அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Friday, 28 August 2015

‘ரியா’ மறைவான இணைவைப்பு- பாகம் 5

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
 நற்செயல்களைப் பாழ்படுத்தும் துர்க்குணங்கள்

    இரண்டு மிக முக்கிய அடிப்படைகளில் ரியாவை வகைப்படுத்தலாம். ஒன்று நேரத்தின் அடிப்படையில் எழும் ரியா, மற்றொன்று செயல்களின் அடிப்படையில் எழும் ரியா ஆகும்.

    1. நேரத்தின் அடிப்படையில் எழும் ரியா
    எந்தவொரு செயலிலும் ரியா ஏற்படலாம். இது அந்த செயலுக்கு முன்பு அல்லது செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அல்லது செயல் முடிவடைந்த நேரத்தில் நிகழலாம். நற்செயல்களினால் விளையும் நன்மைகளைத் தடுக்க, ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஷைத்தான் மிகப் பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அ. ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு ஏற்படும் ரியா
    புகழ் பெற வேண்டுமென்பதற்காக நற்செயலைப் புரிய வேண்டும் என்று எண்ணுவது, ரியாவின் மிக மோசமான வடிவம் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. அப்படிப்பட்ட செயலை செய்பவன் நயவஞ்சகத்தின் விளிம்பிற்குச் சென்று விட்டான். அல்லாஹ்விற்காக இந்தச் செயலைச் செய்கிறோம் என்ற எண்ணம் கூட அந்த மனிதனுக்கு ஏற்படுவதில்லை. மக்களால் பாராட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் தான் அந்த மனிதனது உள்ளத்தில் மேலோங்கியிருக்கின்றது. நயவஞ்சகர்களைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது:-

    நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். அல்லாஹ்வைக் குறைவாவே நினைவு கூர்கின்றனர். (திருக்குர்ஆன் 4:142)

    நாம் மேலே விவாித்த ரியாவை இந்த வசனங்களில் அல்லாஹ் நயவஞ்சகத்துடன் ஒப்பிடுகின்றான். எண்ணங்கள் மற்றும் குறிக்கோள் தொடர்பான இணைவைப்பிற்கு மிகவும் நெருக்கமானதாக இந்த வகை ரியா அமைந்துள்ளது. இந்த வகையான நற்செயல் அல்லாஹ்வினால் அங்கீகாிக்கப்படமாட்டாது என்பதையும், நயவஞ்சகம் என்ற ஆன்மீக நோய் தாக்கியதின் விளைவே இத்தகைய செயல்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

    ஆ. ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும் போது ஏற்படும் ரியா
    இந்த வகை ரியாவில் ஒருமனிதர் நற்செயலை அல்லாஹ்விற்காக என்ற தூய்மையான எண்ணத்துடன் தான் தொடங்குகிறார். பிறகு தனது செயலைப் பிற மக்கள் கவனிக்கிறார்கள் என்பதைக் காணும் அவர், அந்தச் செயலை மேலும், அலங்காித்துக் கொண்டு, மற்றவர்களை விட தான் பக்திமான் என்று பகட்டாகக் காட்டிக் கொள்கிறார்.

    இந்த வகையான ரியாவைப் பற்றி அண்ணல் நபி அவர்கள் குறிப்பிடும் போது, 'மனிதர்களே, மறைவான இணைவைப்பு குறித்து எச்சாிக்கையாக இருங்கள்" என்று குறிப்பிட்டார்கள். மக்கள், நாயகம் அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதரே! மறைவான இணைவைப்பு என்றால் என்ன?" என்று வினவினார்கள். அண்ணல் நபி  அவர்கள் 'ஒருமனிதர் தொழுகைக்காக எழுந்து நிற்கிறார். மக்கள் அவரை உற்று நோக்குவதைக் கண்டவுடன் தனது தொழுகையை அவர் அலங்காித்துக் கொள்கிறார். இது தான் மறைவான இணைவைப்பு" என்று நபி  விளக்கம் அளித்தார்கள். ஆதாரம்: இப்னு குஸைமா மற்றும் சுனன் இப்னு மாஜா

    இந்த அடிப்படையில் செய்யப்படும் நற்செயல்களுக்கு சன்மானம் உண்டா, இல்லையா என்பது குறித்து அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உண்டு. இந்நற்செயல்கள் இணைவைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவை நிராகாிக்கப்படும் என்று சில அறிஞர்கள் கருதுகின்றார்கள். வேறு சில அறிஞர்கள் நற்செயலின் ஒரு பகுதி ஏற்றுக் கொள்ளப்பட்டு, மற்ற பகுதி நிராகாிக்கப்படும் என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.

    இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், கெட்ட எண்ணத்துடன் நற்செயலை புரிபவர், அதனால் விளையும் நன்மை முழுவதையும் அல்லது அதன் பெரும்பாலான பகுதிகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். கெட்ட எண்ணத்துடன் நற்செயல்களைப் புரிபவர்கள் இறுதித் தீர்ப்பு நாளில் பெரும் துயரத்தில் இருப்பார்கள். பின்வரும் நபிமொழி அத்தகையோருக்கு எச்சாிக்கையாக அமைந்துள்ளது. அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

    அல்லாஹ் கூறினான்: 
'    நானே (எத்தேவையுமின்றி) தன்னிறைவு உள்ளவனாக விளங்கும் போது, எனக்குத் துணையாக யாரும் தேவையில்லை. யாரேனும், எனக்கு வேறொருவரை இணைவைக்கும் விதத்தில் ஒரு செயலைச் செய்தால், (எனது உதவின்றி) அவனுடைய இணைவைப்புடன் அவனை நான் விட்டு விடுகிறேன்." ஆதார நூல்கள்: முஸ்லிம், அஹ்மது, இப்னு மாஜா

    இ. நற்செயலை செய்து முடித்த பின் எழும் ரியா!
    ஒருமனிதர் தூய்மையான எண்ணத்துடன், அல்லாஹ்விற்காக மட்டுமே இச்செயலை செய்கிறோம் என்று எண்ணி அச்செயலை நிறைவேற்றுகிறார். பிறகு அவர் செய்த நற்செயலைப் பார்க்கும் மக்கள் அவரைப் புகழத் தொடங்குகிறார்கள். பிறகு தனது செயலை எண்ணி அவர் பெருமை கொள்கிறார். மக்கள் தன்னைப் புகழ்வதைக் கண்டு அவர் பெருமிதம் கொள்கிறார். மக்கள் தன்னைப் பற்றி மென்மேலும் புகழ்ந்து பேசவேண்டும் என்ற எண்ணமும், மக்கள் தன்னைப் புகழ்வதை கேட்பதில் ஆர்வமும் கொள்கிறார்.

    இந்தமனிதர் முதலில் அல்லாஹ்விற்காகவே தனது நற்செயலைச் செய்திருந்தாலும், பிறகு ஷைத்தான் இவரது உள்ளத்தில் புகுந்து அற்பமான செயலுக்கும் இவரைப் பெருமை கொள்ள வைக்கின்றான். இந்த வகை ரியாவிற்கு இன்னொரு எடுத்துக் காட்டையும் நாம் கூற முடியும். இறைவனுக்காக என்ற தூய எண்ணத்துடன் அறப்போர் புரிந்து விட்டுத் திரும்புவார்கள், தொடர்ச்சியாக மக்கள் தங்களைப் புகழும் நிலையை எதிர் நோக்கலாம். புகழப்படும் நிலை ஏற்படலாம். இதன் விளைவாக அந்த அறப்போராளிகள், தாங்கள் அறப்போர் புரிந்ததின் உண்மையான நோக்கத்தை மறந்து விட்டு, தாங்கள் புகழப்படுவதைக் கண்டு பரவசம் அடைகின்றனர். கூட்டங்களில் தங்கள் பெயர் குறிப்பிடப்பட வேண்டுமென்றும், மக்களிடையே தங்கள் புகழ் பரவ வேண்டுமென்றும் விரும்புகின்றனர்.

    ஒருமனிதர் தனது நற்செயலைப் பற்றிப் பெருமிதம் கொண்டு, அதற்காக மனிதர்கள் தன்னைப் புகழ வேண்டும் என்று எண்ணாத வரை நற்செயலுக்கான கூலி அந்த மனிதரைச் சென்றடையும் என்ற கருத்து தான் வலுவானதாக உள்ளது. நற்செயல் செய்த அந்த மனிதரது எண்ணம் மாறும் போது தான், அதற்குாிய நற்கூலியும் நிறுத்தப்படுகின்றது. எனவே, தனது செயலுக்கான முழு வெகுமதியையும் பெறும் வாய்ப்பை அந்தமனிதர் இழக்கக்கூடும். உண்மை நிலையை இறைவன் நன்கறிவான்.

    இந்த வகையான ரியாவைக் கண்டுபிடிப்பதும் அதனை எதிர் கொண்டு வீழ்த்துவதும் தான் மிகக் கடினமான வேலையாகும். ஏனெனில், நாம் அந்த நற்செயலை அல்லாஹ்விற்காகவே செய்து முடித்து விட்டோம் என்ற எண்ணத்துடன் அதனைச் செய்தமனிதர் இருக்கிறார். இது பற்றி கருத்து தொிவித்துள்ள அறிஞர் இப்னு அல் ஜவ்ஸி...

    'அல்லாஹ்விற்காக என்ற தூய நோக்கத்துடன் ஒரு செயலைச் செய்து முடித்த பிறகு ரியாவினால் பாதிப்பு ஏற்படும் போது, அதிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினமானது" நூல்: தல்பீஸ் இப்லீஸ்

    ஆனால், இதற்கு ஒரு விதிவிலக்கு உள்ளது. ஒருமனிதர் தனது உள்ளம் ரியாவினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து, அந்த எண்ணத்தை உள்ளத்திலிருந்து அகற்றும் முயற்சியில் வெற்றி பெற்று, மீண்டும் தூய்மையான எண்ணத்தைத் தனது உள்ளத்தில் குடிகொள்ள வைக்கலாம். இதன் பயனாக தற்காலிகமாக ஏற்பட்ட ரியாவினால் அவருக்குாிய கூலியில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. ஏனெனில் அம்மனிதர் தனது உள்ளத்தில் ஏற்படும் ஊசலாட்டங்களுக்குப் பலியாவதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொண்டார். ஷைத்தானின் ஊசலாட்டங்களிலிருந்து தங்களைத் தறகாத்துக் கொண்ட நம்பிக்கையாளர்களை இறைவன் திருக்குர்ஆனில் பின்வருமாறு புகழ்கிறான்.

    (இறைவனை) அஞ்சுவோர்க்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாகாித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள். (திருக்குர்ஆன் 7:201)

    புகழப்படும் போது மனம் சஞ்சலமடைவது நம்பிக்கையாளர்களின் பண்புகளில் ஒன்றாகும். ஏனெனில், இப்படிப் புகழப்படுவது தனது தூய எண்ணத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதை அவர் நன்கு உணர்கிறார். எனவே, தூய்மையான எண்ணத்துடன் நற்செயல்களைப் புரிவோம். அது முடிந்த பிறகும் தூய்மையான எண்ணத்தை மனதில் தேக்கி வைப்போம். புகழுக்கும், பெருமிதத்திற்கும் ஆட்பட்டு நற்செயல்களை விழலுக்கு இரைத்த நீராக மாற்றி அதன் பயன்கள் முழுமையாக வந்து சேராமல் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்ப்போம்.

    2. செயல்களின் அடிப்படையில் எழும் ரியா
    ரியா எவ்வாறு செயல் வடிவம் பெறுகின்து என்பதின் அடிப்படையிலும் ரியாவை வகைப்படுத்தலாம். உடலின் ஒவ்வொரு பாகமும் வெளியுதவியைப் பெற்றோ, பெறாமலோ ரியாவில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. சில வகை ரியாக்களின் உதாரணங்கள் கீழே விவாிக்கப்படுகின்றன.

    அ. முழு உடலும் ரியாவில் ஈடுபடுவது
    தொழுகையின் போது அல்லது தர்மம் கொடுக்கும் போது ஏற்படும் ரியா இந்த வகைக்கு உதாரணங்களாகும். இந்த வகை தான் பெரும்பாலும் ரியா என்று பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

    மிக அற்பமான செயல்பாடுகள் கூட ரியாவாக மாறி விடும். ஒரு முறை ஹஸன் பஸாி அவர்கள் உள்ளத்தை உருக்கும் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்த ஒருவர், அந்த சொற்பொழிவு தனக்கு மறுமை பற்றி கவலையைத் தந்து விட்டது என்பதை வெளிக்காட்டும் விதமாக பெருமூச்சு விட்டார். அப்போது ஹஸன் அவாிடம் இந்த பெருமூச்சு அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்துடன் இருக்குமானால் பிறாின் கவனத்தை நீர் கவரும் வகையில் அமைந்து விட்டது. அது அல்லாஹ்விற்காக என்ற எண்ணமில்லாமல் இருக்குமானால், உமக்கு நீர் அழிவைத் தேடிக் கொண்டீர் என்று கூறினார்.
ஆதாரம்: தல்பீPஸ் இப்லீஸ் (பக்கம் 332)

    ஆக மிக அற்பமான இந்த செயல் கூட இது உருவாவதற்கான இரண்டு வகையான காரணங்களுக்காகவும் கண்டிக்கப்பட்டுள்ளது.

    ஆ. மேடைப்பேச்சு
    சொற்பொழிவாளர்களிடையே இந்த வகையான ரியா பொதுவாகக் காணப்படுகிறது. தனது சொற்பொழிவைக் கேட்கும் மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல், அவர்களுக்கு நேரான வழியைக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் கொள்ளாமல், மற்றவர்களைத் தங்கள் சொல் நயத்தால் கவர வேண்டும் என்ற குறிக்கோளுடனும் சமுதாயத்தில் தங்களுக்குப் பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என்ற ஆடையுடன் தான் சிலர் மார்க்க சொற்பொழிவாளர்களாக வலம் வருகின்றார்கள்.

    நன்மையைச் செய்யும் படியும், தீமையை விட்டு விலகியிருக்கும் படியும் சிலர் அடிக்கடி தங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களிடமும், நண்பர்களிடமும் போதனை செய்து கொண்டிருப்பார்கள். இவ்வாறு அவர் செய்வது இஸ்லாமியப் பண்புகளைப் பரப்ப வேண்டும் என்பதற்காக அல்ல. தான் ஒரு பக்திமான் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காகத் தான் அந்தமனிதர் இப்படி நடந்து கொள்கிறார். இந்தமனிதர் எப்போதும் இஸ்லாம் பற்றியும், சுவர்க்கம் பற்றியும், நரகம் பற்றியுமே பேசிக் கொண்டிருப்பார்கள். எந்தக் கூட்டத்திற்குச் சென்றாலும், யாாிடம் பேசுகிறார்களோ அவர்களைப் பற்றி உண்மையாக அக்கறை சிறிதளவும் அவர்கள் உள்ளத்தில் இருக்காது. சமுதாயத்தில் தனது கவுரவத்தை நிலை நாட்டிக் கொள்ள வேண்டும் என்பது தான் அவரது ஒரே குறிக்கோள்.

    ரியாவின் இந்த வடிவம் மிகவும் நுணுக்கமானது. தன்னைத் தானே குறை சொல்லிக் கொள்வதும் கூட சில சமயங்களில் ரியாவாக மாறிவிடும். இப்னு ரஜப் அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு திரை மறைவான செயலை இங்கே குறிப்பிடுவது அவசியமாகும். ஒருமனிதர் பொது இடத்தில் தன்னைத் தானே குறை சொல்லும் வகையில் விமர்சித்துக் கொண்டார். மக்கள் தன்னை அடக்கமானவன் என்றும், எளிமையானவன் என்றும் எண்ணி தன்னைப் புகழ வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு நடந்து கொண்டார். இது ரியாவின் மிக நுட்பமான வடிவமாகும். இஸ்லாமிய அறிஞர்கள் இவ்வகை ரியா குறித்து எச்சாிக்கை செய்துள்ளார்கள். மத்தாிப் பின் அப்துல்லா அவர்கள் கூறுகிறார்கள்:

    'தன்னைத் தானே புகழ்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் பொது இடத்தில் தன்னைத் தானே குறை சொல்லிக் கொள்ளும் சூழலை ஏற்படுத்தும் இத்தகைய நடவடிக்கை அல்லாஹ்வின் பார்வையில் ஏமாற்று வித்தையாகத் தான் உள்ளது"


    சொற்பபொழிவு தொடர்பான ரியா, பத்திாிகை மற்றும் நூல்களில் எழுதப்படும் எழுத்துக்களுக்கும் பொருந்தும். தனது கவுரவத்தை நிலை நாட்டிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் ஒருவர் மார்க்கம் தொடர்பான விஷயங்களை எழுதலாம். இது போல் மக்களைக் கவரும் நோக்கத்திற்காகக் கவர்ச்சியான முறையில் திருக்குர்ஆன் ஓதுவதும் ரியாவில் சேரும். இந்த வகையான ரியா 'சும்ஆ" என்றும் அழைக்கப்படுகிறது.

    இப்னு அல் ஜவ்ஸி கூறுகிறார்கள்.... 'அதிக அறிவு வளமுடையமனிதர்கள் பலரை ஷைத்தான் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளான். இவர்கள் நாள் முழுவதும் புத்தகங்களை எழுதுவதில் கழிப்பார்கள். இந்தப் பணியை இஸ்லாத்திற்காகத் தான் செய்கிறோம் என்ற எண்ணத்தை ஷைத்தான் அவர்கள் உள்ளத்தில் விதைக்கிறான். ஆனால் அவர்கள் புகழ் பெற வேண்டும். மக்களிடம் செல்வாக்குப் பெற வேண்டும்என்பதற்காக மட்டுமே இப்பணியைச் செய்கிறார்கள்.

    ஷைத்தானின் இந்தப் பொறியிலிருந்து தப்புவதற்கு ஒரு வழி உள்ளது. தனது பெயர் இல்லாமல் தனது அறிவு பரப்பப்படுவதைக் கண்டு ஒருவர் திருப்தியடைந்தால் அல்லது இன்னொருவர் மூலம் தனது அறிவு பரப்பப்படுவதைக் கண்டு ஒருவர் அவர் ஆனந்தம் கொண்டால் ஷைத்தானின் வலையில் விழவில்லை என்று பொருள். தூய்மையான எண்ணத்துடன் அறிவைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் இவ்வாறு மகிழ்ச்சியடைவார்கள். இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் தொிவிக்கிறார்கள். 'மக்களுக்குப் பயன்படக் கூடிய ஆனால் என்னுடன் இணைத்துப் பார்க்கப்படாத அறிவைத் தவிர வேறு எதனையும் படிக்கக் கூடாது என்பதே எனது விருப்பம்" ஆதாரம்: தல்பீஸ் இப்லீஸ்

    இ. தோற்றம்
    மிக எளிமையான துணிகளை அணிந்து, பரட்டையாகத் தோற்றமளிப்பதும் ரியாவில் சேரலாம். மறுமையைத் தவிர தனக்கு வேறு எதிலும் நாட்டம் இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒருவர் இத்தகைய ரியாவில் ஈடுபடலாம். ஒருமனிதர்மற்றவர்களைக் கவர்வதற்காக கண்கவரும் ஆடைகளை அணியலாம். அறிஞர் என்று அடையாளப்படுத்தும் ஆடைகளையும் அவர் அணியலாம்.  மக்கள் தன்னை அறிஞர் என்று அடையாளம் காண்பதற்காகத் தான் இவர் இவ்வாறு ஆடையணிகிறார். இந்த இரண்டு வகையான நடத்தைகளும் நல்ல முஸ்லிமின் பண்புகளுக்கு முரணாகும். ஒரு மனிதனுக்கு நல்ல ஆடைகளை அணியும் வசதியிருக்குமேயானால் அவர் வீண் பகட்டைத் தவித்து நல்ல ஆடைகளை அணிந்து அல்லாஹ் அவருக்கு வழங்கியுள்ள வளங்களை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அவர் மேலே விவாித்த நோக்கங்களுக்காக ஆடை அணிந்தால் அது ரியாவில் முடிவடைந்து விடும். ஒரு மனிதருக்கு நல்ல ஆடை அணிய வசதியில்லை என்றால் அவரது வசதிக்கேற்ப அவர் ஆடை அணிந்து கொள்ளலாம்.

    அல்லாஹ் நயவஞ்சகர்களின் வெளிப்புறத் தோற்றத்தையும், அவர்களின் உள்மனதையும் ஒப்பிட்டு பின் வருமாறு திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

    (முஹம்மதே!) நீர் அவர்களைக் காணும் போது அவர்களின் உடல்கள் உம்மை வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் பேசினால் அவர்களது பேச்சை நீர் செவியேற்பீர். அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டை போல் உள்ளனர். ஒவ்வொரு பெரும் சப்தத்தையும் அவர்கள் தமக்கு எதிரானதாகவே கருதுகிறார்கள். அவர்கள் தாம் எதிாிகள். எனவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அவர்களை அல்லாஹ் அழிப்பான். அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?
(திருக்குர்ஆன் 63:4)

    இப்னு அல் ஜவ்ஸி கூறுகிறார்கள்: 'உலக இன்பங்கள் வெறுத்து வாழ்வதாகக் கூறிக் கொள்ளும் சூஃபிகளில் சிலர் கிழிந்த ஆடைகளை அணிந்து கொள்வார்கள். சட்டைகளில் விழும் ஓட்டைகளை அவர்கள் தைக்க மாட்டார்கள். அவர்கள் தலைப்பாகைகளையும் சரியாகக் கட்ட மாட்டார்கள். தாடிகளையும் சரியாக வாாிக்கொள்ள மாட்டார்கள். இந்த உலகத்தை மிக அற்பமாக அவர்கள் கருதுவதாக மக்கள் எண்ண வேண்டும் என்பதற்காகத் தான் அவர்கள் இந்தக் கோலத்தில் காட்சி தருகிறார்கள். இந்த நடத்தை ரியாவின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். நபிகள் நாயகம் அவர்களோ, அவர்களது தோழர்களோ இவ்வாறு நடந்துகொண்டதில்லை. நபிகள் நாயகம்  அவர்கள் தமது ரோமங்களுக்கு எண்ணெய் இட்டு, அதனை வாாி, நறுமணமும், பூசிக் கொள்வார்கள். இருப்பினும் அவர்களை விட மறுமையைப் பற்றிய அச்சம் கொண்டவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது"

    ஈ. சகாக்களும், தோழர்களும்
    தோழமையும், நட்பும் கொள்வது கூட சிலச் சூழல்களில் ரியாவில் முடிந்து விடும். உதாரணமாக ஒரு அறிஞாின் மாணவர் என தான் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதற்காக அந்த அறிஞருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். அல்லது இறையச்சமுடைய ஒருவருடன் தான் எப்போதும் காணப்படுவர் என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காக அந்த பக்திமானுடன் அவர் நட்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். இதுவும் ரியாவின் வகையில் சேர்ந்தது.

    நட்பு கொள்வதற்கான ஒரே உண்மையான காரணம் அல்லாஹ்விற்காக என்று மட்டுமே இருக்க வேண்டும். மக்களிடம் பகட்டுக்காட்ட வேண்டும் என்பதற்காக இல்லாமல் அல்லாஹ்விற்காக மட்டுமே என்ற எண்ணத்துடன் தான் இறையச்சமுடையவர்களுடன், அறிவுடையவர்களுடன் தொடர்பும் நட்பும் கொள்ள வேண்டும்.

    உ. குடும்பம்
    தங்கள் குழந்தைகள் மார்க்க அறிவுடையவர்களாக இஸ்லாத்தைத் தம் வாழ்வில் கடைபிடிப்பவர்களாக உருவாக வேண்டும் என்பது தான் ஏராளமான பெற்றோர்களின் எண்ணமாகவுள்ளது. ஒவ்வொரு முஸ்லிம் பெற்றோாிடமும் இத்தகைய எண்ணம் இருப்பது மிக அவசியமானதாகும். ஆனால் அல்லாஹ்விற்காக இவ்வாறு குழந்தைகளை உருவாக்கி வருகிறோம் என்ற எண்ணத்துடன் இருப்பது மிக அவசியமாகும்.

இதற்கு உதாரணமாக சில செயல்களை குறிப்பிடலாம்...

சில பெற்றோர்கள் பொது இடங்களில் வைத்து 'எனது மகன் இத்தனை திருக்குர்ஆன் வசனங்கள் மனனம் செய்து விட்டான், என் மகன் இஸ்லாமியச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி விட்டான்'" என்று பெருமையாகப் பேசலாம். இவ்வாறு பெருமையாகப் பேச வேண்டும் என்பதற்காக குழந்தைகளை இஸ்லாமிய வார்ப்பில் உருவாக்கினால் இதுவும் ரியாவில் சேரும். அல்லாஹ்விற்காக மட்டுமே என்ற எண்ணத்துடன் தான் தங்கள் குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவைப் போதிக்க வேண்டும். தங்கள் குழந்தைகளின் சாதனைகளைக் கண்டு அவர்கள் அல்லாஹ்விற்கே நன்றி தொிவிக்க வேண்டும். தங்கள் குழந்தைகளைப் பற்றி பிறாிடம் கூற வேண்டும் என்றாலும் அது குறித்து பகட்டோ, பெருமையோ கொள்ளக் கூடாது. மற்ற பெற்றோர்களுக்கும் உத்வேகம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இத்தகைய தகவல்களை அளிக்கலாம். குழந்தைகள் பற்றிய இந்த விஷயம் துணைவர்களுக்கும், இதர குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும்

    ரியா தொடர்பான இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. ஆனால் அவற்றை விவாிக்க இடமில்லை. நபிகள் நாயகம் அவர்கள் கூறியிருப்பது போல் எறும்பு ஊர்ந்து செல்வதை விட மறைவானது ரியா. சரியான எண்ணத்துடன் செய்யப்படாவிட்டால் மிக அற்பமான, அப்பாவித்தனமான செயல்கள் கூட ரியாவில் முடிவடைந்து விடும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட நாம் கடமைப்பட்டுள்ளோம்.


ரியாவாக கருதப்படாத செயல்கள்!   ...
இன்ஷா அல்லாஹ்  - அல்லாஹ்  நாடினால்   >>>>>>>>  தொடரும்

0 comments: