் நன்மக்களே இழப்பிலிந்த விடுதலையடைவர் என்ற அடிப்படையான செய்தியை மேற்கண்ட வசனம் தருகிறது. இதனை அடிப்படையாக்க் கொண்டே லுக்மான் (அலை) தன் மகனுக்கு உபதேசித்ததாக திருமறை கூறுகிறது.
يَا بُنَيَّ أَقِمِ الصَّلاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الأُمُورِ
என்னருமை மகனே! நீ தொழுகையை நிலைநாட்டுவாயாக! நன்மையை ஏவி, தீமையை விட்டும் தடுப்பாயாக! உனக்கு ஏற்படுபவற்றின் மீது பொறுமையாக இருப்பாயாக! நிச்சயமாக இது உறுதி மிக்க காரியங்களில் உள்ளதாகும். (31:17)
பொறுமை காக்கும் நல்லடியார்களுக்குக் கணக்கின்றி நற்கூலிகள் இருப்பதாக அல்லாஹ் நற்செய்தி சொல்கின்றான்.
إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍ
பொறுமையாளர்களுக்கு அவர்களது கூலி கணக்கின்றி வழங்கப்படும்  (39:10)
இன்னும் அல்லாஹ் கூறுகின்றான்:
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمْوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُواْ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُوْلَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ أُوْلَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ
நிச்சயமாக ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு (நபியே) நீர் நன்மாராயம் கூறுவீராக. (2:155)
பொறுமை மற்றும் சகிப்புத்தன்மைக்குரிய நல்லடியார்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக! எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

0 comments: