அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Friday, 28 August 2015

‘ரியா’ மறைவான இணைவைப்பு- பாகம் 6

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
ரியாவாக கருதப்படாத செயல்கள்!  
1. உள்நோக்கம் இல்லாத பாராட்டுரைகள்
    நல்ல செயல் செய்வோரை மக்கள் பாராட்டுவது சகஜமான நிகழ்வாகும். உதாரணமாக தங்களுக்கு மிகவும் பயன் தரும் ஒரு உரையைக் கேட்ட பிறகு. அதனை ஆற்றியவரைக் கண்டு பாராட்டி நன்றி சொல்வது சாதாரணமாக நடைமுறையில் உள்ளது. உரையாற்றிய சொற்பொழிவாளர் அல்லாஹ்விடம் நற்கூலி பெற வேண்டும் என்ற ஒரே எண்ணமுடையவராக இருந்தால், அவரது உரைக்கு மக்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டுரைகளினால் அவரது தூய்மையான எண்ணத்தில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்தாது. எனவே, இது போன்ற பாராட்டுரைகளால் அம்மனிதாின் நற்செயல்களுக்கு களங்கம் ஏற்படாது.
அபூதர் கிஃப்பாாி (ரலி) என்ற நபித்தோழர் அண்ணல் நபி அவர்களிடம் பின்வரும் கேள்வியை எழுப்பினார்கள்.

    'அல்லாஹ்வின் தூதரே! நல்ல செயல் செய்ததால், மக்களிடம் பாராட்டு பெறும் மனிதரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நபிகள் நாயகம் அவர்கள் இதற்கு பதிலாக, 'இது இந்ந நல்லடியாருக்கு (மறுமையில் காத்துக் கொண்டிருக்கும்) அருள்களின் ஒரு அடையாளமாகவும், அதன் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது" என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஸ்லிம்

    இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், தொடர்ச்சியாக அல்லாஹ்வை மட்டுமே திருப்திபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நிலை மாறாமல் இருந்து வரும் நல்லடியார்களுக்குத் தான் இது பொருந்தும். உண்மையான நல்லடியார் மக்களின் பாராட்டுகளைத் தவிர்த்துக் கொள்ள முயலுவார்கள். இவை தமது தூய நோக்கத்தைப் பாழ்படுத்தி விடும் என்று அவர்கள் கருதுவது தான் இதற்குக் காரணமாகும்.

    மகிழ்ச்சி கொள்வதற்கும், பெருமை கொள்வதற்குமிடையேயான வேறுபாட்டை நாம் கவனிக்க வேண்டும். புகழப்படும் போது மகிழ்ச்சி அடைவதை மனிதனால் சுயமாகக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது. இத்தகைய உணர்வைப் பெறுவது தவறில்லை. ஆனால், இந்த உணர்வை கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்வது மிக அவசியமாகும். ஏனெனில், இந்த உணர்வு மிக எளிதில் பெருமை கொள்ள வைத்து இறுதியில் ரியாவில் ஆழ்த்தி விடக் கூடும். ஆனால், ஒரு நல்லடியார், மகிழ்ச்சி தந்த இந்த உணர்வின் விளைவாக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி விட்டு, இதனை விட அதிகமான நல்லருளை தன் மீது பொழியுமாறு இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் விரும்பத்தக்க சூழலும் ஏற்படலாம்.

    மீண்டும் நாம் தொடக்கத்தில் பார்த்த உதாரணத்திற்குச் செல்வோம். மக்களின் உள்ளங்களை மிகப் பெரும் அளவில் உருக வைத்து, அவர்களை அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் மிக நெருக்கமாக்கும் ஒரு உரையை ஒரு மனிதர் ஆற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இதன் காரணமாக உரையைக் கேட்ட மக்கள் அந்த சொற்பொழிவாளரை மிகவும் பாராட்டுகின்றார்கள். இந்த நிலையை அனுபவிக்கும் அந்த சொற்பொழிவாளர் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னொரு பக்கம், ஏராளமான மக்களை நல்வழிப்படுத்தத் தனக்கு வழிகாட்டியதின் மூலம் அல்லாஹ் தனக்கு அருள் பொழிகின்றான் என்று உணர்ந்து கொள்வார். இந்த உணர்வின் காரணமாக அவர் அல்லாஹ்விற்கு மென்மேலும் நன்றி செலுத்துவார். ஆனால், இதே நிலையை அனுபவிக்கும், இறையுணர்வு குன்றிய அடியார் அல்லது நயவஞ்சகர் தனக்கு கிடைக்கும் பாராட்டு மழையில் சொக்கிப் போய், பெருமை கொண்டு தனக்குக் கிடைத்துள்ள புகழ் நியாயமானது தான் என்று எண்ணி, அல்லாஹ்வின் உதவியின்றி தான் பெரும் சாதனை நிகழ்த்தி விட்டதாக பெருமிதத்தில் ஆழ்ந்து விடுவார். மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உரையை ஆற்றுவதற்கு அல்லாஹ் தான் வழி வகுத்துக் கொடுத்தான் என்பதை அவர் மறந்து விடுவார்.

    ஒரு மனிதரை அவரது முன்னிலையில் புகழ்வது தவிர்க்கப்பட வேண்டிய செயல். அது உள்ளத்தில் மிக எளிதாக தற்பெருமையை ஏற்படுத்தி விடும்.

    அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள். 'மனிதர்களை அவர்களது முகத்திற்கு முன்பு புகழ்பவர்களை நீஙகள் காணும் போது அவர்கள் முகத்தில் புழுதியை வாாி வீசுங்கள்."ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத்

    இன்னொரு சந்தர்ப்பத்தில் தனது நண்பரைப் புகழ்ந்து கொண்டிருந்த ஒரு மனிதரைத் தாண்டி நபிகள் நாயகம்  அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அண்ணல் நபி பின்வருமாறு கூறியதாக அபூபக்கர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

    'உன் மீது கேடு உண்டாகட்டும். உனது நண்பனின் கழுத்தை நீ முறித்து விட்டாய். உனது நண்பனின் கழுத்தை நீ முறித்து விட்டாய். ஒரு மனிதரை பாராட்டுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலையை உங்களில் ஒருவர் எதிர் நோக்கும் போது, அவர் இப்படிச் சொல்ல வேண்டும். நான் இன்னார் இப்படியானவர் என்று கருதுகிறேன். அல்லாஹ் தான் அவரைப் பற்றி தீர்ப்பு அளிக்க வேண்டும். அல்லாஹ் விடத்தில் அவரது தூய்மை எப்படியிருக்கும் என்று என்னால் கூற இயலாது" ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத்

    ஒரு மனிதரை நாம் புகழும் போது அவர் அப்புகழுக்குத் தகுதியானவரா என்பதை அல்லாஹ் தான் நன்கறிவான். எனவே தான் அம்மனிதரை அவரது முன்னிலையில் புகழும் சூழல் ஏற்பட்டால், தான் கூறியவாறு பாராட்டுமாறு அண்ணல் நபி அறிவுறுத்தியுள்ளார்கள்.

    2. நல்ல தோற்றம்
    மக்களைக் கவர வேண்டும் என்ற எண்ணத்துடன் நல்ல ஆடைகளை அணிவது ரியாவில் சேரும் என்று முன்பு நாம் கண்டோம். ஆனால், இதற்கு மாறாக அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமென்பதற்காக நல்ல ஆடைகளை அணிவது ரியா ஆகாது.

    அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்...
    அணுவளவு எடையுள்ள பெருமையைத் தனது மனில் கொண்ட மனிதன் சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதைக் கேட்ட ஒருமனிதர், 'நல்ல ஆடைகளையும், காலணிகளையும் அணிய மனிதன் விரும்புகிறானே" என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த அண்ணல் நபி அவர்கள், 'அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை நிராகாித்து, மற்றவர்களை ஏளனமாகப் பார்ப்பது" என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத்
எனவே அழகான ஆடையை அணிவது நபிகளாாின் வழிமுறையின் ஒரு பகுதியாகும்.

    3. மற்றவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் கூறுதல்
    தாங்களே சில பாவங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் போது, மற்றவர்களுக்கு நல்ல ஆலோசனைகளைச் சொல்வதை சில முஸ்லிம்கள் ரியாவாக கருதுகின்றார்கள். 'நானே அத்தகைய பாவத்தைச் செய்யும் போது, மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதற்கு எனக்கு என்ன தகுதியுள்ளது" என்று சிலர் தம்மைத் தாமே கேட்டுக் கொள்கிறார்கள்.

பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை அவர்கள் இதற்குச் சான்றாக எடுத்துக் கொள்கிறார்கள்.

    நீங்கள் வேதத்தை ஓதிக் கொண்டே உங்களை மறந்து விட்டு மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (திருக்குர்ஆன் 2:44)

    ஆனால் இந்த வசனம், மற்றவர்களை நன்மை செய்யுமாறு ஏவும் போது, தங்கள் நிலையையும் கவனத்தில் கொள்வதற்குத் தான் ஊக்கம் அளிக்கின்றது. நன்மையைச் செய்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே, மற்றவர்களை நன்மையின் பால் அழைக்க வேண்டும் என்று எண்ணுவது, நல்லதைச் செய்ய நினைக்கும் ஒரு மனிதரைத் தடுக்கும் ஷைத்தானின் சதியாகும்.

    ஒருமனிதர் பாவங்களைச் செய்து கொண்டிருந்தாலும், மற்றவர்களுக்கு எது, தீமை எது என்று சுட்டிக் காட்டும் கடமை அவருக்குள்ளது. இப்பணியை அவர் செய்ய மறுத்தால், அவர் தன் மீது இன்னொரு பாவத்தைத் திணித்துக் கொள்கிறார் என்றே பொருள்.

    இப்னு அல் ஜவ்ஸி கூறுகின்றார்கள்:
    'பக்திமானாக இருக்கும் தொழுகையாளிகளில் ஏராளமானோரை ஷைத்தான் குழப்பியுள்ளான். இதன் விளைவாக ஒரு தீமையைப் பார்க்கும் போது, அதற்கெதிராக அவர்கள் பேசுவதில்லை. இறையச்சம் நிரம்பி வழியும் மனமுடைய மனிதர்கள் தான் மற்றவர்களுக்கு போதனை செய்து, தீமைகளுக்கு எதிராகப் பேசலாம். இறையச்சமுடையவனாக நான் இல்லாத போது, மற்றவர்களுக்கு நான் எப்படிப் போதிக்க முடியும் என்று இந்தத் தொழுகையாளிகள் தங்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொள்கிறார்கள்.

    இத்தகைய போக்கு தவறானதாகும். நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் பணி ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் தீமை செய்து கொண்டிருந்தாலும், இப்பொறுப்பு அவர்களை விட்டு நீங்காது." நூல்: தல்பீஸ் இப்லீஸ், பக்கம் 188

    4. தனது பாவங்களை மறைத்துக் கொள்ளுதல்
    மேலே நாம் கண்ட வகையைப் போன்ற இன்னொரு வகை தான் இது. தனது பாவங்களை மறைத்துக் கொள்ளுவது நயவஞ்சகச்செயலாகும் என்று சிலர் எண்ணுகிறார்கள். பாவம் செய்யும் மனிதன் தனது நடத்தையை வெளிக்காட்ட வேண்டுமென்றும் சிலர் கருதுகிறார்கள். இத்தகைய எண்ணமும் ஷைத்தானின் தூண்டுதலால் எழக் கூடியது தான்.

ஒருமனிதர் தனது பாவங்களைத் தனக்கும், தனது இறைவனுக்குமிடையே தான் வைத்துக் கொள்ள வேண்டும். தனது பாவச் செயல்களைப் பகிரங்கப்படுத்தாமல், தன்னைத் திருத்திக் கொள்ள அவர் முயல வேண்டும்.

    அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

    'தனது பாவங்களைப் பகிரங்கப்படுத்துவோரைத் தவிர எனது சமுதாயத்தவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும். இரவில் ஒருமனிதர் பாவம் செய்து, அல்லாஹ் அதனைமனிதர்களிடமிருந்து மறைத்து விட்ட பிறகு இந்த மனிதர் மறுநாள் காலை 'நேற்று இரவு, நான் இன்ன செயலைச் செய்து விட்டேன்" என்று அறிவிக்கிறார். அல்லாஹ் அவரது பாவத்தை மறைத்திருந்த போதிலும், இம்மனிதர் தனக்கு அல்லாஹ் போர்த்திய, திரையை அப்புறப்படுத்தியவராவார்" நூல்: புகாாி, முஸ்லிம்

    ஒருவர் தனது பாவங்களைப் பகிரங்கப்படுத்தும் போது, அதே போன்ற பாவங்களைச் செய்ய மற்றவர்களுக்கு அது தூண்டுகோலாக அமையக் கூடும். குறைந்த பட்சம், அம்மனிதர் சமுதாயத்தில் தீமைகளைப் பரப்பி விடுபவர் ஆகிறார்.

    நம்பிக்கை கொண்டவர்களே! ஷைத்தானின் அடிச் சுவடுகள் நீங்கள் பின்பற்றாதீர்கள். யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ (அவர் வழி கெடுவார். ஏனெனில்) அவன் மானக்கேடானவைகளையும் தீமைகளையும் ஏவுகிறான். அல்லாஹ்வின் அருளும் அன்பும் உங்கள் மீது இல்லாதிருந்தால் ஒரு போதும் உங்களில் எவரையும் அவன் பாிசுத்தமாக்கியிருக்க மாட்டான். எனினும் அல்லாஹ் நாடியவர்களைப் பாிசுத்தமாக்குகிறான். அல்லாஹ் அறிந்தவன். செவியுறுபவன்.(திருக்குர்ஆன் 24:19,20,21)

    ஒருமனிதர் ரகசியமாக எத்தனை பாவங்களை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பது இதற்குப் பொருள் அல்ல. பாவத்தை மறைப்பதை விட, பகிரங்கப்படுத்துவது பொிய தீமையாகும். உண்மையில், நமது பாவங்களை மறைத்துக் கொள்வது பாவம் அல்ல. நாம் பாவத்தை மறைத்துக் கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளோம்.

    அண்ணல் நபி அவர்கள் கூறியதாக உஸாமா பின் ஷரீக் அறிவிக்கிறார்கள்.
    'மற்றவர்கள் பார்க்க விரும்பாத பாவங்களை நீங்கள் தனிமையில் இருக்கும் போது கூட செய்யாதீர்கள்" நூல்: சஹீஹ் இப்னு ஹப்பான், சஹீஹ் அல் ஜாமியில் ஆதாரப்பூர்வமானது என்று கூறப்பட்டுள்ளது.

    5. பயபக்தியுடையோர்களுடன் சேர்ந்து இருக்கும் போது, நற்செயல்களை அதிகாித்துக் கொள்ளுதல்.
தன்னை விட பயபக்தியுடைய, அறிவாற்றலுடைய நபர்களுடன சேர்ந்து இருக்கும் போது, ஒரு மனிதாின் நடவடிக்கைகள் மாறுபடுவது இயற்கையானதே. உதாரணமாக: இம்மனிதருடன் இருக்கும் பயபக்தியுடையோர் தஹஜ்ஜத் தொழுகையைத் தொழக்கூடும். இதனைக் காணும் இம்மனிதர் அப்பழக்கம் இல்லாதவராக இருப்பினும், அவர்களுடன் சேர்ந்து இவரும் தஹஜ்ஜத் தொழக்கூடும்.

    இது போன்ற செயல்கள், தானும் பயபக்தியுடையவன் தான் என்று மற்றவர்களுக்குக் காட்டும் நோக்கமில்லாமல் அல்லாஹ்விற்காக என்ற தூய நோக்கத்துடன் நிறைவேற்றப்படுமாயின் இதனை ரியாவாகக் கருத முடியாது.

    அண்ணல் நபி அவர்கள் பயபக்தியுடையவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.பயபக்தியுடையவர்களை வாசனைத் திரவிய வியாபாாிகளுடன் அண்ணல் நபி அவர்கள் பின்வரும் நபிமொழியில் ஒப்பிட்டுள்ளார்கள்.

    'நல்ல நண்பர்களுக்கும், தீய நண்பர்களுக்கும் இடையேயான வேறுபாடு வாசனைத் திரவிய வியாபாாிக்கும், இரும்புக் கொல்லருக்கும் இடையேயான வேறுபாட்டைப் போன்றதாகும். வாசனைத் திரவிய வியாபாரியால் உங்களுக்குத் தீங்கு ஏற்படாது. அவாிடமிருந்து சில வாசனைத் திரவியத்தை நீங்கள் வாங்கிக் கொள்வீர்கள். அல்லது நல்ல வாசனையை நீங்கள் நுகர்ந்து கொள்வீர்கள். ஆனால் இரும்புக் கொல்லாின் சகவாசத்தால் நீங்கள் உங்கள் உடலை அல்லது உங்கள் ஆடைகளை சுட்டுக் கொள்வீர்கள். அல்லது (குறைந்த பட்சம்) துர்நாற்றம் உங்களைப் பீடித்துக் கொள்ளும்." நூல்: புகாாி, முஸ்லிம், அபூதாவூத்

    பயபக்தியுடையவர்களுடன் சேர்ந்து இருக்கும் போது செய்யப்பட்ட நற்காாியம் தூய்மையானது: ரியா அல்ல என்பதற்கான ஒரு அடையாளம், அந்நற்செயலைப் பிறகு தனிமையிலும் தொடர்ந்து செய்வதாகும்.

    6. மார்க்க வழிபாடும், உலக நன்மைகளும்
    சிலர் ரியாவின் கோட்பாட்டை சரியான முறையில் விளங்கிக் கொள்வதில்லை. இதன் விளைவாக அல்லாஹ்விற்காகவும், ஒரு சில உலக நன்மைக்காகவும் செய்யப்பட்ட செயலை 'ரியா" என்று குறிப்பிட்டு விடுகிறார்கள். ஆனால் உண்மை இதுவல்ல. மார்க்க ரீதியான ஒரு செயலைச் செய்யும் போது அதனால் விளையும் சில உலக நன்மைகளுக்கும், அல்லாஹ்விற்காக என்ற நோக்கம் இல்லாமல் செய்யப்படும் செயல்களுக்கும் வேறுபாடு உண்டு என்பது வெளிப்படையான விஷயம் ஆகும்.

    முதலில் குறிப்பிட்ட செயலில் ஒருமனிதர் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற வேண்டும் என்று கருதியே செயலில் ஈடுபடுகிறார். அதே நேரத்தில் அல்லாஹ்வின் அருட்கொடைகள் இவ்வுலகிலும் தனக்குக் கிடைக்க வேண்டுமென்றும் அவர் விரும்புகிறார்.
ஆனால் இரண்டாவதாக குறிப்பிட்ட செயலில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற வேண்டும் என்ற எண்ணம் மிகச் சிறிய அளவில் அல்லது முற்றிலும் அந்த எண்ணம் இல்லாத நிலையில் அம்மனிதார் அச்செயலில் இறங்குவதுடன், அந்த மார்க்கச் செயலில் வரும் உலக இலாபங்களை மட்டுமே அவர் நாடுகிறார்.
உதாரணமாக புனித யாத்திரை செல்வோர் வர்த்தக மற்றும் உலக நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்று இறைவன் அனுமதி அளித்துள்ளான். திருக்குர்ஆன் கூறுகின்றது.

    (ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை. அரபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும் போது மஷ்அருள் ஹராம் எனுமிடத்தில் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்! அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினைவு கூருங்கள்! நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழி தவறியவர்களாக இருந்தீர்கள். (திருக்குர்ஆன் 2:198)

    கட்டாயக் கடமையில் ஒன்றான ஹஜ் கடமையின் போதே வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று அல்லாஹ் அனுமதித்திருக்கும் போது, உபரியான மார்க்க நடவடிக்கைகளின் போது, அல்லாஹ்வின் அருட் கொடைகளை நாடுவதை அல்லாஹ் எப்படித் தடுத்திருக்க இயலும்? ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் வர்த்தகர் அல்லாஹ்விற்காக ஹஜ் செய்யப் போகிறோம் என்ற எண்ணத்தையும், கூடவே வர்த்தகமும் சேர்ந்து செய்யப் போகிறோம் என்ற எண்ணமும் கொண்டிருக்க வேண்டும். இது எந்த வகையிலும் அவரது ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படுவதைப் பாதிக்காது.

    இஸ்லாமிய அறிவைப் போதிக்கும் அதே வேளையில் அதற்காக ஊதியம் அல்லது உதவித் தொகை பெறுவோரும் இந்த வகையில் தான் சேர்வார்கள். முஸ்லிம்களின் நன்மைக்காகத் தான் அறிஞர்கள் மக்களுக்குக் கல்வியைப் போதிக்கிறார்கள். இதனால்அவர்களுக்கு உலகியல் ரீதியான பயன் எதுவும் கிடைக்காவிட்டால், அவர்கள் கல்வி கற்பித்தலை விட்டு, தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் ஜீவாதாரத்தைத் தேட வேறு வழியைத் தேடிச் சென்று விடுவார்கள். எனவே, இத்தகைய சேவைகளைச் செய்வோருக்கு உதவித் தொகை வழங்குவதில் தவறில்லை. ஆனால் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ்விற்காகவும், உலகப் பயனுக்காகவும் மார்க்க ரீதியான செயல்களில் ஈடுபடும் போது, அதற்குாிய வெகுமதி குறைந்து விடுகின்றது.

    அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

    'அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்த இராணுவத்தினருக்கு மறுமையில் மூன்றில் இரண்டு பங்கு வெகுமதி கிடைக்கும். போாில் கிடைத்த பொருட்களில் தங்கள் பங்கைப் பெறாதவருக்கு, மறுமையில் மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கும் சேர்ந்து கிடைத்தது அவர்களது வெகுமதி முழுமையடைந்து விடும்" நூல்: முஸ்லிம், அபூதாவூத்

    ஆனால் ஒருமனிதர் தனது மார்க்க ரீதியான செயல்களை அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் நோக்கமில்லாமல் அதற்கான வெகுமதியை உலகில் மட்டும் நாடுவாரேயானால், அல்லாஹ்விடமிருந்து இச்செயலுக்கு எவ்விதப் பயனும் கிடையாது.
ரியாவைத் தவிர்ப்பது எப்படி?   ...
இன்ஷா அல்லாஹ்  - அல்லாஹ்  நாடினால்   >>>>>>>>  தொடரும்

0 comments: